December 4, 2021

உண்மையை உரக்கச் சொல்லும் ஒரே நாளிதழ்

தமிழ்நாட்டுக்கு மூவேந்தர் கொடி: ‘தி.மு.க அரசுக்கு நெருக்கடி உண்டாக்கும் திட்டம்’ – சீமான் மீது வழக்கு ஏன்?

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது ஆறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. `தி.மு.க ஆட்சியை மத்திய அரசு கேள்வி கேட்க வேண்டும் என்பதை நோக்கமாக வைத்துச் சிலர் செயல்படுகிறார்கள். அதற்கு இடம் கொடுக்கக் கூடாது என்பதற்காகவே வழக்கு பதியப்பட்டது’ என்கிறது தி.மு.க. என்ன நடந்தது?

என்னென்ன பிரிவுகளில் வழக்கு?

சேலம் மாவட்டம், அம்மாபேட்டையில் நவம்பர் 1 ஆம் தேதியன்று நாம் தமிழர் கட்சியின் சார்பில் `தமிழ்நாடு தினம்’, `தமிழக பெருவிழா’ ஆகிய நிகழ்ச்சிகள் கொண்டாடப்பட்டன. இந்த விழாவில் பங்கேற்ற சீமான், மூவேந்தர்களின் சின்னம் பொறித்த கொடி ஒன்றை `தமிழ்நாட்டுக் கொடி’ என அறிமுகப்படுத்தி ஏற்றி வைத்தார்.

இதுதொடர்பாக, அம்மாபேட்டை கிராம நிர்வாக அலுவலர் ராஜா, காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், தமிழ்நாட்டு மக்களிடையே மொழிவாரி பிரிவினையை ஏற்படுத்துதல், கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்காதது, அனுமதியின்றிக் கூட்டம் நடத்தியது என ஆறு பிரிவுகளில் (Cr.no: 577/2021 u/s 143,124 A, 153(A), 1(a), 505(1)(b), 269 IPC r/w 51(b)t) )வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அன்றைக்கு நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

புதிதாக உருவாக்கப்பட்ட கொடியா?

“அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் தனிக்கொடி ஏற்றியதற்காக பொழிலன் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். அந்தக் கொடியில் நிலப்பரப்பு குறிக்கப்பட்டதால், அது பிரிவினையை தூண்டுவதைப் போல உள்ளதாகக் கூறப்பட்டது. அந்த வரிசையில், சென்னையில் தமிழ்நாட்டுக் கொடியை சீமான் ஏற்றியபோது காவல்துறை வழக்கு போடவில்லை. ஆனால், சேலத்தில் ஏற்றியதால் வழக்கு போட்டுள்ளனர். நாங்கள் முன்வைக்கும் மூவேந்தர் கொடியை புதிதாக ஒன்றும் ஏற்றவில்லை”.

சீமான் பேசும் மேடையில் மூவேந்தர் சின்னம் பொறித்த கொடி
படக்குறிப்பு,மூவேந்தர் சின்னம் பொறித்த கொடி பின்புலமாக அமைக்கப்பட்டிருந்த மேடையில் பேசும் சீமான்

“பெரியார் பங்கேற்ற முதல் மொழிப் போராட்ட காலத்தில் கி.ஆ.பெ.விசுவநாதம், மூவேந்தர் சின்னம் பொறித்த கொடியை ஏற்றியுள்ளார். அதே கொடியை சற்று செழுமைப்படுத்தி உணர்வின் அடிப்படையில் ஏற்றுகிறோம். அது எந்தளவுக்கு இந்திய இறையாண்மைக்கு எதிராக உள்ளது எனப் புரியவில்லை” என்கிறார், நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறை பொறுப்பாளர் இடும்பாவனம் கார்த்தி.

தொடர்ந்து பேசிய கார்த்தி, “ திராவிட நாடு கொள்கையை அண்ணா கைவிட்ட பிறகு `மாநில தன்னாட்சி’ என்ற கொள்கையை முன்வைத்தார். அதற்குள், `தமிழ்நாட்டுக்கென தனிக்கொடி வேண்டும்’ என வருகிறது. 1970ஆம் ஆண்டுகளில் தனிக்கொடியை கருணாநிதி வடிவமைத்தார். அந்தக் கொடியில் தமிழ்நாட்டுக்கான எந்தவித பண்பாட்டுக் கூறுகளும் இல்லை. அதில், இந்தியக் கொடியை பொறித்து தமிழ்நாடு அரசின் முத்திரையை பதித்து டெல்லியில் அறிமுகப்படுத்தினார். பின்னர், இந்திரா காந்தியின் அழுத்தம் காரணமாக அந்த நிலைப்பாட்டில் இருந்து அவர் பின்வாங்கிவிட்டார்.

ஸ்டாலின் சொல்வாரா?

