December 3, 2021

உண்மையை உரக்கச் சொல்லும் ஒரே நாளிதழ்

தமிழ்நாடு, குஜராத்தில் இருந்து வெளியேறும் ஃபோர்டு – அரசு என்ன செய்யப் போகிறது?

இந்தியாவில் உள்ள இரண்டு தொழிற்சாலைகளை மூட உள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு அறிவித்துள்ளது. ` கொரோனா தொற்று காலத்தில் கார்களின் விற்பனை அதிகரித்துள்ளதாகக் கூறப்படும் சூழலில் இந்த அறிவிப்பு பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது’ என்கின்றனர் தொழிற்சங்க பிரதிநிதிகள். என்ன நடக்கிறது?

ஆண்டுக்கு 2 லட்சம் கார்கள்

இந்தியாவில் கடந்த 1994 ஆம் ஆண்டு கால்பதித்த ஃபோர்டு நிறுவனம், சென்னை மறைமலை நகரிலும் குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத்தில் உள்ள சனந்த் ஆகிய இடங்களில் கார் தயாரிப்புப் பணியில் இறங்கியது. இதற்காக அப்போது 250 கோடி ரூபாய்க்கும் மேல் முதலீடு செய்யப்பட்டது. இதன்மூலம் சென்னையில் மட்டும் ஆண்டுக்கு 2 லட்சம் கார்களைத் தயாரிக்கும் வகையில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், அதற்கான இலக்கை எட்டவில்லை எனக் கூறப்படுகிறது.

கொரோனா தொற்று உள்பட பல்வேறு காரணங்களால் ஃபோர்டு நிறுவனத்தின் கார் உற்பத்தி கடந்த சில ஆண்டுகளாக சரிவை நோக்கிச் சென்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, மறைமலை நகரில் உள்ள தொழிற்சாலையில் 2 லட்சம் கார்களையும் 3 லட்சம் இன்ஜின்களையும் உற்பத்தி செய்யலாம் என்ற நிலை உள்ளது. ஆனால், இதில் பாதியளவு மட்டுமே அதாவது 50 சதவிகிதம் அளவுக்கு மட்டுமே கார்களை உற்பத்தி செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஃபோர்டு நிறுவனத்தின் கார் விற்பனை சரிவை நோக்கிச் சென்றதையடுத்து இந்தியாவில் உள்ள தொழிற்சாலைகளை மூடுவதாக அந்நிறுவனம் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதிலும், குஜராத்தில் உள்ள தொழிற்சாலையானது, 2022 ஏப்ரல் வரையிலும் மறைமலை நகர் ஆலை அடுத்த ஆண்டு செப்டம்பர் வரையிலும் செயல்படும் என்றும் ட்விட்டர் பதிவில் ஃபோர்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் இந்நிறுவனத்தை நம்பியிருந்த 40,000க்கும் மேற்பட்டோர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

3,500 கோடி டாலர் முதலீடுகள்

அதேநேரம், தனது தயாரிப்புகளை இந்தியாவில் இறக்குமதி செய்து விற்பனை செய்வதோடு மட்டுமல்லாமல், தற்போதுள்ள வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து சேவைகளை வழங்க உள்ளதாகவும் ஃபோர்டு இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த முடிவால் இந்திய அரசின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்ற விவாதமும் கிளம்பியுள்ளது.

மேக் இன் இந்தியா திட்டம்
படக்குறிப்பு,மேக் இன் இந்தியா திட்டம் மூலம் இந்தியாவில் உற்பத்தி செய்ய வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இந்திய அரசு அழைப்பு விடுத்து வருகிறது.

இதுதொடர்பாக ஊடகம் ஒன்றுக்குப் பதில் அளித்துள்ள மத்திய தொழில்துறை அமைச்சக அதிகாரி ஒருவர், ` ஃபோர்டு நிறுவனத்தில் முடிவால் இந்திய வர்த்தகம் ஒருபோதும் பாதிக்கப்படப் போவதில்லை. ஃபோர்டு நிறுவனம் வெளியேறுவது என்பது செயல்பாட்டு ரீதியிலான காரணங்களை உள்ளடக்கியதாக உள்ளது’ எனத் தெரிவித்துள்ளார். கடந்த ஆறு ஆண்டுகளில் அமெரிக்காவில் இருந்து 3,500 கோடி டாலருக்கும் அதிகமான முதலீடுகள் இந்தியாவுக்கு வந்துள்ளதாகவும் அந்த அதிகாரி சுட்டிக் காட்டியுள்ளார்.

