October 15, 2021

உண்மையை உரக்கச் சொல்லும் ஒரே நாளிதழ்

நரேந்திர மோதியின் ஐ.நா உரையின்போது இருக்கைகள் காலியா? உண்மை என்ன?

இந்திய பிரதமர் நரேந்திர மோதி ஐக்கிய நாடுகள் சபையின் 76ஆவது அமர்வில் கடந்த 25ஆம் தேதி உரையாற்றியபோது, அவர் பேசிய அரங்கில் மூன்றில் ஒரு பங்கு இருக்கைகளில் கூட யாரும் இல்லை என்று விமர்சித்து சமூக ஊடகங்களில் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன. அங்கு உண்மையில் என்ன நடந்தது?

இது தொடர்பாக இந்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூட தமது ட்விட்டர் பக்கத்தில், “ஐ.நா பொதுச்சபையில் பிரதமர் நரேந்திர மோதி பேசியபோது, வெகு குறைவான இருக்கைகளிலேயே ஆட்கள் இருந்ததை பார்த்து ஏமாற்றம் அடைந்தேன். அவரது உரைக்கு ஒருவர் கூட கைதட்டாதது மேலும் ஏமாற்றம் தந்தது. இந்த விஷயத்தில் ஐ.நாவுக்கான இந்திய நிரந்தரப்பிரதிநிதி அலுவலகம் மிகப்பெரிய அளவில் சொதப்பி விட்டது,” என்று கூறியிருந்தார்.

சிதம்பரத்தின் இந்த இடுகையை, சுமார் நான்காயிரம் பேர் மறுட்வீட் செய்திருந்தனர். 16 ஆயிரத்துக்கும் அதிகமானோர் ‘லைக்’ செய்திருந்தனர்.

இதையடுத்து உண்மையிலேயே மோதி ஐ.நா அரங்கில் பேசும்போது, பார்வையாளர்கள் இருக்கைகள் காலியாக இருந்தனவா? பிற நாடுகளின் தலைவர்கள் பேசியபோது, ஐ.நா அரங்கில் இருக்கைகளில் எத்தனை பேர் இருந்தனர்?.

இது குறித்து இந்தியாவுக்கான ஐ.நா நிரந்தரப்பிரதிநிதி அலுவலக உயரதிகாரிகளிடம் பேசியபோது, ஐ.நா பொதுச்சபை அரங்கில் பேசும் தலைவர்கள் யார், அவர்கள் உரையின் சாராம்சம் போன்ற விவரங்களை செப்டம்பர் 10ஆம் தேதியே அனுப்பி வைக்க வேண்டும் என்பது விதி என்று தெரிவித்தனர். அந்த வகையில், செப்டம்பர் 25ஆம் தேதி இந்திய பிரதமர் நரேந்திர மோதி பேசுவதற்கு நேரம் ஒதுக்கப்பட்டது.

ஐக்கிய நாடுகள் சபை

இது கொரோனா பெருந்தொற்று காலம் என்பதால், வழக்கமான நடைமுறைகளைப் போல இல்லாமல் கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் அதற்கான வழிகாட்டுதல் நெறிகளின்படியே ஐ.நா அமர்வில் தலைவர்கள் பேசவும், இருக்கைளில் இடம்பெறுபவர்களின் எண்ணிக்கைக்கும் கட்டுப்பாடுகள் இருந்தன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஐக்கிய நாடுகள் சபை

பொது விவாதத்தில் நேரில் பங்கேற்கும் தலைவர்கள் மற்றும் காணொளி காட்சி வாயிலாக பதிவு செய்யப்பட்ட உரையை பகிர்ந்த தலைவர்கள், தங்களுடைய உரையின் கால அளவை 15 நிமிடங்களுக்கு மிகாமல் பார்த்துக் கொள்ளுமாறு ஐ.நா பொதுச்சபை செயலகம் ஏற்கெனவே அறிவுறுத்தியிருந்தது. இந்த தகவலை ஐ.நா பொதுச்சபை அலுவலக இணையதளத்திலும் காண முடிந்தது.

ஐக்கிய நாடுகள் சபை
படக்குறிப்பு,ஐக்கிய நாடுகள் சபையில் பிரதமர் நரேந்திர மோதி உரையாற்றியபோது அரங்கின் பார்வையாளர் இருக்கையில் இருந்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்.

பிரதமர் நரேந்திர மோதி உரையாற்றி செப்டம்பர் 25ஆம் தேதி,ஐ.நா பொதுச்சபையின் 14ஆம் சுற்று கூட்டத்தில் முதல் நபராக இந்திய பிரதமர் நரேந்திர மோதி இந்திய நேரப்படி மாலை 6.30 மணியளவில் பேச அழைக்கப்பட்டார். அவர் 22 நிமிடங்கள் உரையாற்றினார்.

