October 19, 2021

உண்மையை உரக்கச் சொல்லும் ஒரே நாளிதழ்

“தமிழ்நாட்டில் 2 மாதத்தில் கொரோனாவால் இறந்தோரில் 87 சதவீதம் பேர் தடுப்பூசி போடாதவர்கள்”

தமிழ்நாட்டில் கடந்த 2 மாதங்களில் கொரோனா தொற்று காரணமாக இறந்தவர்களில் 87 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் என்று பொது சுகாதார இயக்குநர் மருத்துவர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார்.

“தடுப்பூசி செலுத்திக் கொள்வது குறித்து இதுவரையில் மக்களிடம் நாங்கள் வேண்டுகோள் மட்டுமே வைத்தோம். தற்போது எங்களிடம் உள்ள தரவுகளின் அடிப்படையில் பேசுகிறோம்,” என்கிறார் அவர்.

இறந்தவர்கள் எண்ணிக்கையில்…

தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத்துறை இயக்குநர் மருத்துவர் செல்வ விநாயகம், கடந்த 2ஆம் தேதி வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்தப் பதிவில், “அரசின் மெகா தடுப்பூசி முகாம்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்; அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்வதை உறுதி செய்ய வேண்டும்; கொரோனா தடுப்பூசியால் மரணம் வெகுவாகக் குறைகிறது” என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து, “கடந்த 2 மாதங்களில் தமிழ்நாட்டில் 1,626 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். அதில் 1,419 பேர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள். அதாவது இறந்தவர்களில் 87 சதவிகிதம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை. அதேநேரம், ஒரு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் மிகக் குறைவான அளவிலேயே இறந்துள்ளனர். இறந்தவர்களில் 4 சதவீதம் பேர் மட்டுமே 2 தவணையும் செலுத்திக்கொண்டவர்கள்.”

“கடந்த 2 மாதங்களில் மருத்துவமனைகளில் கொரோனாவுக்காக அனுமதிக்கப்பட்டவர்களில் 73 சதவிகிதம் பேர் தடுப்பூசியே செலுத்திக் கொள்ளவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “கொரோனாவால் கடந்த இரண்டு மாதங்களில் 88,719 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 50 சதவிகிதம் பேர் வீட்டுத் தனிமையில் சிகிச்சை பெற்றுள்ளனர். அவர்களில் 45 சதவிகிதம் பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டதால் எளிதில் குணமடைந்துள்ளனர். ஐ.சி.யுவில் அனுமதிக்கப்பட்ட 5,816 பேரில் 4,405 பேர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள். எனவே, தங்களது நலன் கருதி அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்.

4 மாதங்களில் 56 மருத்துவர்கள் மரணம்

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து
படக்குறிப்பு,கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து (சித்தரிக்கும் படம்)

“பொது சுகாதாரத்துறை சொல்லும் கணக்குகள் சரியா?” என சூழலியலுக்கான மருத்துவர்கள் சங்கத்தின் புகழேந்தியிடம் பேசினோம். “இந்தப் புள்ளிவிபரம் எப்படி எடுக்கப்பட்டது என்பதை பொது சுகாதாரத்துறை விளக்க வேண்டும். கோவிட் இரண்டாம் அலையின்போது நான்கு மாத இடைவெளியில், அதாவது மார்ச், ஏப்ரல், மே, ஜுன் ஆகிய காலகட்டங்களில் 56 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். அதேபோல், 3 மாத இடைவெளியில் 19 காவல்துறை அதிகாரிகள் இறந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் காவல்துறை மற்றும் மருத்துவம் ஆகிய துறைகளில் எத்தனை பேர் இரண்டு தவணை தடுப்பூசிகளையும் எடுத்துக் கொண்டவர்கள் என்பதற்கு எந்தப் புள்ளிவிவரங்களும் இல்லை. இறந்து போனவர்களின் எண்ணிக்கையை கணக்கிடும்போது இதனை சாதாரணமானதாகக் கடந்து சென்றுவிட முடியாது. இரண்டாம் அலையில் இறந்த மருத்துவர்கள், காவல்துறை அதிகாரிகளின் இறப்புக்கான காரணத்தையும் அரசு ஆய்வு செய்யவில்லை?” என்கிறார்.

