October 13, 2021

உண்மையை உரக்கச் சொல்லும் ஒரே நாளிதழ்

வனஉயிர் புகைப்படக் கலைஞர்: மீன்களின் ‘அவசரக் கலவி’ புகைப்படத்துக்கு உயரிய விருது

பார்ப்பதற்கு நீருக்கு அடியில் நடந்த ஒரு வெடிப்பைப் போன்று காட்சியளிக்கிறது இது. ஒரு பெண் மீன் தனது கரு முட்டைத் தொகுப்பை வெளியிட்டவுடன் ஆண் மீன்கள் தங்களது விந்தணுக்களை அவசரமாக வெளியிடும்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இது.

உருமறைப்புக் குழுவினர் (camouflage groupers) எனப்படும் இனத்தைச் சேர்ந்தவை இந்த மீன்கள்.

பசிபிக் பெருங்கடலின் ஃபகரவா தீவுகளில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தை எடுத்த லாரன்ட் பல்லெஸ்டாவுக்கு இந்த ஆண்டின் மிக உயரிய வனவிலங்கு புகைப்படக் கலைஞர் விருது வழங்கப்படுகிறது.

“இது வலிமையான தொழில்நுட்பம்” என்று பாராட்டுகிறார் தேர்வுக் குழுவின் தலைவர் ரோஸ் கிட்மன் காக்ஸ்.

“இந்தப் படத்தின் சிறப்பு முழு நிலவின்போது எடுக்கப்பட்டது என்பது ஒரு பகுதி, ஆயினும் எடுக்கப்பட்ட நேரமும் முக்கியமானது. எப்போது எடுக்க வேண்டும் என்பது என்பதை அறிந்ததாக இந்தப் படம் அமைந்திருக்கிறது”

உருமறைப்பு குழுக்கள் எனப்படும் இவ்வகை மீன்களின் வருடாந்திர இனப்பெருக்கம் ஜூலை மாதம் நிகழ்கிறது. இந்த நிகழ்வில் பல்லாயிரக் கணக்கான மீன்கள் வரை குறிப்பிட்ட இடத்தில் கூடுகின்றன. அதே நேரத்தில் இந்தத் தருணத்துக்காகவே அவற்றை வேட்டையாடி உண்ணும் சுறாக்களும் காத்திருக்கின்றன.

சுறாக்கள் மட்டுமல்லாமல், அளவுக்கு அதிகமான மீன்பிடிப்பு இந்த மீன் இனத்துக்கு அச்சுறுத்தலாக அமைந்திருக்கிறது. இந்தப் படம் அவற்றுக்கு பாதுகாப்பு அளிக்கும் ஓர் இடத்தில் எடுக்கப்பட்டிருக்கிறது.

இவ்வகை மீன்களின் இனப்பெருக்க நேரம் ஓராண்டில் குறிப்பிட்ட முழுநிலவு இரவில், சுமார் ஒரு மணி நேரத்தில் தொடங்கி முடிந்துவிடும்.

“இந்த குறிப்பிட்ட தருணத்துக்காக நாங்கள் இதே இடத்தில் ஐந்து ஆண்டுகள் சுமார் 3,000 மணி நேரம் நீருக்குள் மூழ்கியிருந்தோம்” என்று கூறுகிறார் புகைப்படத்தை எடுத்த லாரன்ட்.

“கரு முட்டை தொகுப்பு ஏற்படுத்திய வடிவம் இந்தப் படத்துடன் என்னை நெருக்கமாக்கியது. பார்ப்பதற்கு இது தலைகீழான கேள்விக்குறி போல இருக்கிறது. இது இந்த முட்டைகளின் எதிர்காலம் பற்றிய கேள்வி. ஏனென்றால் பத்து லட்சத்தில் ஒன்று மட்டும் வயதுக்கு வரும் வரை பிழைத்திருக்கும். இது இயற்கையின் எதிர்காலத்துக்கான ஒரு குறியீடாகவும் எடுத்துக் கொள்ளலாம். இது இயற்கையின் எதிர்காலத்தைப் பற்றிய மிக முக்கியமான கேள்வி. “

முதன்மை விருது தவிர நீருக்கு அடியில் எடுக்கப்பட்ட படம் என்ற பிரிவிலும் இந்தப் புகைப்படத்துக்கு விருது கிடைத்திருக்கிறது.