இடும்பாவனம் கார்த்தி
படக்குறிப்பு,இடும்பாவனம் கார்த்தி

அடுத்து வந்த நாள்களில், `இந்தியாவின் தேசியக் கொடியை சுதந்திர நாளன்று மாநிலங்களில் ஏற்றுகின்ற உரிமையை நாங்கள்தான் பெற்றுக் கொடுத்தோம்’ எனப் பெருமைப்பட்டுக் கொண்டனர். அதேநேரம், கர்நாடகாவில் தேசியக் கட்சியின் மாநில முதல்வராக இருந்த சித்தராமையா, தனது மாநிலத்துக்கென தனிக்கொடியை வடிவமைத்தார். இங்கு மாநில தன்னாட்சி எனப் பேசிக் கொண்டே ஆட்சியைப் பிடித்த தி.மு.கவுக்கு, தனிக்கொடியை பெற்றுத் தரும் துணிச்சல் இல்லாமல் போனது ஏன்? அதைவிடுத்து சுதந்திர தினத்தில் கொடியேற்றுவதை பெரும் சாதனையாக பேசி வருகின்றனர். இவர்கள் செய்யாத ஒன்றை இங்குள்ள தமிழ்த்தேசிய உணர்வாளர்கள், அவர்கள் பாணியில் ஒரு கொடியை ஏற்றிக் கொண்டாடுகின்றனர்” என்கிறார்.

“ இந்தியாவின் இறையாண்மை குறித்து பா.ஜ.கவும் காங்கிரஸ் கட்சியும் கவலைப்படலாம். ஆனால், மாநில தன்னாட்சியைப் பற்றிப் பேசும் தி.மு.க எதற்காக பயப்பட வேண்டும்? நாங்கள் நவம்பர் 1ஆம் தேதியை தமிழ்நாடு நாளாக கொண்டாட வேண்டும் என்கிறோம். கடந்த எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் தமிழ்நாடு நாள் என நவம்பர் 1ஆம் தேதியை அறிவித்தார்கள். அதனை நாங்கள் வரவேற்கிறோம். இந்த ஆண்டு, ஜூலை 18ஆம் தேதியை `தமிழ்நாடு நாள்’ என்பது என மாற்றுகிறார்கள். இதற்கு காரணமாக, `ஆந்திராவும் கர்நாடகாவும் கொண்டாடலாம். நாம் இழந்தது அதிகம் என்பதால் எப்படிக் கொண்டாட முடியும்?’ என்கிறார்கள்.

M. K. Stalin

இழந்த நிலப்பரப்புகளைப் பெறுவதற்கு திராவிடக்கட்சிகள் அதிகாரத்தில் இருக்கும்போது செய்தது என்ன? அதனைக்கூட விட்டுவிடுவோம். இப்போது, ‘முல்லைப்பெரியாறு அணையை உடைப்போம்’ என கேரளாவில் இருந்து குரல்கள் எழுகின்றன. இதற்கு எதிர்வினையாக, ‘இடுக்கி, தேவிகுளம், பீர்மேடு போன்ற பகுதிகளை மீட்போம்’ என ஸ்டாலின் சொல்வாரா?

ஜூலை 18: ஸ்டாலினின் ட்விட்டர் பக்கம்

எங்களுடைய கேள்வியெல்லாம் ஒன்றுதான், `அண்ணா பெயர் சூட்டிய நாளை கொண்டாட வேண்டும்’ என்பது தி.மு.கவின் நோக்கமாக இருந்திருந்தால் இவர்கள் மே மாதம் ஆட்சிக்கு வந்தார்கள். அதன்பிறகு வந்த ஜூலை 18 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டர் பக்கத்தில், அண்ணா அறிவித்த நாள் குறித்து ஒரு சின்ன செய்திகூட இல்லை. அந்த நாளை எந்தவித சலனமும் இல்லாமல் கடந்து சென்றுவிட்டனர்.

இதனையடுத்து, நவம்பர் 1 ஆம் தேதியை தமிழ்நாடு நாளாக தமிழ்த்தேசிய உணர்வாளர்கள் கொண்டாடப் போகிறார்கள் என்று தெரிந்தவுடன் ஏட்டிக்குப் போட்டியாக தேதியை மாற்றுகிறார்கள். இது ஒருபக்கம் இருந்தாலும் தமிழ்ப் புத்தாண்டை சித்திரை 1ஆம் தேதி என இந்த அரசு அறிவித்துள்ளது. அ.தி.மு.க கொண்டு வந்த நவம்பர் 1ஆம் தேதியை மாற்றும்போது அதே அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில்தான் தமிழ்ப் புத்தாண்டாக இருந்த தை 1 ஆம் தேதியை சித்திரை 1 என மாற்றினார்கள். அதை திரும்பவும் ஏன் தை 1 என மாற்றவில்லை” என்கிறார்.

“மொழிவாரி பிரிவினையை ஏற்படுத்துவதால்தான் வழக்கு போடப்பட்டது என்கிறார்களே?” என்றோம். “ தி.மு.கவுக்கு அச்சுறுத்தலாக நாம் தமிழர் கட்சி இருக்கிறது. தி.மு.கவின் இரண்டாம்கட்டத் தலைவர்கள் தொடர்ச்சியாக எங்களை விமர்சனம் செய்து வருகின்றனர். இங்குள்ள அரசியல் போக்கை நாங்கள் தீர்மானிப்பதால் அடக்குமுறையை ஏவிவிடுகின்றனர். ஆனால், நாங்கள் இன்னும் தீவிரமாக வேலை பார்ப்போம்” என்கிறார்.

