October 15, 2021

உண்மையை உரக்கச் சொல்லும் ஒரே நாளிதழ்

தமிழ்நாடு அரசியல்: உள்ளாட்சி தேர்தலில் சமரசம் செய்து கொண்ட கட்சிகள் – திமுக கூட்டணியில் என்ன நடக்கிறது?

உள்ளாட்சித் தேர்தல் இடப்பங்கீடு விவகாரத்தில் தி.மு.க தலைமை மீது அதன் கூட்டணிக் கட்சிகள் கடும் அதிருப்தியில் உள்ளன. `கூட்டணியில் கேட்ட இடங்கள் கிடைக்கவில்லையென்றாலும் இணைந்து செயல்பட்டு வருகிறோம். இந்தப் பேச்சுவார்த்தையில் மகிழ்ச்சியும் உள்ளது, வருத்தங்களும் உள்ளன’ என்கிறார் வி.சி.க துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு. என்ன நடந்தது?

தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் வரும் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக கடந்த 15 ஆம் தேதி முதல் வேட்புமனுத் தாக்கல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதலாக, தி.மு.கவும் அ.தி.மு.கவும் கூட்டணிக் கட்சிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன.

அ.தி.மு.க அணியில் இடம்பெற்றிருந்த பா.ம.க, தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துவிட்டாலும் சில இடங்களில் செல்வாக்கின் அடிப்படையில் அ.தி.மு.கவுடன் இணைந்து போட்டியிட உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேநேரம், ஒன்பது மாவட்ட உள்ளாட்சித் தேர்தலில் கள்ளக்குறிச்சியில் மட்டும் அ.தி.மு.க-பா.ஜ.க இடையே உடன்பாடு எட்டப்படவில்லை. இதையடுத்து, அ.தி.மு.க தலைமையிடம் பா.ஜ.க நிர்வாகிகள் தொடர்ந்து பேசி வருகின்றனர்.

விசிக தலைவர் தொல். திருமாவளவன்
படக்குறிப்பு,விசிக தலைவர் தொல். திருமாவளவன்

வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் (22 ஆம் தேதி) முடிவடைந்த நிலையில், தி.மு.க, அ.தி.மு.க தரப்பில் மாவட்ட நிர்வாகிகள் வேலையில் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் கூட்டணிக் கட்சிகளை தி.மு.க கையாண்ட விதம் அதிர்ச்சியளிப்பதாக காங்கிரஸ் நிர்வாகிகள் பேசி வருகின்றனர்.

ஐந்து விரலும் தி.மு.கவுக்கா?

“ஒரு ஒன்றியத்தில் 24 உறுப்பினர்கள் இருந்தால் அதில் ஒரு இடத்தைக்கூட தி.மு.க கொடுக்க முன்வரவில்லை என்பது வேதனையான விஷயம். இத்தனைக்கும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் சேர்மனாக இருந்த பகுதிகளிலும் இதே நிலைதான் நீடித்தது. கருணாநிதி உயிரோடு இருந்த வரையில் கூட்டணிக் கட்சிகளை நல்ல முறையில் அணுகினார். இன்றைக்கு அதுபோல் இருக்கிறதா என்பது கேள்விக்குறி. கூட்டணிக் கட்சிகள் இருந்தால்தான் பலம். ஐந்து விரலை எடுத்துக் கொள்ள வேண்டும் என தி.மு.க நினைக்கிறது. ஆனால், எங்களுக்கு உள்ளங்கை அளவுக்காவது இடங்களைக் கொடுத்திருக்கலாமே?” எனக் கேள்வியெழுப்புகிறார், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுச்செயலாளர் ஜி.கே.முரளிதரன்.

தொடர்ந்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், “தி.மு.க மாவட்ட செயலாளர்கள் பலரும், கூட்டணிக் கட்சிகளை மதிக்கவே இல்லை. வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் ஆகியவற்றில் சரியானபடி இடங்களை ஒதுக்கவில்லை. தென்காசியில் மட்டும் ஓரளவுக்கு இடங்களை ஒதுக்குவதற்குக் காரணம், அங்கு பழனி நாடாரின் செல்வாக்குதான். தென்காசியில் 24 ஒன்றிய கவுன்சிலர் இடங்களை ஒதுக்கியுள்ளனர். 150 ஒன்றிய கவுன்சிலர்கள் உள்ள இடங்களில் 24 என்பதே குறைவுதான். மற்ற மாவட்டங்களில் மிகக் குறைவான இடங்களே ஒதுக்கப்பட்டன” என்கிறார்.

மேலும், “எங்கள் கட்சியின் வாக்குவங்கி அதிகரித்துள்ளது. கிராமங்களில் நாங்கள் வலுவாக இருக்கிறோம். `எந்த ஊரில் காங்கிரஸ் உள்ளது?’ என யாரும் கேட்க முடியாது,” என்கிறார்.

“உங்கள் குமுறலை தலைமையிடம் தெரிவித்திருக்கலாமே?” என்றோம்.

