December 4, 2021

உண்மையை உரக்கச் சொல்லும் ஒரே நாளிதழ்

வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு ரத்து: தி.மு.க மீது பாயும் வன்னியர் அமைப்புகள்

வன்னியர் சமூகத்தினருக்கான 10.5 சதவிகித இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்ட விவகாரம், பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் அமைப்புகளிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. `இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதற்கு தமிழ்நாடு அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்’ என்கின்றன வன்னியர் அமைப்புகள்.

தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வன்னிய சமூக மக்களுக்கு 10.5 சதவிகித இடஒதுக்கீட்டை கடந்த பிப்ரவரி மாதம் அ.தி.மு.க அரசு அளித்தது. இந்த உத்தரவால் பாட்டாளி மக்கள் கட்சியும் பிற வன்னிய சமூக அமைப்புகளும் உற்சாகப்பட்டன. இதன்பிறகு தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, 10.5 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு அரசாணை பிறப்பிப்பதில் தி.மு.க அரசு தாமதம் செய்வதாகத் தகவல்கள் வெளியானது.

இதுதொடர்பாக, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தார். இதன் தொடர்ச்சியாக, 10.5 சதவிகித இடஒதுக்கீடு தொடர்பாக தமிழ்நாடு அரசு அரசாணையை வெளியிட்டது.

இந்நிலையில், 10.5 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் 25க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதிகள் எம்.துரைசாமி, கே.முரளிசங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது.

ரத்து செய்த நீதிமன்றம்

இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், ”சாதிவாரியான கணக்கெடுப்பை முறையாக நடத்திய பின்னரே இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும், அவ்வாறு முறையாக கணக்கெடுக்காமல் எப்படி இடஒதுக்கீட்டை வழங்க முடியும்? அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டே இந்தச் சட்டம் அவசரமாக இயற்றப்பட்டுள்ளது. இதனை இயற்றுவதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதா?” எனக் கேள்வியெழுப்பினர்.

”சாதி அடிப்படையில் இட ஒதுக்கீட்டினை வழங்க முடியுமா? இதுதொடர்பாக முறையான தரவுகள் இல்லாமல் இடஒதுக்கீட்டை வழங்க முடியுமா என்பன உள்பட ஏழு கேள்விகளை எழுப்பினோம். அதற்கு அரசு அளித்த விளக்கம் போதுமானதாக இல்லை. எனவே, வன்னியர் சமூகத்தினருக்கான இடஒதுக்கீடு செல்லாது” எனத் தெரிவித்துள்ளனர்.

http://www.hcmadras.tn.nic.in/mduhist.html
படக்குறிப்பு,சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை

நீதிபதிகளின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

இந்த உத்தரவு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், ”வன்னியர்களுக்கு 10.5 சதவிகித உள் இடஒதுக்கீடு வழங்கி இயற்றப்பட்ட சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில் இன்று தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.துரைசுவாமி, கே.முரளி சங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு, வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான 7 வினாக்களுக்கு அரசுத் தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கம் போதுமானதாக இல்லை என்று கூறி, வன்னியர் இட ஒதுக்கீட்டு சட்டம் செல்லாது என்று தீர்ப்பளித்திருக்கிறது.”

‘சமூகநீதிக்கு இழைக்கப்படும் தீங்கு’

”தமிழ்நாட்டில் இதுவரை வழங்கப்பட்ட இஸ்லாமியர்கள் உள் இடஒதுக்கீடு, அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு ஆகியவற்றுக்கு சென்னை உயர் நீதிமன்றமோ, உச்ச நீதிமன்றமோ தடை விதிக்காத நிலையில், வன்னியர்கள் உள் இடஒதுக்கீட்டுக்கு மட்டும் சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்கிறார் ராமதாஸ்.

மேலும், ”தமிழ்நாட்டில் 69 சதவிகித இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படுவதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப் பட்ட வழக்கிலும் இதே வாதங்களைத்தான் சமூகநீதிக்கு எதிரான சக்திகள் முன்வைத்தன. ஆனால், அந்த வழக்கில் 2010ஆம் ஆண்டு தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் அந்த வாதங்களை ஏற்றுக்கொள்ளவில்லை. 69 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் நிராகரித்துவிட்டது. ஆனால், இப்போது உயர் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டிருப்பது சமூகநீதிக்கு இழைக்கப்படும் பெரும் தீங்கு. வன்னியர்கள் உள் இட ஒதுக்கீட்டுச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு, அதன் அடிப்படையில் பல லட்சக்கணக்கான மாணவர்கள் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர்,” என்றார்.

மன உளைச்சலில் மாணவர்கள்?

Dr. S. Ramadoss

”பல்லாயிரக்கணக்கானோர் வேலைவாய்ப்பில் சேர்ந்துள்ளனர். அவர்களின் நலனையும் எதிர்காலத்தையும் கருத்தில் கொள்ளாமல் உயர்நீதிமன்றம் இப்படி ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. இதனால் அவர்கள் கடுமையான மன உளைச்சலுக்கும், பிற பாதிப்புகளுக்கும் ஆளாகியுள்ளனர். இத்தீர்ப்புக்கு எதிராக உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, அவர்களின் நலன்களையும் சமூகநீதியையும் பாதுகாக்க தமிழக அரசு போர்க்கால வேகத்தில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து பேசிய வன்னிய சத்திரியர் கூட்டு இயக்கத்தின் தலைவர் சி.ஆர்.ராஜன், வன்னிய உள்ஒதுக்கீடு செல்லாது எனவும் அரசியல் சட்டத்துக்கு முரணானது என்றும் உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, வேதனையையும் மனவருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தில் திறமைவாய்ந்த மூத்த வழக்கறிஞர்களை வைத்து இந்த வழக்கில் முறைப்படி தமிழக அரசு வாதம் செய்யவில்லை” என்கிறார்.

