October 15, 2021

உண்மையை உரக்கச் சொல்லும் ஒரே நாளிதழ்

தங்க நகை கடன் கவரிங் நகைக்கு, கொங்கு மண்டலத்துக்கு அதிக சலுகை – எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் மோசடி நடந்ததா?

“இப்படியெல்லாம் மோசடியாக கடன் கொடுக்க முடியுமா?” என அதிர்ச்சியில் உறைய வைக்கிறது, தமிழ்நாடு கூட்டுறவு வங்கிகளில் நடந்த நகைக்கடன் முறைகேடுகள். “இரவு 8 மணிக்கு மேல் எல்லாம் நகைக்கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. தேர்தலை மையமாக வைத்து இந்த மோசடியை அ.தி.மு.க அரங்கேற்றியுள்ளது,” என்கின்றன கூட்டுறவுத் துறை சங்கங்கள்.

இந்த விவகாரத்தில் மோசடி நடந்திருந்தால் துறை ரீதியான விசாரணையை நடத்தட்டும். அதில் ஈடுபட்ட “அதிகாரிகள்” மீது நடவடிக்கை எடுக்கட்டும் என்கிறது அதிமுக தரப்பு. என்ன நடந்தது?

51 விதமான தகவல்கள்

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, “கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரையில் நகையை அடமானம் வைத்துக் கடன் பெற்றவர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படலாம்’ என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் சட்டசபையில் விதி எண் 110ன்கீழ் நகைக்கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்பை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார். அப்போது பேசிய அவர், “அ.தி.மு.க ஆட்சியில் பயிர்க்கடன் தள்ளுபடியில் 2,42,783 பேருக்கு 2,749 கோடி ரூபாய் தவறாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதே தவறுகள் நகைக்கடன்களிலும் நடைபெற்றுள்ளது,’ என்றார்.

மேலும், “நகைக்கடன்கள் பற்றிய முழு புள்ளிவிபரங்களும் சேகரிக்கப்பட்டு விரிவான ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, ஒரு குடும்பத்துக்கு 5 சவரன் நகை உள்பட உண்மையான ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தள்ளுபடி செய்யப்படும். நகைக்கடன் தொடர்பாக தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு வெளியானவுடன், முறையற்ற வழியில் தள்ளுபடி பெற வேண்டும் என்ற நோக்கில் சில மாவட்டங்களில் நகைக்கடன்களைப் பெற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதற்குக் காரணமான சங்கங்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின்
படக்குறிப்பு,தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின்

இதையடுத்து, ஒரு குடும்பத்தில் உள்ள நபர்கள் பெற்ற அனைத்து நகைக்கடன்களின் விவரம், கடன் கொடுத்த கூட்டுறவு சங்கங்களின் விவரம், கடன் பெற்ற நாள், கடன் தொகை, கணக்கு எண், வாடிக்கையாளர் தகவல் குறிப்பு எண் உள்பட 51 விதமான தகவல்கள் சேகரிக்கப்பட்டு விரிவான ஆய்வை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

கவரிங் நகைகளுக்கு நகைக்கடன்

இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பேசிய கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, “5 சவரனுக்குக்கீழ் நகை கடன் தள்ளுபடி வழங்குவதற்கு அரசு 6,000 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. கடந்த அ.தி.மு.க ஆட்சியில் 25,000 ரூபாய் கடன் வழங்க வேண்டிய நிலத்துக்கு 2 லட்ச ரூபாய் வரையில் கடன் கொடுத்துள்ளனர். போலியான பயிரைக் காட்டி, நிலத்தின் அளவையும் உயர்த்தி கடன் வழங்கியுள்ளனர். அதேபோல், நகை கடனிலும் ஏராளமான தவறுகள் நடந்துள்ளன” என்றார்.

“நகைகளை அடகு வைக்காமலேயே நகைக்கடன், ஒரே ஆதார் எண்ணில் பல லட்சம் கடன் பெற்றது, கவரிங் நகைகளுக்குக் கடன் என முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. இந்த விவகாரத்தில் கிலோ கணக்கில் நகைக்கடன் மோசடி நடந்துள்ளது. இதுதொடர்பாக, மாநிலத்தில் உள்ள 4,451 கூட்டுறவு சங்கங்களில் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்த மோசடிக்குக் காரணமானவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” எனவும் அமைச்சர் ஐ.பெரியசாமி குறிப்பிட்டார்.

