October 18, 2021

உண்மையை உரக்கச் சொல்லும் ஒரே நாளிதழ்

தங்க நகைக்கடன் மோசடியால் சிக்கலில் அ.தி.மு.க: இல்லாத நகைக்குக் கடன்; ஒரே ஆதாருக்கு 300 கடன்கள்

நகைக்கடன் மோசடி தொடர்பாக வெளிவரும் தகவல்கள், தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. ` நகைகளை ஆய்வு செய்தபோது 2 கோடி மதிப்புள்ள நகைகள் எனக் கூறிவிட்டு அதற்கான பொட்டலங்களே இல்லாமல் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது’ என்கின்றனர் கூட்டுறவுத் துறை அதிகாரிகள்.

நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற நம்பிக்கையில் 43 லட்சம் பேர் காத்திருந்தனர். தற்போது நகைக்கடனில் ஏராளமான நிபந்தனைகள் விதிக்கப்படுவதால் அனைத்து மக்களும் பலன் பெறுவதற்கு வாய்ப்பில்லை என்கிறார் முன்னாள் முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி.நகைக்கடன் மோசடி நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் அடுத்தகட்டம் என்ன?

காலியான நகைப் பொட்டலங்கள்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின்போது, `நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும்’ என தி.மு.க தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. அதன்படி, 5 சவரனுக்குக்கீழ் நகை அடமானம் வைத்தவர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. அந்தவகையில், ரூ.6,000 கோடி நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதுதொடர்பான அறிவிப்பை சட்டப்பேரவையில் வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின், ` நகைக்கடன் வழங்கப்பட்டதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. ஒரு குடும்பத்தில் 5 சவரனுக்கு உள்பட்ட நகைக்கடன்களை உண்மையான ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தள்ளுபடி செய்யப்படும்’ என்றார்.

இதையடுத்து, நகைக்கடன் பெற்றவர்களின் தகுதியான பயனாளிகளைக் கண்டறியும் வகையில் சங்கங்களின் பெயர், பயனாளியின் பெயர், நகைக்கடன் பெற்ற நாள், கணக்கு எண், வாடிக்கையாளர் தகவல் குறிப்பு எண், குடும்ப அட்டை எண், ஆதார் எண் உள்பட 51 விதமான தகவல்கள் சேகரிக்கப்பட்டு கணினி மூலம் ஆய்வு செய்யப்பட்டது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
படக்குறிப்பு,முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இந்த ஆய்வின் மூலம் பல்வேறு முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்தன. ஒரே ஆதார் எண்ணுக்கு அதிகக் கடன்கள், கவரிங் நகைகளுக்குக் கடன், காலியான நகைப் பொட்டலங்கள், அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்தின்கீழ் வறுமைக்கோட்டுக்குக்கீழ் உள்ளவர்களின் பெயர்களில் கிலோ கணக்கில் நகைகள் அடமானம் வைக்கப்பட்டிருந்ததாகவும் தகவல் வெளியானது.

சட்டப்பூர்வ நடவடிக்கை

இந்த விவகாரம் தொடர்பாக, கடந்த 21ஆம் தேதி கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் ஐ.ஏ.எஸ், தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியின் மேலாண் இயக்குநர் உள்பட அனைத்து மண்டல இணைப் பதிவாளர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

அந்த அறிக்கையில், `கூட்டுறவு நிறுவனங்களில் 5 சவரன் அளவுக்கு மேற்பட்டு கடன் வழங்கப்பட்டு 31.3.2021 முதல் 31.7.2021 தேதி வரையில் நிலுவை விவரங்களை அளிக்க வேண்டும். 40 கிராமுக்கு மேற்பட்டு நகைக்கடன்களை பெற்ற கடன்தாரர்களின் நகைக்கடன்களை வசூல் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் நகைக்கடன்கள் தவணை தவறியிருப்பின் உரிய சட்டப்பூர்வ நடவடிக்கைகளைப் பின்பற்றியும் கடன் தொகையை வசூலிக்கவும் கேட்டுக் கொள்கிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