பத்து வயது இந்தியச் சிறுவன் எடுத்த புகைப்படம்

பெங்களூருவைச் சேர்ந்த பத்து வயதான வித்யுன் ஹெப்பார் எடுத்த சிலந்தியின் புகைப்படத்துக்காக அவருக்கு இந்த ஆண்டியின் ஜூனியர் வனஉயிர் புகைப்படக் கலைஞர் விருது வழங்கப்படுகிறது.

சிலந்தி

“குவிமாட இல்லம்” என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் புகைப்படத்தில் கூடார வடிவத்தில் ஒரு சிலந்தியின் வலை பின்னப்பட்டிருப்பது காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.

பின்னணியில் மங்கலான பச்சை மற்றும் மஞ்சள் நிறங்களில் தெரிவது ஓர் ஆட்டோ.

“படத்தின் ஃபோகஸ் ஊசி நுனியைப் போலத் துல்லியமானது. படத்தை விரியச் செய்து பார்த்தால், சிலந்தியின் கோரைப் பற்களைக்கூட காண முடியும்” என்கிறார் ராஸ் கிட்மன் காக்ஸ்.

“வாகனம் கடந்து செல்லும் ஒவ்வொரு முறையும் வலை அசைந்து கொண்டே இருந்ததால், சிலந்தியை குறிவைத்து படம் எடுப்பது சவாலாக இருந்தது” என நினைவுகூர்கிறார் வித்யுன்.

ஆண்டின் சிறந்த வனஉயிர் புகைப்படக் கலைஞர் விருதுகள் வழங்குவது 1964-ஆம் ஆண்டில் தொடக்கப்பட்டது. லண்டனின் இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் இதை ஏற்பாடு செய்கிறது.

ஒவ்வோர் ஆண்டிலும் பல்லாயிரக் கணக்கான புகைப்படங்கள் இந்த விருதுகளைப் பெறுவதற்கான போட்டிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

இவற்றில் மேலும் சில பிரிவுகளில் வென்ற புகைப்படங்கள் கீழே.

அறைக்குள் யானை – ஆடம் ஆஸ்வெல், ஆஸ்திரேலியா

யானை

தாய்லாந்தில் உள்ள மிருகக்காட்சிசாலையின் பார்வையாளர்கள் ஒரு இளம் யானை நீருக்கடியில் நடனமாடுவதைப் பார்க்கும் இந்தப் படத்திற்காக ஆஸ்திரேலியாவின் ஆடம் ஆஸ்வெலுக்கு புகைப்படப் பத்திரிகையாளர் விருது கிடைத்திருக்கிறது. ஆசியா முழுவதும் யானை தொடர்பான சுற்றுலா அதிகரித்துள்ளது. தாய்லாந்தில், காட்டுக்குள் இருப்பதை விட அதிக யானைகள் மனிதர்களின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன.

குணமாக்கும் தொடுதல் – தென் ஆப்பிரிக்காவின் ப்ரெண்ட் ஸ்ட்டர்டன்

மனிதக் குரங்கு

இறைச்சி வணிகம் காரணமாக அனாதைகளான மனிதக் குரங்குகளை மீட்டு பராமரிக்கும் ஓர் மறுவாழ்வு மையம், தொடர் புகைப்படங்கள் மூலம் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. இதற்காக ப்ரெண்ட் ஸ்ட்ர்டனுக்கு பத்திரிகை புகைப்படக் கதை விருது வழங்கப்படுகிறது.

அழிவின் சாலை – ஜேவியர் லாஃபுயென்டே, ஸ்பெயின்

சாலை

நூற்றுக்கணக்கான பறவை இனங்களின் வாழ்விடமாக இருக்கும் ஒரு சதுப்பு நிலப் பகுதியை கிழித்துக் கொண்டு செல்லும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும் நேர் கோட்டுச் சாலையைக் காட்டுகிறது ஜேவியரின் புகைப்படம். அருகேயுள்ள கடற்கரைக்குச் செல்வதற்காக இந்தச் சதுப்பு நிலத்தின் நடுவே இந்தச் சாலை அமைக்கப்பட்டிருக்கிறது. சதுப்பு நிலங்கள் பிரிவில் இந்தப் புகைப்படத்துக்கு விருது கிடைத்திருக்கிறது.