`இது ஒரு கடினமான முடிவுதான். இதனை சரிசெய்வதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டும் நீண்டகாலத்துக்கு லாபம் ஈட்டும் வழியை எங்களால் அடைய முடியவில்லை. இருப்பினும் நன்கு ஆராய்ந்து பங்குதாரர் மற்றும் முதலீட்டாளர்களுக்கு தொடர்ந்து வருமானத்தை அளிப்போம்’ என்கிறார், ஃபோர்டு இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அனுராக் மெக்ரோத்ரா. அதேநேரம், ஃபோர்டு நிறுவனத்தில் சுமார் 2,000 கோடி வரையில் முதலீடு செய்துள்ள டீலர்களும் இந்த அறிவிப்பால் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

சென்னையில் 20,000 பேருக்கு பாதிப்பு

“தமிழ்நாட்டில் ஃபோர்டு நிறுவனம் மூடப்படுவதால் ஏற்படப் போகும் விளைவுகள் என்ன?” என சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தின் மாநில துணைப் பொதுச்செயலாளர் கண்ணனிடம் பிபிசி தமிழுக்காக கேட்டோம்.

“சென்னையில் மட்டும் 7,000 தொழிலாளர்கள் நேரடியாக பாதிக்கப்படுவார்கள். தவிர, அங்கு பணிபுரியும் பயிற்சி தொழிலாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள், பேருந்து, கேன்டீன், தோட்ட வேலை ஆகிய பிரிவுகளில் 3,000 தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களுக்கும் இதனால் பெரும் பாதிப்பு ஏற்படும். மேலும், ஃபோர்டு சென்னை நிறுவனத்துக்கு உதிரி பாகங்களைத் தயாரித்துத் தரக்கூடிய பணியில் பல நூற்றுக்கணக்கான தொழில் நிறுவனங்கள் உள்ளன. அந்தவகையில் பார்த்தால் 15,000 முதல் 20,000 பேர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது” என்கிறார்.

Ford India

தொடர்ந்து பிபிசி தமிழிடம் பேசியவர், “ சென்னையிலும் குஜராத்திலும் உற்பத்தியை நிறுத்துவதாக ஃபோர்டு நிறுவனம் அறிவித்துள்ளது. இப்படித்தான் நோக்கியா, ஃபாக்ஸ்கான் ஆகிய நிறுவனங்களும் அறிவித்தன. அவ்வாறு அறிவிக்கும்போது தொழிலாளர்களின் சீனியாரிட்டியை கணக்கிட்டு இழப்பீட்டைக் கொடுப்பார்கள். இந்த இழப்பீட்டுத் தொகை, அவர்களின் எதிர்காலத்துக்கான வேலைவாய்ப்பைப் பாதுகாக்க உதவப் போவதில்லை. கடந்த சில வாரங்களாக மகிந்திரா அண்ட் மகிந்தரா நிறுவனத்துடன் ஃபோர்டு நிறுவனத்தின் பிரதிநிதிகள் பேசிக் கொண்டிருப்பதாகத் தகவல் வெளியானது.

ஏன் இவ்வளவு முரண்பாடு?

மகிந்திரா நிறுவனம் அதனை வாங்க முற்படவில்லை. பின்னர், டாடா மோட்டார் நிறுவனம் வாங்க உள்ளதாகவும் செவிவழிச் செய்திகள் வெளிவந்தன. ஒருபுறம் மேக் இன் இந்தியா கூட்டங்களையும் உலக முதலீட்டாளர் மாநாடுகளையும் அரசு நடத்தி வருகிறது. கடந்த ஆட்சியில் முன்னாள் முதல்வர் பழனிசாமி, பிரிட்டன், அமெரிக்கா எனப் பயணம் செய்து முதலீடுகளை ஈர்க்கச் சென்றதாகக் கூறினார். இப்படிப்பட்ட சூழலில் இந்தியாவில் இருந்து இந்த நிறுவனங்கள் ஏன் வெளியேறுகின்றன? இதன்மூலம் மேற்கண்ட முழக்கங்களுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்பது தெளிவாகிறது.

இதில், இன்னொரு முரண்பட்ட செய்தி என்னவென்றால், இந்தியாவில் கடந்த 2021 ஏப்ரல் மாதம் முதல் ஜூன் வரையில் ஏற்றுமதியாகியுள்ள கார்களின் எண்ணிக்கை மட்டும் 14 லட்சம் ஆகும். இவையெல்லாம் இணையத் தளங்களில் வந்த செய்திகள்தான். 14 லட்சம் கார்களை கடந்த சில மாதங்களில் ஏற்றுமதி செய்துள்ளனர் என்றால், அவையெல்லாம் கடந்த காலங்களில் தேங்கிக் கிடந்த கார்களாகவும் இருக்கலாம். இந்தியாவில் கார்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது.

யாருக்கெல்லாம் பாதிப்பு?