தி.மு.கவின் நாடகமா?

தொடர்ந்து பேசிய ராஜன், “இஸ்லாமியர் உள்ஒதுக்கீடு, அருந்ததியர் உள் ஒதுக்கீடு ஆகியவை செல்லும் என்றால், அதே அடிப்படையில் நிறைவேற்றப்பட்ட வன்னியருக்கான MBC (V) மட்டும் செல்லாதா? உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளின் அடிப்படையில் உருவான சட்ட நடைமுறைகளை 10.5 சதவிகித ஒதுக்கீட்டுக்கு வலு சேர்க்கும்வகையில் உள்ள நிலையில் இந்த உத்தரவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் பெரும்பாலான கல்லூரிகளில் எம்.பி.சி (V) பிரிவில் மாணவர் சேர்க்கை முடிந்துவிட்ட நிலையில், அவர்களின் நிலையை உணர்ந்து தமிழ்நாடு அரசு காப்பதற்கு முன் வர வேண்டும்.

10.5 சதவிகித இடஒதுக்கீடு தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சரியான முயற்சிகளை எடுக்காததாலும் சரியான பதிலைத் தராததாலும் வன்னியர் சமூகத்தின் மூத்த வழக்கறிஞர்கள் ஒன்றுபட்டு முயற்சி செய்தனர். அதையும் தாண்டி தோல்வி ஏற்பட்டுள்ளது. இதற்குத் தமிழக அரசுதான் பதில் தர வேண்டும். மேலும், வன்னிய சமூகத்துக்கு 10.5 சதவிகித உள் ஒதுக்கீட்டை எடப்பாடி பழனிசாமி வழங்கியதில் இருந்தே அதனை எதிர்த்து வந்த தி.மு.க, ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் அதனை அமல்படுத்தாமல் தொடர்ந்து பழைய இட ஒதுக்கீட்டை கடைபிடித்து வந்த தி.மு.க, திடீரென 10.5 சதவிகித உள் ஒதுக்கீட்டை ஏற்று அரசாணை வெளியிட்டபோது ஏற்பட்ட சந்தேகம், தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தி.மு.க போட்ட நாடகம் முடிவுக்கு வந்துவிட்டது” என்கிறார்.

‘நீதியை பெற்றுத் தருவோம்’ – தி.மு.க

வன்னியர்களுக்கு 10.5 உள் ஒதுக்கீடு bbc tamil

இதுதொடர்பாக, பா.ம.க செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் பாலுவிடம் பேசினோம். “ நீதிமன்றத்தில் அரசு போதுமான விளக்கங்களை அளித்துள்ளது. அரசு விளக்கம் தரவில்லை என்றெல்லாம் கூற முடியாது. அதனைக் கணக்கில் எடுத்துக் கொள்ள நீதிமன்றம் தவறிவிட்டது. இந்த வழக்கில் நாங்கள் மேல்முறையீடு செல்ல உள்ளோம். மக்களிடம் இதுகுறித்து விளக்க இருக்கிறோம். நீதிமன்றத்தின் முழு உத்தரவையும் படித்துப் பார்த்துவிட்டு சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளோம்” என்கிறார்.

“தமிழ்நாடு அரசு இரட்டை வேடம் போடுவதாக வன்னிய அமைப்புகள் குற்றம் சாட்டுகிறதே?” என அரசு வழக்கறிஞரும் தி.மு.கவின் சட்டத்துறை இணைச் செயலாளருமான வீ.கண்ணதாசனிடம் கேட்டோம். “ நிச்சயமாக இல்லை. வன்னியர் இடஒதுக்கீட்டை பொறுத்தவரையில் கலையரசன் குழுவின் அறிக்கையை முன்வைத்துத்தான் ஏற்கெனவே தமிழ்நாடு அரசு அறிவித்தது. அதனை அ.தி.மு.க கொண்டு வந்தது என எண்ணாமல் தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்தவுடன் அரசாணையை கொண்டு வந்தது.

மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர் மரபினருக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என விக்ரவாண்டி இடைத்தேர்தலில் நாங்கள் கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில்தான் செய்தோம். இதில் சிலர் உள்நோக்கம் கற்பிக்கிறார்கள் என்றால், அது அவர்களின் அறியாமையைக் காட்டுகிறது. இந்த வழக்கில் மேல்முறையீடு செல்ல உள்ளதாக தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் நிச்சயமாக மேல்முறையீடு செல்வோம். மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான நீதியை பெற்றுத் தருவோம்” என்கிறார்.

“அரசுத் தரப்பு அளித்த விளக்கம் போதுமானதாக இல்லை என்கிறார்களே?” என்றோம். “ தீர்ப்பின் முழு விவரத்தையும் படித்துப் பார்த்துவிட்டுத்தான் சொல்ல முடியும். எதனை அடிப்படையாக வைத்து இவ்வாறு சொல்கிறார்கள் எனத் தெரியவில்லை” என்கிறார்.