ஏ.ஏ.ஒய் (AAY) கார்டுதாரர்களுக்கு கடன்

நகை கடன் மோசடி தொடர்பாக, தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளனத்தின் (சிஐடியு) மாநிலத் தலைவர் ஏ.கிருஷ்ணமூர்த்தியிடம் பேசினோம்.

“நகைக்கடன்களை வழங்கியதில் நூதனமான முறையில் பல்வேறு மோசடிகள் அரங்கேறியுள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்தில் அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்தின்கீழ் (AAY) குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு 4 லட்ச ரூபாய் வரையில் நகைக்கடன் கொடுத்துள்ளனர். இந்த கார்டுதாரர்கள் மாதம் 35 கிலோ அரிசியை வாங்கிக் கொண்டிருப்பவர்கள். இந்த அட்டையின்கீழ் விதவைகள் உள்பட தனி நபர்கள் மட்டும்தான் வர முடியும்.

ஏ.கிருஷ்ணமூர்த்தி
படக்குறிப்பு,ஏ.கிருஷ்ணமூர்த்தி

இது தொடர்பாக, 15.9.2021 அன்று கன்னியாகுமரி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் முத்துக்குமாரசாமி, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளருக்கு எழுதிய கடிதத்தில், `முஞ்சிறை தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி மற்றும் கல்குளம் விளவங்கோடு தாலுகா வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கம் ஆகியவற்றில் ஏஏஓய் அட்டைதாரர் சுவாமிநாதன் என்பவருக்கு அதிகளவில் நகைக்கடன் வழங்கப்பட்டுள்ளது. இதே சங்கத்தில் ராஜ்குமார் என்பவருக்கு பதிவாளரின் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள உச்ச வரம்பைவிடவும் 22,64,700 ரூபாய் அதிகப்படியாக நகைக்கடன் வழங்கப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.

இதே வரிசையில், தக்கலை சரகத்தில் செயல்படும் கீழ்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் லத்தீஷ் என்பவருக்கு பதிவாளரின் சுற்றறிக்கைக்கு முரணாக அதிகளவில் கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் கூட்டுறவுத்துறையில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு வேண்டிய நபர்கள், சொசைட்டிகளில் பணியாற்றும் ஊழியர்களின் உறவினர்கள் எனப் பலருக்கும் கடன் வழங்கப்பட்டுள்ளது. ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு 5 சவரன் தள்ளுபடி என்றால் ஏற்றுக் கொள்ளலாம். ஒரே குடும்பத்தில் 5 பேருக்குத் தள்ளுபடி செய்வதையெல்லாம் ஏற்க முடியாது” என்கிறார்.

கொங்கு மண்டலத்துக்கு அதிக சலுகைகளா?

தொடர்ந்து பேசிய கிருஷ்ணமூர்த்தி, “ தேர்தல் நேரத்தில் கொங்கு மண்டலத்தில் அதிக வாக்குகளைப் பெறுவதற்காக கோவை, ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களில் அதிகளவில் கடன் கொடுக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்கங்களில் மாலை 5 மணிக்கு வேலைநேரம் முடிந்தாலும் இரவு 8 மணிக்கெல்லாம் கடன் கொடுத்துள்ளனர். நகை கடன் கொடுப்பதற்கு சங்கங்களில் பணமே இல்லை. பணம் கொடுக்காமல் நகையை அடமானம் வைத்துவிட்டு அந்தப் பணத்தை அதே வங்கியில் டெபாசிட் செய்தது போலவும் கணக்கு காட்டியுள்ளனர்.

நகை கடன் பெறுகிறவர்கள், மத்திய கூட்டுறவு வங்கியில் சி.சி (Cash credit) வாங்கியிருக்க வேண்டும். கடன் பெறுவதற்குத் தகுதியுள்ள நபர்தானா என்பதை அறிவதற்கான சான்று இது. மத்திய கூட்டுறவு வங்கியின் கள மேலாளர்கள், கடன் அளவு எவ்வளவு, எவ்வளவு கடன் கொடுக்கலாம் என்பதையெல்லாம் ஆய்வு செய்திருக்க வேண்டும். அவர்கள் அவ்வாறு செய்திருந்தால் இந்தளவுக்கு முறைகேடுகள் நடந்திருக்க வாய்ப்பில்லை. இவையெல்லாம் தேர்தலையொட்டி நடந்த சம்பவங்கள். தமிழ்நாடு அரசின் நடவடிக்கையால் ரூ. 6,000 கோடி அளவுக்குத் தள்ளுபடி கிடைக்கலாம்” என்கிறார்.

கொங்கு மண்டலத்துக்கு அதிக சலுகைகளா?