அதிலும், குறிப்பாக கோவிட் சூழலில் சொந்த வாகனங்களில் பயணிப்பதற்காக மக்கள் கார்களை வாங்கியுள்ளனர். பொதுப் போக்குவரத்தை தவிர்ப்பதற்காகவும் இப்படியொரு முடிவை எடுத்துள்ளனர். இப்படிப்பட்ட நிலையில், ஃபோர்டு நிறுவனத்தை மூடுவது என்பது சந்தைப்படுத்துவதற்கும் உற்பத்திக்கும் இடையில் முரண்பாடு இருப்பதைத்தான் காட்டுகிறது. இதனை சரிசெய்ய முற்படாமல் தொழிலாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவது என்பது சரியான ஒன்றல்ல. எனவே, ஃபோர்டு நிறுவனத்தைக் கைவிடும் முடிவை தவிர்க்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் இறங்க வேண்டும்” என்கிறார்.

FordIndia

“ உற்பத்தி குறைவும் விற்பனை சரிவும்தான் பிரதான காரணமாகச் சொல்லப்படுகிறதே?” என்றோம். “ அவர்களின் முழு உற்பத்தி என்பது சென்னையில் ஆண்டுக்கு 2 லட்சம் கார்களையும் குஜராத்தில் இரண்டரை லட்சம் கார்களையும் உற்பத்தி செய்ய வேண்டும். அதற்கான இலக்கை நோக்கி இவர்கள் நகரவில்லை. சென்னையில் ஆண்டுக்கு 1 லட்சம் கார்களைத்தான் தயாரித்துள்ளனர். முழு உற்பத்தியை நோக்கி நகராமல் போனதற்கு தொழிலாளர்கள் காரணமில்லை. இப்படிப்பட்ட சூழலில் உற்பத்தியை நிறுத்துவது என்பது சரியான ஒன்றல்ல.

ஃபோர்டு நிறுவனத்தின் முடிவை எதிர்த்து தொடக்கமாக சில போராட்டங்களை முன்னெடுக்க இருக்கிறோம். இது தொழிலாளர்கள் மட்டுமே சம்பந்தப்பட்ட பிரச்னை அல்ல. ஃபோர்டு நிறுவனத்தின் முடிவால் அந்தப் பகுதியில் உள்ள ரியல் எஸ்டேட் உள்பட பல தொழில்கள் பாதிக்கும். தற்போது மாதத்துக்கு 240 கோடி ரூபாயை சம்பளமாக மட்டுமே வழங்கி வருகின்றனர். இதனால் பல தரப்பினரும் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கியே எங்களின் போராட்டம் இருக்கும்” என்கிறார்.

தமிழ்நாடு அரசு என்ன செய்யப் போகிறது?

“ஃபோர்டு நிறுவனத்தின் முடிவை தமிழ்நாடு அரசு எப்படி எதிர்கொள்ளப் போகிறது?” என தி.மு.க செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் வழக்கறிஞர் ராஜீவ்காந்தியிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.

“அரசு நிர்வாகம் போதிய வசதிகளை செய்து தராத காரணத்தால் ஃபோர்டு நிறுவனம் இப்படியொரு முடிவை எடுக்கவில்லை. குஜராத்திலும் தங்களது உற்பத்தியை நிறுத்துவதாக அவர்கள் அறிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் மின்சாரம், குடிநீர் விநியோகம் போன்றவற்றில் சிக்கல்கள் ஏற்பட்டால் அரசு உடனடியாக சரிசெய்து தரும். ஃபோர்டு தொழிலாளர்களின் கோரிக்கையை முதலமைச்சரின் ஆலோசனையின் பேரில் தொழில்துறை சார்பில் உரிய பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன” என்கிறார்.

மேலும், “ தற்போது முதல்கட்ட தகவல்கள் மட்டுமே வந்திருப்பதால் இதுதொடர்பாக நாங்கள் விரிவான கருத்துகளை தெரிவிப்பதற்கு வாய்ப்பில்லை. இங்குள்ள புறச்சூழல்கள், விற்பனை ஆகியவற்றையொட்டியே இப்படியொரு அறிவிப்பு வெளிவந்துள்ளதாகப் பார்க்கிறோம். அங்கு பணிபுரியும் தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கு அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கும். அரசின் லாபத்தைத் தாண்டி மக்களுக்கான வேலைவாய்ப்பு என்பது மிக முக்கியமானது. ஃபோர்டு நிறுவனம் வெளியேறுவதால் நிச்சயமாக பாதிப்பினை ஏற்படுத்தும். அவர்களது சொந்தக் காரணங்களைத் தீர்த்து வைக்க முடியும் என்றால் அரசு நிச்சயமாக உதவி செய்யும்” என்கிறார்.