வரலாற்றை திரிக்கிறாரா சீமான்?

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி
படக்குறிப்பு,திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி

“சீமான் மீது வழக்கு பதியப்பட்டது ஏன்?” என தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் பேசினோம். “ வரலாற்றை சீமான் திரித்துப் பேசுகிறார். மக்கள் மத்தியில் தவறான கருத்துகளைப் பரப்பக் கூடாது. தமிழ்நாடு நாள் தொடர்பாக, 1967ஆம் ஆண்டு அண்ணா தீர்மானம் போட்டார். அதன்பிறகு கருணாநிதி ஆட்சிக்கு வந்தார். ஓரிரு வருடங்களில் தி.மு.க ஆட்சி கலைக்கப்பட்ட பிறகு எம்.ஜி.ஆர் தொடர்ந்து ஆட்சியில் இருந்தார். பின்னர், ஆட்சிக்கு வந்த கருணாநிதி, ஜனவரி 14 ஆம் தேதியை தமிழ்ப் புத்தாண்டாக கருணாநிதி அறிவித்தார். மேலும் மெட்ராஸ் என இருந்ததை சென்னை என மாற்றினார். அதேபோல், ஒவ்வொரு ஆட்சிக்காலத்திலும் சில சில மாற்றங்கள் செய்யப்பட்டு வந்தன. இதனை பரிணாம வளர்ச்சியாகத்தான் பார்க்க வேண்டும்” என்கிறார்.

“ தனிக்கொடியை கருணாநிதிகூட முன்வைத்தார், சீமான் மீது மட்டும் ஏன் வழக்குப் போடுவதில் உள்நோக்கம் உள்ளதாகக் கூறுகிறார்களே? என்றோம். “ சேலத்தில் பதியப்பட்ட வழக்கை, நீதிமன்றத்தில் சட்டப்படியாக எதிர்கொண்டு அவர் நிரூபித்துவிட்டு வரட்டும். கடந்த ஆட்சியில் என் மீதுகூட எஸ்.சி, எஸ்.டி பிரிவில் வழக்கு போட்டார்கள். அதனை நீதிமன்றத்தில் எதிர்கொண்டு வெற்றி பெற்றேன். சீமான் மீது காவல்துறை வழக்கு போட்டுள்ளது என்றால், அதை அவர் சந்திக்க வேண்டியதுதானே? அவர் எல்லாம் எங்களுக்கு ஒரு பொருட்டே இல்லை. அவர் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளும் முனைப்பில் இருக்கிறார்” என்கிறார்.

கருணாநிதி bbc tamil

சீமானின் உள்நோக்கம் இதுதான்

“ தி.மு.க அரசின் மீது எந்தக் குற்றங்களையும் யாராலும் கூற முடியவில்லை. அதனால், எதையாவது கூறி மக்களை திசைதிருப்ப முயல்கிறார்கள். இதை காரணம் காட்டி, `ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என மத்திய அரசு கேள்வியெழுப்ப வேண்டும்’ என நினைக்கிறார்கள். அதாவது, திட்டமிட்டு வேண்டுமென்றே தேசத்துக்கு விரோதமாக ஒரு கூட்டம் செயல்படுகிறது. `இவர்கள் மீதெல்லாம் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?’ என ஆளுநரோ மற்றவர்களோ கேள்வி கேட்க வேண்டும் என்பதை நோக்கமாக வைத்துச் செயல்படுகிறார்களா எனத் தெரியவில்லை.

சீமானின் செயல்பாட்டில் உள்நோக்கம் உள்ளது. 1989 ஆம் ஆண்டு சூளைமேட்டில் பத்மநாபா என்ற இளைஞரின் மரணத்தை முன்வைத்து ஆட்சியையே கலைத்தார்கள். ஆளுநரின் எதிர்ப்பையும் மீறி இந்த ஆட்சியை கலைத்தார்கள். தற்போது அதுமாதிரியான செயல்பாடுகளுக்கு இடம் கொடுத்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் வழக்கு பதியப்பட்டது என்பதுதான் என்னுடைய கருத்து” என்கிறார் ஆர்.எஸ்.பாரதி.

“தனிக்கொடி விவகாரத்தை தி.மு.க எப்படிப் பார்க்கிறது?” என்றோம். “ தமிழ்நாட்டுக்கென தனிக்கொடியை அந்தக் காலத்தில் கருணாநிதி கேட்டார். அதனை நான் இல்லையென்று கூறவில்லை. ஆனால், அது முடியாது எனத் தெரிந்த பிறகும் இப்போது தேவையா என்பது தொடர்பாக அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் கலந்து ஆலோசித்து முதலமைச்சர் எடுக்க வேண்டிய முடிவு அது” என்கிறார்.