“கூட்டணிப் பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது என தலைமைக்கும் தெரியும். `இதையும் கடந்து போக வேண்டும், வேற வழியில்லை’ என மேலிடத்தில் கூறுகின்றனர். கட்சியின் அடிமட்ட நிர்வாகிகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் என்பது முதுகெலும்பாக உள்ளது. இதையும் இழந்தால் சிறு கட்சிகளைப் போல காங்கிரஸ் மாறிவிடும் என்ற அபாயத்தில் பேசுகிறேன். இது தொண்டர்கள் நிற்கக் கூடிய தேர்தல். எங்கள் கட்சியில் கருத்து சொல்லக் கூடிய அடுத்தகட்ட தலைவர்கள் எல்லாம், உள்ளாட்சித் தேர்தல் நேரத்தில் எங்கே போனார்கள் என்றே தெரியவில்லை” என்கிறார்.

தரவுகளைப் பட்டியலிட்ட தி.மு.க

காங்கிரஸ் கட்சியைப் போல விடுதலைச் சிறுத்தைகள், ம.தி.மு.க, சி.பி.ஐ, சி.பி.எம் ஆகிய கட்சிகளும் அதிருப்தியடைந்துள்ளன. குறிப்பாக, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தி.மு.க நிர்வாகிகளுடன் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளனர். அப்போது பேசிய தி.மு.க நிர்வாகி ஒருவர், ` ஒவ்வொரு வார்டிலும் கடந்த 10 வருடங்களாக கட்சிக்காரர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். அவர்களுக்கு நாங்கள் வாய்ப்பு தர வேண்டும். எங்களுக்கு அந்தந்த வார்டுகளில் செல்வாக்குள்ளவர்கள் இருக்கிறார்கள். நீங்கள் ஆள்களை தேடிப் பிடித்துக் கொண்டு வர வேண்டும்’ எனக் கூறியுள்ளனர்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி
படக்குறிப்பு,தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி

மேலும், “ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 20 லட்சம் வரையில் செலவு செய்ய வேண்டும். உங்கள் கட்சியில் அதற்குத் தகுதியான ஆள்கள் இருக்கிறார்களா, ஒருவேளை போட்டியிட்டுத் தோற்றுவிட்டால் சேர்மன் பதவியை பிடிப்பதிலும் எங்களுக்கு சிக்கல் ஏற்படும். அப்படியானால் வெற்றி பெறும் வேட்பாளருக்குத்தானே கொடுக்க முடியும்’ எனவும் கூறியுள்ளனர்.

இதுதவிர, `வார்டு வாரியாக எந்த வீட்டில் யார் இருக்கிறார்கள், அவர்கள் வாக்குகள் யாருக்குப் போகும், அவர் எந்தக் கட்சியின் அனுதாபி, அந்த வீட்டில் மகன் ஓட்டு யாருக்கு, அப்பா ஓட்டு யாருக்கு?’ என்றெல்லாம் துல்லியமான தரவுகளை தி.மு.கவினர் காட்டியுள்ளனர். அதாவது, `நாம்தான் கவுன்சிலர், சேர்மன்’ என இலக்கை நிர்ணயித்து தி.மு.கவினர் வேலை பார்த்துள்ளனர். இதனை வி.சி.க உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் எதிர்பார்க்கவில்லை எனவும் கூறப்படுகிறது. ஒருவழியாக, செங்கல்பட்டு மாவட்டத்தில் திருப்போரூர், திருக்கழுகுன்றம் என இரண்டு ஒன்றிய கவுன்சிலர் இடங்களை வி.சி.கவுக்கு ஒதுக்கியுள்ளனர். மற்ற மாவட்டங்களில் சொல்லிக் கொள்ளும்படியாக இடங்கள் கிடைக்கவில்லை என்கிறார்கள்.

அதிருப்தியில் ம.தி.மு.க, இடதுசாரிகள்

வி.சி.கவுக்கு இந்த நிலைமை என்றால், ம.தி.மு.கவும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளது. பல இடங்களில் அவர்கள் விரும்பிய இடங்கள் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. குறிப்பாக, செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்தில் ம.தி.மு.கவுக்கு இடங்களை ஒதுக்கவில்லை. திருப்போரூர் ஒன்றிய ம.தி.மு.க செயலாளர் லோகநாதன், சிறுங்குன்றம் ஒன்றிய கவுன்சிலர் பதவியை எதிர்பார்த்தார். அது அவரின் சொந்த ஊராகவும் இருக்கிறது. அவர் பெயர் பட்டியலில் இருந்தும் கிடைக்கவில்லை. `நமக்கு பெரிதாக மரியாதை கொடுக்கவில்லை. நாம் வருவதை அவர்கள் விரும்பவில்லை’ என்ற குமுறல் ம.தி.மு.கவினரிடம் உள்ளது.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ
படக்குறிப்பு,மதிமுக பொதுச் செயலாளர் வைகோ

