December 4, 2021

உண்மையை உரக்கச் சொல்லும் ஒரே நாளிதழ்

மழையால் தத்தளிக்கும் தமிழ்நாடு: மூழ்கிய பயிர்கள் முதல் கரை புரண்டோடும் வைகை வரை

கனமழையால் தலைநகரம் சென்னை மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதுமே பரவலாக தத்தளித்து வருகிறது.

மதுரை வைகை ஆற்றில் நீர் வரத்து அதிகரித்து தரைப் பாலங்களில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

வருஷநாடு மற்றும் மூலவைகை ஆற்றுப் பகுதிகளில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக வைகை ஆற்றில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வெள்ளம் கரைபுரண்டு ஓடி வருகிறது. இதனால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் அணையின் நீர்மட்டம் 66.83 அடியாக உள்ளது.

வைகை அணையில் இருந்து 569 கன அடி நீர் மதுரை, ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளுக்காக திறக்கப்பட்டுள்ளதோடு கடந்த இரு நாட்களாக தேனி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழையினால் அந்த மழைநீரும் வைகை ஆற்றில் வடிந்து வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.

மதுரை சிம்மக்கல் அருகே வைகை ஆற்றின் இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் ஆற்றின் குறுக்கே உள்ள யானைக்கல் தரைப்பாலத்தில் கனரக வாகனங்களின் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

தரைப்பாலத்தின் இரு பகுதிகளிலும் தற்காலிக தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீசாரும் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர் .

பயிர்கள் அழுகல்

அழுகிய பயிர்கள்
படக்குறிப்பு,அழுகிய பயிர்கள்

வட கிழக்கு பருவ மழையால், நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த பல நூறு ஏக்கர் பரப்பிலான சம்பா, தாளடி நெல்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகியுள்ளன.

வடக்கிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்னதாகவே நாகை மாவட்டத்தில் பரவலாக கன மழைப் பொழிவு இருந்து வந்தது.

இந்நிலையில் வடக்கிழக்கு பருவமழைத் தொடக்கம் முதல் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தொடர் கனமழை பெய்தது. இந்த மழையால், கீழ்வேளூர் வட்டத்திற்கு உட்பட்ட வடக்குவெளி, கர்ணாவெளி, ஆளக்கரை வேலூர் உள்ளிட்ட கிராமங்களில், தாழ்வான பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த சுமார் 200க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பிலான சம்பா தாளடி நெல்பயிர்கள் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளன.

இதனால் அந்த பகுதிகளைச்சேர்ந்த விவசாயிகள் மிகுந்த வேதனையில் உள்ளனர்.

ஏக்கருக்கு சுமார் 30 ஆயிரம் வரை செலவிட்டு நடவுப் பணிகளை மேற்கொண்டு பதினைந்தே நாட்கள் ஆன நிலையில் நெற்பயிர்கள் அழுகி இருப்பது விவசாயிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இப்பகுதியில் போதிய அளவுக்கு வடிகால் வசதியில்லாததால் 200க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள சம்பா, தாளடி நெல் பயிர்கள் நீரில் மூழ்கி அழுகியுள்ளன.

இது அப்பகுதி விவசாயி ரமேஷ் கூறுகையில், பருவமழை நீடித்தால் பாதிப்பு தொடர்ந்து அதிகரிக்கும்; வேளாண்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பயிர்களைப் பார்வையிட்டு மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவேண்டும் என வடக்குவெளி பகுதி விவசாயிகள் தமிழக அரசிற்கு கோரிக்கை வைத்திருக்கின்றனர் என்றார்.

பேருந்தில் கூட குடை பிடிக்க வேண்டுமா?

தமிழக அரசுப் பேருந்து கோப்புப் படம்
படக்குறிப்பு,தமிழக அரசுப் பேருந்து கோப்புப் படம்

கனமழையால் விருதுநகரிலிருந்து அருப்புக்கோட்டை வழியாக நடுக்காட்டூர் செல்லும் அரசுப் பேருந்தில் மழைநீர் ஒழுகியதால் பேருந்துக்குள் பயணிகள் குடை பிடித்துக் கொண்டு பயணம் செய்யும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இயங்கும் அரசுப் பேருந்துகளில் பெரும்பாலானவை பழுதடைந்தவையாக உள்ளன. குறிப்பாக கிராம பகுதிகளுக்கு இயக்கப்படும் அரசுப் பேருந்துகள் பழுதடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளன.

வடகிழக்கு பருவமழை காரணமாக அருப்புக்கோட்டையில் நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் இருந்து வந்த நிலையில் மாலை வேளையில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து இடி, மின்னலுடன் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது.

விருதுநகரிலிருந்து அருப்புக்கோட்டை வழியாக நடுக்காட்டூர் செல்லும் அரசு நகரப் பேருந்துக்குள் மழை நீர் ஒழுகியதால் பயணிகள் குடை பிடித்துக்கொண்டு பேருந்தில் பயணம் செய்யும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பேருந்தின் இருக்கைகளில் பயணிகள் அமர முடியாதவாறு மழைநீர் கொட்டியதால் பயணிகள் நின்று கொண்டே பயணம் செய்தனர். மழைக்காலங்களில் பொதுமக்கள் பாதிக்கப்படாதவாறு அரசு பேருந்துகளை முறையாக பராமரிப்பு செய்ய சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.