நகைக்கடன் விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் அதிரடி நடவடிக்கைகள், அ.தி.மு.க தரப்பில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோசடி தொடர்பாக திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, “ தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு வங்கி மற்றும் கடன் சங்கங்களில் முறைகேடுகள் நடந்துள்ளன. குறிப்பாக, குரும்பூர் கூட்டுறவு கடன் சங்கத்தில் 2 கோடி மதிப்புள்ள 247 நகை பொட்டலங்களே இல்லை. மத்திய அரசின் அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்தின்கீழ் வறுமைக்கோட்டுக்குக்கீழ் உள்ளவர்களின் பெயர்களில் பல கோடி ரூபாய்கள் மோசடி நடைபெற்றுள்ளது. வறுமைக்கோட்டுக்குக்கீழ் உள்ளவர்களிடம் கிலோ கணக்கில் தங்கம் இருக்குமா?

மேற்கு மண்டலத்தில் என்ன நடந்தது?

கொங்கு மண்டலத்துக்கு அதிக சலுகைகளா?

இதுதவிர, மதுரையில் உள்ள பாப்பையாபுரம் கூட்டுறவு சங்கத்தில் ஒரு நபர் 300 நகைக்கடன்களை பெற்றுள்ளார். சில நபர்கள் 100, 200, 300 கடன்கள் என வாங்கியுள்ளனர். கவரிங் நகைகளுக்கும் கடன் கொடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் வங்கிகளில் உள்ள அலுவலர்களுக்கும் இதில் தொடர்புள்ளது தெரியவந்துள்ளது. அவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யவும் அரசுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது” என்கிறார்.

மேலும், “ நகை அடகுக்கடை நடத்துகிறவர்களும், தங்களிடம் அடமானத்துக்காக வந்த நகைகளை கூட்டுறவு கடன் சங்கத்தில் கொடுத்து பணம் பெற்றுள்ளனர். அதேபோல், தமிழ்நாட்டில் 12,110 கோடி ரூபாய் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதில், கோவை, ஈரோடு, சேலம், நாமக்கல் ஆகிய நான்கு மாவட்டங்களில் மட்டும் 2,500 கோடி ரூபாய் அளவுக்குப் பயிர்க்கடன் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதிலும், விவசாயமே செய்யாத தரிசு நிலங்களுக்குக்கூட 110 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது” என்றார்.

ஆய்வுக் கூட்டங்களில் பேசாத அதிகாரிகள்

“ஒரே குடும்பத்தில் இருந்து 5 பேர் நகைக்கடன் வாங்கியிருந்தாலும் அதில் ஒருவருக்குத்தான் தள்ளுபடி கிடைக்கும். ஒரே ஆதாரை பயன்படுத்தி அதிக நகைக்கடன்களை பெற்றிருந்தாலும் தள்ளுபடி கிடைக்காது. நகைக்கடன் பெறுவதற்காக கவரிங் நகைகளை அடகு வைத்ததையெல்லாம் ஏற்றுக் கொள்ளவே முடியாது. கூட்டுறவு சங்கங்களின் நிர்வாக அமைப்புகளில் உள்ள பதவிகளில் அ.தி.மு.கவினர்தான் 99 சதவிகிதம் பேர் உள்ளனர். அங்குள்ள நிர்வாக இயக்குநர், இயக்குநர் ஆகிய பொறுப்புகளிலும் மத்திய கூட்டுறவு வங்கி, தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி ஆகியவற்றின் தலைமைப் பொறுப்பிலும் அ.தி.மு.கவினரே உள்ளனர். பணத்தை ஒதுக்கீடு செய்வது, காசோலை அதிகாரம் ஆகியவை அவர்களிடம்தான் உள்ளது. இந்த விவகாரத்தில் திட்டம் போட்டு மோசடியை அரங்கேற்றியுள்ளனர்” என்கிறார் தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளனத்தின் மாநிலத் தலைவர் ஏ.கிருஷ்ணமூர்த்தி.

