December 7, 2021

உண்மையை உரக்கச் சொல்லும் ஒரே நாளிதழ்

டி20 உலகக்கோப்பை 2021 அரை இறுதி: இங்கிலாந்தை நியூசிலாந்து தோற்கடித்தது எப்படி? திருப்புமுனை தருணம் எது?

2021 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அரை இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தை ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி.

அபுதாபி மண்ணில் டி20 போட்டியில் 150 ரன்களை சேஸிங் செய்வது என்றாலே மிகக்கடினம்.

இந்த மைதானத்தில் ஐசிசி தரவரிசையில் டாப் 8 இடங்களில் இருக்கும் அணிகளில் ஆஸ்திரேலியா மட்டுமே 158 ரன்களை சேஸிங் செய்து வென்றிருக்கிறது.

முன்னதாக, ஐசிசி ஒருநாள் மற்றும் டி20 உலகக்கோப்பை வரலாற்றில் 1983-க்கு பிறகு அரைஇறுதியில் தோற்றதே கிடையாது எனும் பெருமையுடன் வலம் வந்ததது இங்கிலாந்து அணி.

ஆம். 1987, 1992, 2019-ம் ஆண்டுகளில் நடந்த ஒருநாள் உலகக்கோப்பை தொடர்களிலும் சரி, 2010 மற்றும் 2016-ல் நடந்த டி20 உலகக்கோப்பை தொடர்களிலும் சரி இங்கிலாந்து அணி அரை இறுதிக்கு தகுதி பெற்ற சமயத்தில் எல்லாம், இறுதிப்போட்டியில் நுழையத் தவறியதில்லை.

இப்படி ஒரு சூழலில் தான், அபுதாபி மண்ணில் இங்கிலாந்தை வென்று, இறுதிப்போட்டியில் நுழைய வேண்டுமானால் 20 ஓவர்களில் 167 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் இருந்தது நியூசிலாந்து அணிக்கு.

அது, ஆட்டத்தின் 17-வது ஓவர். அதுவரை நியூசிலாந்து அணி 96 பந்துகளைச் சந்தித்து 110 ரன்களை எடுத்திருந்தது. நான்கு பேட்ஸ்மேன்கள் விக்கெட்டை இழந்து பெவிலியனில் உட்கார்ந்திருந்தனர்.

தொடக்க வீரராக களமிறங்கிய டரில் மிச்செல் களத்தில் நின்றுகொண்டிருந்தார். ஆனால் அவருடன் துணை நிற்க நியூசிலாந்திடம் பேட்ஸ்மேன்கள் யாரும் இல்லை. பௌலிங் ஆல்ரவுண்டர்கள் மற்றும் பௌலர்கள் மட்டுமே மீதமிருந்தனர். அப்போது மிச்செல் உடன் ஜிம்மி நீஷம் ஜோடி சேர்ந்தார்.

நியூசிலாந்து அணி 24 பந்துகளில் 57 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலை. பவர்பிளேவில் தனது மிரட்டலான பந்துவீச்சால் இரண்டு ஓவர்களில் 10 ரன்கள் மட்டுமே கொடுத்திருந்த கிறிஸ் ஜோர்டன், அப்போது தனது மூன்றாவது ஓவரை பந்துவீச வந்தார்.

இங்கிலாந்து

இங்கிலாந்தின் வெற்றி வாய்ப்பு 70% என தொலைக்காட்சியில் புள்ளிவிவர கணிப்பு வெளியிடப்பட்டது. நியூசிலாந்து அணிக்கு அழுத்தம் அதிகரித்துக் கொண்டே இருந்தது.

17-வது ஓவரின் முதல் பந்தை வீசினார் ஜோர்டன். சிக்ஸர் வைத்து தெம்புடன் அவரை வரவேற்றார் ஜிம்மி நீஷம். இரண்டாவது பந்தை லெக் ஸ்டம்புக்கு குறிவைத்தார் ஜோர்டன். ஆனால் லெக் பை மூலம் இரண்டு ரன்கள் நியூசிலாந்துக்கு கிடைத்தது. மூன்றாவது பந்தை வைடாக வீசினார்.

இங்கிலாந்து அணித்தலைவர் இயான் மோர்கன் உடனே ஜோர்டனுடன் பேசினார். ஆனால், ஜிம்மி நீஷம் பந்தை விரட்டுவதில் தெளிவாக இருக்க, அந்த ஓவரின் மூன்றாவது பந்து பௌண்டரிக்கு சென்றது.

இப்போது ஆட்டம் பரபரப்பானது. இங்கிலாந்துக்கு, குறிப்பாக ஜோர்டனுக்கு அழுத்தம் கூடியது.

நான்காவது பந்தை ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வைடாக வீசினார் ஜோர்டன். உதிரியாக ஒரு ரன் நியூசிலாந்துக்கு கிடைத்தது.

ஓவரின் நான்காவது பந்தை மீண்டும் வீசினார் ஜோர்டன். இப்போது லாங் ஆன் திசையில் பந்தை தூக்கி அடித்தார் நீஷம். பேர்ஸ்டோ ஓடி வந்து கேட்ச்பிடித்தார். ஆனால் வந்த வேகத்தில் எல்லைக்கோட்டை தொட்டுவிடுவோம் என சுதாரித்து பந்தை அருகிலிருந்த ஃபீல்டரிடம் வீசினார். அவர் பந்தை கச்சிதமாக பிடிக்க, நடுவர் அவுட் கொடுத்தார். ஆனால் மூன்றாவது நடுவரிடம் சந்தேகத்தின் பேரில் முறையிட்டார்.