அவரைத் தொடர்ந்து 15 நாடுகளின் தலைவர்கள் தங்களுடைய முன்பதிவு செய்யப்பட்ட காணொளியை பகிர்ந்திருந்தனர். அந்த காணொளி தொடர்பாக அந்த நாடுகளின் பிரதிநிதிகள் ஐ.நா அமர்வு நடைபெற்ற அரங்கில் அறிமுகம் செய்து வைக்க அரங்கின் இரு புறமும் பொருத்தப்பட்டிருந்த டிஜிட்டல் திரையில் தலைவர்கள் பேசும் காணொளி ஒளிபரப்பப்பட்டது.

இந்த தலைவர்கள் பேசி முடித்த பிறகு செப்டம்பர் 25ஆம் தேதி கடைசி நாடாக ரஷ்ய அதிபர் சார்பில் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் சர்கே லாவ்ரோஃப் பேசினார். அன்றைய தினம், காலை அமர்வு, மாலை அமர்வு என இரு பிரிவுகளாக கூட்டம் நடந்தது.

ரஷ்ய அரசு
படக்குறிப்பு,செர்கே லாவ்ரோஃப், ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர்
ரஷ்ய அரசு
படக்குறிப்பு,ரஷ்ய வெளியுறவு அமைச்சர் பேசியபோது அரங்கில் காணப்பட்ட கூட்டம்
ரஷ்ய அரசு

இடையில் பேசிய நாடுகளின் தலைவர்கள் விவரம்: செயின்ட் லூசியா தீவு பிரதமர் ஃபிலிப் ஜோசஃப் பியர்ரே, அந்தோரோ அரசாங்கத்திந் தலைவர் சேவியர் எஸ்பாட் சமோரா, எஸ்வாடினி ராஜ்ஜியத்தின் பிரதமர் கிளியோபாஸ் சிஃபோ டியாமினி, செயின்ட் வின்சென்ட் தி கிரெனடைன்ஸ் பிரதமர் ரால்ஃப் கோன்ஸ்லேவ்ஸ், ஹேட்டி பிரதமர் ஏரியல் ஹென்றி, மலேசிய பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகூப், லாவோ ஜனநாயக குடியரசின் பிரதமர் பாங்காம் விபாவன்ஹ், சூடான் பிரதமர் அப்துல்லா ஆதம் ஹாம்டாக், கம்போடியா பிரதமர் சாம்டெக் அகா மோஹா சேனா பதேய் டெகோ சூன் சென், ஃபிஜி பிரதமர் ஜோசையா வோரெக், பூடான் பிரதமர் லோட்டே ட்ஷெரிங், வானுடா பிரதமர் பாப் லோஃப்மேன், பஹாமாஸ் பிரதமர் ஃபிலிப் எட்வார்ட் டேவிஸ், டோங்கா பிரதமர் போஹிவா டுயியோன்டோ ஆகிய தலைவர்கள் பதிவு செய்யப்பட்ட காணொளியில் பேசியிருந்தனர்.

முன்னதாக, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் தமது உரையை காணொளியில் பதிவு செய்து பகிர்ந்திருந்தார். அவர் செப்டம்பர் 24ஆம் தேதி உரையாற்றினார்.

ஐ.நா பாகிஸ்தான்
படக்குறிப்பு,பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் பதிவு செய்யப்பட்ட காணொளி ஒளிபரப்பானபோது அவையில் இருந்த கூட்டம்

இதேபோல, செப்டம்பர் 21ஆம் தேதி ஐ.நா அமர்வின் துவக்க நாளில் பிரேசில் அதிபர் ஸேர் போல்சனாரோ, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேரில் உரையாற்றினார்.

இந்த தலைவர்கள் பேசும்போது அரங்கத்தில் உரையாற்றும் தலைவர் முன்னிலையில் இருந்த வரிசைகள் மட்டுமே துவக்க நாளில் அதாவது அமெரிக்க அதிபர் பைடன் பேசியபோது நிரம்பியிருந்தன. அங்கு ஒருவர் விட்டு மற்றொருவர் என சமூக இடைவெளியும் கடைப்பிடிக்கப்பட்டிருந்தது.

ஜோ பைடன்
படக்குறிப்பு,ஐ.நா பொதுச்சபை துவக்க நாளில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உரையாற்றினார்.

பைடனுக்கு இடதுபுறமாகவும் வலது புறமாகவும் பல இருக்கைகள் காலியாக இருந்தன.