மேலும், “இதில் வேதனையான விஷயம் என்னவென்றால், கூட்டுறவு வங்கிகளில் நகை மதிப்பீட்டாளர் பணியிடத்தில் ஒப்பந்த ஊழியர்களே பணியாற்றுகின்றனர். இவர்கள் 2 அல்லது 3 வங்கிகளுக்கு பொறுப்பாளர்களாக உள்ளனர். சென்னையில் மாநில கூட்டுறவு வங்கியிலேயே நகை மதிப்பீட்டில் மோசடி நடந்தது கண்டறியப்பட்டது. அதன்பிறகு பல்லாவரம் கிளையிலும் போரூர் கிளையிலும் போலி நகைகள் இருந்தது கண்டறியப்பட்டது. நகை மதிப்பீட்டுப் பணியில் ஒப்பந்த ஊழியர்களாக இருப்பவர்கள் வெளியில் உள்ளவர்களோடு அவர்கள் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது.

எனவே, நகை மதிப்பீட்டாளர் பணியிடத்துக்கு நிரந்தர பணியாளர்களை அரசு நியமிக்க வேண்டும். கூட்டுறவு வங்கிகளில் நடந்த நகை மோசடி தொடர்பாக இணைப் பதிவாளர்களும் துணைப் பதிவாளர்களும் தீவிர ஆய்வு நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சரைவிட பணியாளர்களே சிக்குவதற்கு அதிகம் வாய்ப்புள்ளது” என்கிறார்.

அமைச்சருக்கு என்ன அவசியம்?

நகை கடன் மோசடி தொடர்பாக தி.மு.க அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாக, அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் கோவை மகேஸ்வரியிடம் பேசினோம். `

மகேஸ்வரி
படக்குறிப்பு,மகேஸ்வரி

“நகைக்கடன் தள்ளுபடியை பெயரளவுக்குத்தான் தி.மு.க அரசு செயல்படுத்தி வருகிறது. அதில் நிறைய விதிமுறைகளை கொண்டு வந்துள்ளனர். நகைக்கடன் பெற்ற அனைவருக்குமே அவர்கள் தள்ளுபடி என்ற அறிவிப்பை நடைமுறைப்படுத்தவில்லை. 5 சவரன் நகைகளுக்குக்கீழ் வாங்கியிருந்தால் தள்ளுபடி என்றனர். பின்னர், அனைவருக்கும் தள்ளுபடி எனக் கூறிவிட்டுத்தான் மக்களிடம் வாக்குகளைப் பெற்றனர். அதில் இருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காக முந்தைய அரசின் மீது பழி சுமத்துகிறார்கள்,” என்கிறார்.

தொடர்ந்து பேசுகையில், “நகை கடன் தள்ளுபடி விவகாரத்தில் ஏழை மக்களை ஏமாற்றுவதற்காக பழைய ஆட்சியை பகடைக்காயாக தி.மு.க பயன்படுத்துகிறது. இந்த விவகாரத்தில் மோசடி நடந்திருந்தால் துறைரீதியான விசாரணையை நடத்தட்டும். அதில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கட்டும். இதுபோன்ற நடவடிக்கைகள் எல்லாம் கூட்டுறவுத்துறைக்கு ஒன்றும் புதிதல்ல. சொல்லப் போனால், நகைக்கடன் தள்ளுபடியை காலதாமதம் செய்யும் முயற்சியில் தி.மு.க அரசு ஈடுபட்டுள்ளது. இப்போது இதைச் சொல்ல வேண்டிய அவசியம் அமைச்சருக்கு ஏன் வந்தது?” என்கிறார்.

மேலும், “நகைக்கடன் தள்ளுபடி எப்போது என மக்கள் கேட்கிறார்கள். உண்மையில் இந்த விவகாரத்தில், தி.மு.கவினர் மீதுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் பிரசாரத்தின்போது, `அடுத்த ஆட்சி நம்முடையதுதான். காது, கழுத்தில் உள்ளதை எல்லாம் கொண்டு போய் அடமானம் வையுங்கள், நாங்கள் வந்தவுடன் மீட்டுக் கொள்ளலாம்’ எனப் பேசி மக்கள் தங்களின் நகைகளை அடகு வைக்கத் தூண்டியது இவர்கள்தான். இப்போது கூறும் விதிமுறைகளை எல்லாம் அப்போது ஏன் கூறவில்லை. இவர்களின் தவற்றை மறைக்க அ.தி.மு.க மீது வீண்பழி சுமத்தி தப்பிக்கப் பார்க்கிறார்கள்” என்கிறார்.