ஏ.கிருஷ்ணமூர்த்தி
படக்குறிப்பு,ஏ.கிருஷ்ணமூர்த்தி

தொடர்ந்து பேசிய அவர், “ ஒவ்வொரு மாதமும் நகைக்கடன் தொடர்பாக ஆய்வுக்கூட்டம் நடத்தப்படுகிறது. ஒரே மாதத்தில் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் 500 கோடி வரையில் நகைக்கடன் அதிகமாகும்போது, அதனை அதிகாரிகள் கண்காணித்திருக்க வேண்டும். ஆய்வுக்கூட்டங்களில் இதைப் பற்றியெல்லாம் அவர்கள் பேசவில்லை. மத்திய கூட்டுறவு வங்கி அளிக்கும், கடன் பெறத் தகுதியுள்ள நபரா என்ற சான்றை (cash credit) ஆராயாமலேயே கடன் கொடுத்துள்ளனர்.

தவிர, பொதுமக்கள் நகைகளைக் கொடுத்தால் அவர்களுக்கு கொடுப்பதற்கு சங்கங்களில் பணம் இல்லை. ஆனால், பணத்தை சேமிப்புக் கணக்கில் வரவு வைத்துள்ளனர். ஒரே நபர் ஒரே ஆதாரை வைத்து 100 கடன்களை வாங்கியுள்ளனர். தனி நபருக்கு 20 லட்சம் கொடுப்பதற்குத்தான் அதிகாரிகளுக்கு வரம்பு உள்ளது. ஆனால், ஒரு கோடி ரூபாய் வரையில் கொடுத்துள்ளனர். கோவை, நாமக்கல், கரூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் பெரும் மோசடிகள் நடந்துள்ளன” என்கிறார்.

மேலும், “ கூட்டுறவு சங்கங்களில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக தற்போது கூறும் அதிகாரிகள், கடந்த ஆட்சிக்காலத்தில் ஏன் கூறவில்லை? இந்த விவகாரத்தில் நிர்வாகக் குழுக்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகள் என அனைத்து மட்டத்திலும் தவறுகள் நடந்துள்ளன. இவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்கிறார்.

காத்திருந்த 43 லட்சம் பேர்

எடப்பாடி பழனிசாமி ஆட்சியின்போது கூட்டுறவு தங்க நகைக் கடனில் மோசடி நடந்ததாக புகார் எழுந்துள்ளது.
படக்குறிப்பு,எடப்பாடி பழனிசாமி ஆட்சியின்போது கூட்டுறவு தங்க நகைக் கடனில் மோசடி நடந்ததாக புகார் எழுந்துள்ளது.

இதுதொடர்பாக, செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, “ தமிழ்நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. அனைத்திலும் முறைகேடு நடைபெற்றதா எனத் தெரியவில்லை. எந்த ஆட்சியாக இருந்தாலும் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பார்கள். நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற நம்பிக்கையில் 43 லட்சம் பேர் காத்திருந்தனர். தற்போது நகைக்கடனில் ஏராளமான நிபந்தனைகள் விதிக்கப்படுவதால் அனைத்து மக்களும் பலன் பெறுவதற்கு வாய்ப்பில்லை” என்றார்.

“நகைக்கடனில் பெருமளவு மோசடி நடந்துள்ளதாக ஆதாரங்கள் வெளியாகியுள்ளதே?” அ.தி.மு.க மாநில செய்தித் தொடர்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வைகைச்செல்வனிடம் பேசினோம். “நகைக்கடன்கள் விதிமுறைப்படி முறையாகத்தான் வழங்கப்பட்டன. முறைகேடாக யாருக்கும் கடன் வழங்கப்படவில்லை” என்கிறார்.