பைடன்

கொரோனா பெருந்தொற்று காரணமாகவும் அரங்கில் கூட்டத்தின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டே இருக்க வேண்டும் என்ற கண்டிப்பான நடைமுறையை ஐ.நா பொதுச்செயலாளர் செயலகம் கடைப்பிடித்ததால் பல இருக்கைகள் காலியாக இருந்தன.

அன்றைய தினம் எந்தெந்த நாடுகள் பேச அழைக்ப்பட்டிருந்தனவோ அவற்றின் பிரதிநிதிகளும், கூட்டம் நடத்த தேவையான குவோரம் எனப்படும் ஒரு பங்கு பிரதிநிதித்துவம் அவையில் இருப்பதை உறுதிப்படுத்தும் வகையிலும் நாடுகளின் பிரதிநிதிகள் ஐ.நா அமர்வுகளில் பங்கெடுத்ததாகவும் இந்திய வெளியுறவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஐநா
படக்குறிப்பு,ஐக்கிய நாடுகள் சபையின் 2013ஆம் ஆண்டு அமர்வில் அப்போதைய இந்திய பிரதமர் மன்மோகன் சிங் பேசியபோது முதல் இரண்டு இருக்கைகள் காலியாக இருந்தன.

“அந்த வகையில், இந்திய பிரதமர் நரேந்திர மோதி ஐ.நா அரங்கில் பேசும்போது எந்த அளவுக்கு கூட்டம் முன் பகுதியில் இருந்ததோ அதேபோன்ற கூட்டமே பிற நாடுகளின் தலைவர்கள் பேசும்போதும் இருந்துள்ளது என்பதே உண்மை. ஐ.நா நிகழ்ச்சி மற்றும் தலைவர்களின் உரை, நேரலையாக ஒளிபரப்பானதால் அதை உலகமே பார்க்க வேண்டும் என்பதாலேயே இந்த நேரலை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் அரங்கில் எத்தனை பேர் இருந்தார்கள் என்பதை விட தலைவர்களின் உரை உலகத்தை அடைந்ததா என்பதே முக்கியம்,” என்று இந்திய வெளியுறவுத்துறை உயரதிகாரி கூறினார்.

இந்திய தரப்பில் இப்படி கூறப்பட்டாலும், ஐ.நா. அமர்வின் துவக்க நாளில் பிரேசில் அதிபர், அமெரிக்க அதிபர் பேசும்போது அவையில் அடுத்தடுத்த இருக்கைகளில் பல நாடுகளின் பிரதிநிதிகள் அமர்ந்திருந்ததை ஐ.நா வெளியிட்ட தொலைக்காட்சியில் பார்க்க முடிந்தது.

பிரேசில், அமெரிக்காவுக்கு ஏன் முன்னுரிமை?

பிரேசில்
படக்குறிப்பு,ஐ.நா அமர்வின் தொடக்க நாளில் பிரேசில் அதிபர் ஸேர் போல்;சனாரோ பேசியபோது அரங்கில் இருந்த பார்வையாளர் கூட்டம்

ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் சம்பிரதாய வழக்கத்தின்படி ஐ.நா அமர்வில் முதலாவது நாடாக பிரேசில் உரையாற்றும். இரண்டாம் உலக போர் முடிவில் ஐ.நா சபை நிறுவப்பட்டபோது, அதன் முதலாவது கூட்டத்தில் 60 ஆண்டுகளுக்கு முன்பு முதலாவதாக பேச எந்த நாடும் ஆர்வம் காட்டவில்லை. பிரேசில் மட்டுமே முதல் நாடாக ஐ.நா கூட்டத்தில் பேசியது. பிரேசிலைத் தொடர்ந்து அமெரிக்கா பேச அனுமதிக்கப்படுவதற்கு ஐ.நா தலைமையகம் அமைந்துள்ள நியூயார்க் நகரம் அமெரிக்காவில் இருப்பது என்பதே காரணம்.

இந்த இரு நாடுகளின் தலைவர்கள் பேசி முடித்ததும், அடுத்து பேசும் நாடுகள், ஆங்கில எழுத்தில் அகர வரிசைப்படி அல்லாமல் நாட்டின் தலைவர்களின் வசதி, தேசத்தின் பிரதிநிதித்துவம், அளவு அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. அந்த வகையில் செப்டம்பர் 25ஆம் தேதி இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கும் ஐ.நா நிகழ்ச்சி நிரலுக்கும் ஏற்புடையதாக ஒப்புக்கொள்ளப்பட்டதால் அன்றைய தினம் முதலாவது நபராக பேசுவதற்கு நரேந்திர மோதி அழைக்கப்பட்டதாக இந்திய அதிகாரிகள் கூறினர்.