இவர்களைத் தவிர, சி.பி.ஐ, சி.பி.எம் கட்சியினரும் தி.மு.கவின் மாவட்ட செயலாளர்களிடம் போராடியே இடங்களைப் பெற்றனர். அதிலும், பல்வேறு அதிருப்திகளை எதிர்கொண்டுள்ளனர். இதுதொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய சி.பி.எம் கட்சியின் மாநில நிர்வாகி ஒருவர், “ஒன்பது மாவட்டங்களிலும் பேச்சுவார்த்தை முடிந்துவிட்டது. தி.மு.கவோடு கூட்டணி உறவு சரியாக இருக்க வேண்டும் என்பதற்காக சமரசமாகச் சென்றோம். நாங்கள் 4 இடங்களைக் கேட்டால் அதில் ஓர் இடத்தை ஒதுக்கினார்கள். சில இடங்களில் அதையும் தரவில்லை.

ஆளும்கட்சியாக இருப்பதால் அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என நினைக்கின்றனர். நாங்கள் செல்வாக்காக உள்ள இடங்களையும் அவர்களுக்கு விட்டுக் கொடுத்தோம். இதில் வருத்தம் இருக்கத்தான் செய்கிறது. தி.மு.கவின் அணுகுமுறையில் சற்று மாற்றம் வந்துள்ளது. அதாவது, தங்களின் நலன்களைப் பாதுகாத்துக் கொண்ட பிறகே மற்றவர்களின் நலன் என்பதில் அவர்கள் தெளிவாக இருப்பதை இந்தப் பேச்சுவார்த்தையில் உணர்ந்தோம்,” என்கிறார்.

மகிழ்ச்சியும் வருத்தமும்

“உள்ளாட்சி இடப்பங்கீட்டில் அதிருப்தி நிலவியது உண்மையா?” என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசுவிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். “ உள்ளாட்சி அமைப்புகளில் எங்கள் கட்சியின் நிர்வாகிகள் அதிகளவில் போட்டியிட வேண்டும் என விரும்பினார்கள். ஆனால், அந்த இடங்களில் போட்டியிட முடியாத வருத்தங்கள் உள்ளன. நாங்கள் வெற்றி பெறுவதற்கான இடங்கள் அவை. அங்கு போட்டியிட முடியாத அளவுக்கு நெருக்கடி இருந்தது. ஆனாலும், மாவட்ட அளவில் பேசி அதனை ஒழுங்குபடுத்தினோம். கூட்டணியில் கேட்ட இடங்கள் கிடைக்கவில்லையென்றாலும் இணைந்து செயல்பட்டு வருகிறோம். ஒரு சில மாவட்டங்களில் நிறைவாகவும் ஒரு சில மாவட்டங்களிலும் குறைவாகவும் உள்ளது. சில இடங்களில் மகிழ்ச்சியும் உள்ளது, வருத்தமும் உள்ளது,” என்றார்.

குறைத்து மதிப்பிடும் எண்ணம் இல்லை

கூட்டணிக் கட்சிகளின் குமுறல்கள் தொடர்பாக தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.

தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி
படக்குறிப்பு,தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி

“இதுதொடர்பாக மாவட்ட செயலாளர்களிடம் கருத்து கேட்ட பிறகே பேச முடியும்” என்றார்.

இதையடுத்து, தி.மு.க சட்டத்துறை இணைச் செயலாளர் வீ.கண்ணதாசனிடம் பேசினோம். “ இது சட்டமன்றம், நாடாளுமன்ற தேர்தல் போல இல்லை. பத்து ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாமல் பதவிக்கு வந்த பிறகு, உள்ளாட்சி அமைப்புகளில் அதிகப்படியான இடங்களில் அதிகாரத்தில் இருக்க வேண்டும் என நாங்கள் நினைப்பது இயல்பான ஒன்றுதான்,” என்கிறார்.

மேலும், “புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்பில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிர்வாகி ஒருவர், அ.தி.மு.க பக்கம் சென்றுவிட்டார். இதுபோல் நடக்காமல் தடுப்பதற்கு இதைவிட வேறு வழியில்லை. இந்தத் தேர்தலில் அ.தி.மு.க, பா.ஜ.க ஆகிய கட்சிகளுக்கு எந்தவித வாய்ப்பும் சென்றுவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். அந்தந்த இடங்களில் வெற்றி வாய்ப்புள்ள இடங்களைக் கணக்கிட்டு சதவிகித அடிப்படையில் கேட்பதையும் ஏற்க முடியாது. தென்காசியில் காங்கிரஸ் கட்சிக்கு சற்று செல்வாக்கு இருப்பதால் அங்கு கொடுத்தனர். மற்ற இடங்களில் உள்ள நிலவரங்களையும் கவனிக்க வேண்டும். இதற்காக மற்றவர்களை குறைத்து மதிப்பிடும் எண்ணம் எங்களுக்கு இல்லை. தேர்தல் என வரும்போது அங்கு வெற்றி மட்டுமே பார்க்கப்படும்,” என்கிறார்.