தொடர்ந்து பேசுகையில், “அண்மையில் அரசு ஒரு திருத்தத்தை வெளியிட்டது. இதற்கு முன்பெல்லாம் கோவிட் நெகட்டிவ் வந்த பிறகு ஒருவர் இறந்துவிட்டால் அதனை கோவிட் மரணமாக கணக்கில் காட்டாமல் இருந்தனர். தற்போது கோவிட் வந்த நபர் அடுத்த ஒரு மாதத்தில் இறந்தால் அதனை கோவிட் மரணமாகப் பதிவு செய்ய வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது. இதனைக் கணக்கில் எடுத்துக் கொண்டு இந்த ஆய்வு முடிவை வெளியிட்டார்களா எனவும் தெரியவில்லை.

தவிர, சோழிங்கநல்லூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 23 பேர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதில் 11 பேர் இரண்டு தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டவர்கள். 4 பேர் ஒரு டோஸ் மட்டும் செலுத்திக் கொண்டவர்கள். அங்கு கோவிட்டால் பாதிக்கப்பட்ட 8 பேர் தடுப்பூசியே செலுத்திக் கொள்ளாதவர்கள். இதனை எப்படி எடுத்துக் கொள்வது? தமிழ்நாட்டில் 20 சதவிகித இறப்புகள் மட்டும்தான் மருத்துவரீதியாக அனைத்து காரணங்களையும் உள்ளடக்கியதாக உள்ளது எனத் தொடர்ந்து மருத்துவ வல்லுநர்களால் பேசப்பட்டு வருகிறது. இதையெல்லாம் கணக்கில் கொண்டுதான் பொது சுகாதாரத்துறையின் ஆய்வை பார்க்க முடியும்” என்கிறார்.

தரவுகளை சேகரித்தது எப்படி?

“இறந்தவர்களில் தடுப்பூசி போடாதவர்கள் 87 சதவிகிதம் பேர் என்ற கணக்கு எவ்வாறு எடுக்கப்பட்டது?” என பொது சுகாதாரத்துறை இயக்குநர் மருத்துவர் செல்வ விநாயகத்திடம் கேட்டோம்.

“இறந்தவர்களில் 87 சதவிகிதம் பேரின் உயிர் இரண்டு தவணை தடுப்பூசிகளையும் செலுத்திக் கொள்ளாததால் போயுள்ளது. தடுப்பூசி செலுத்தியிருந்தால் இவர்கள் உயிரையும் காப்பாற்றியிருக்க முடியும். நாங்கள் சொல்ல வரும் தகவல் இதுதான்” என்கிறார்.

தொடர்ந்து பேசுகையில், “தடுப்பூசி செலுத்தும் பணியில் மக்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் அரசு ஏற்பாடு செய்து கொடுக்கிறது. மெகா தடுப்பூசி முகாம், ஆரம்ப சுகாதார நிலையங்கள் என அனைத்து வழிகளிலும் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதன் பலன் தெரிந்தும் தடுப்பூசி செலுத்தாமல் இருப்பது சரியானதல்ல. இதுவரையில் மக்களிடம் நாங்கள் வேண்டுகோள் மட்டும் வைத்தோம். தற்போது எங்களிடம் உள்ள தரவுகளின் அடிப்படையில் தகவல்களை வெளியிட்டோம். அதாவது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் எத்தனை பேர் தடுப்பூசி போடாமல் உள்ளனர், ஐ.சி.யு நோயாளிகளில் எத்தனை பேர் தடுப்பூசி போடாமல் உள்ளனர் என்பதை கணக்கில் வைத்து இதனை வெளியிட்டுள்ளோம்” என்கிறார்.

தடுப்பூசி செலுத்தியும் மரணமா?

“காவல்துறை, மருத்துவம் ஆகியவற்றைச் சேர்ந்தவர்களில் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியும் சிலர் இறந்துள்ளனர். அப்படியானால், அரசின் புள்ளிவிபரம் சரிதானா என்ற கேள்வியையும் சிலர் முன்வைக்கிறார்களே?” என்றோம். “நாங்கள் அதனையும் குறிப்பிட்டுள்ளோம். இறந்தவர்களில் 4 சதவிகிதம் பேர் இரண்டு தவணை தடுப்பூசியும் செலுத்திக்கொண்டவர்கள் என்பது உண்மைதான். அதற்கு மற்ற இணை நோய்கள் ஒரு காரணமாக இருக்கலாம்.

இதில் யோசிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், 87 சதவிகிதம் பேர் தடுப்பூசியே போடாமல் இறந்துள்ளனர் என்பதுதான். ஐ.சி.யுவில் சிகிச்சை பெற்று வரும் 70 சதவிகிதம் பேர் தடுப்பூசி போடாதவர்கள்தான். எனவே, தடுப்பூசி போடுவதால் அதிக நன்மையே கிடைக்கிறது என்பதைத்தான் பார்க்க வேண்டும்” என்கிறார்.