இங்கிலாந்து நியூசிலாந்து அணிகள்

இந்த சம்பவங்கள் எல்லாம் சடாரென 2019 உலகக்கோப்பையஇறுதிப்போட்டி நினைவுகளை கிளறின. ரீப்ளே செய்து பார்த்த மூன்றாவது நடுவர். அது நாட் அவுட் என அறிவித்தார். அது மட்டுமல்ல அந்த பந்து சிக்சருக்கு சென்றது என்றும் உறுதிப்படுத்தினார். நியூசிலாந்து ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். அந்த ஓவரின் கடைசி இரண்டு பந்துகளில் மூன்று ரன்கள் கொடுத்தார் ஜோர்டன்.

17வது ஓவரில் மட்டும் நியூசிலாந்து அணி 23 ரன்கள் விளாசியது. இது ஆட்டத்தையே ஒட்டுமொத்தமாக மாறியது.

இதையடுத்து மூன்று ஓவர்களில் முப்பத்து நான்கு ரன்கள் என்பது இலக்கு ஆனது. சுழற்பந்து வீச்சாளர் அதில் ரஷீதை அழைத்தார் மோர்கன். 18வது ஓவரின் இறுதிப்பந்தில் நீஷம் விக்கெட்டை வீழ்த்தினார் அதில் ரஷீத். எக்ஸ்டிரா கவர் திசையில் இருந்த மோர்கன் சிறப்பாக கேட்ச் பிடித்து நீஷத்தை வெளியேற்றினார். ஆனால் அந்த ஓவரில் ஏற்கனவே மிச்செல் மற்றும் நீஷம் தலா ஒரு சிக்ஸர் விளாசி இங்கிலாந்தின் வெற்றி வாய்ப்புக்கு போதுமான சேதாரத்தை ஏற்படுத்திவிட்டனர்.

ஜிம்மி நீஷம் 11 பந்துகளில் மூன்று சிக்ஸர்கள், ஒரு பௌண்டரி என 27 ரன்கள் குவித்து வெளியேறினார்.

இரண்டே ஓவர்களில் ஆட்டம் அதிவேகமாய் நியூசிலாந்து பக்கம் திரும்பியது. ஆட்டத்தின் அதி முக்கியமான 19-வது ஓவரை வீச கிறிஸ் வோக்ஸ் வந்தார். இவர் ஏற்கனவே தான் வீசிய மூன்று ஓவர்களில் 16 ரன்கள் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.

குறிப்பாக பவர்பிளேவில் முதல் ஓவரிலேயே தொடக்க வீரர் கப்திலை ஆட்டமிழக்கச் செய்திருந்தார். பவர்பிளேவின் மூன்றாவது ஓவரை விக்கெட் மெய்டனாக வீசி மிரட்டி இருந்தார். அந்த ஓவரில் நியூசிலாந்து அணித்தலைவர் வில்லியம்சன் இவரது பந்துக்கு இரையானது குறிப்பிடத்தக்கது.

12 பந்துகளில் 20 ரன்கள் எடுத்தால் நியூசிலாந்து வென்றுவிடும் எனும் சூழலில், 19 வது ஓவரின் முதல் பந்தை சற்றே மெதுவாக வீசினார் கிறிஸ்வோக்ஸ். இரண்டு ரன்கள் எடுத்தார் மிச்செல்.

அதற்கடுத்து வோக்ஸ் வீசிய இரண்டு பந்தையும் பதற்றமின்றி தூக்கி அடித்தார் மிச்செல். இரண்டு பந்துகளும் எல்லைக்கோட்டை தாண்டி விழுந்தன. அதே ஓவரின் கடைசி பந்தையும் பௌண்டரிக்கு விளாசி, வெற்றிக்கு தேவையான 20 ரன்களையும் 19வது ஓவரிலேயே அடித்து முடித்தது நியூசிலாந்து அணி.

நியூசிலாந்து

இந்த முறை இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டம் கடைசி ஓவரின் கடைசி பந்து வரையும் நீளவில்லை, சூப்பர் ஓவருக்கும் செல்லவில்லை.

2019 ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் அதிர்ச்சித் தோல்வியடைந்த நியூசிலாந்து அணி, இம்முறை இங்கிலாந்து அணியை அரைஇறுதியையே தாண்ட விடவில்லை.

38 ஆண்டுகளுக்கு பிறகு ஐசிசி உலகக்கோப்பை தொடர்களில் அரைஇறுதியில் தோல்வியடைந்தது இங்கிலாந்து அணி. முன்னதாக 1983-ம் ஆண்டு உலகக்கோப்பையில் அந்த அணி அரைஇறுதியோடு வெளியேறியது. அப்போது இந்தியாதான் இங்கிலாந்தை தோற்கடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

புதன்கிழமை இரவு நடந்த அரை இறுதி ஆட்டத்தில், முன்னதாக டாஸ் வென்ற நியூசிலாந்து அணித்தலைவர் அபுதாபி மண்ணில் சேஸிங்கைத் தேர்ந்தெடுத்தார்.

பவர்பிளேவில் பந்து சற்றே ஸ்விங் ஆனபோதும் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் தைரியமாக உத்வேகத்துடன் விளையாடினர். மாலன் 30 பந்துகளில் 41 ரன்கள் எடுத்தார், மொயின் அலி 37 பந்துகளில் 51 ரன்கள் விளாசினார். இங்கிலாந்து அணி கடைசி ஐந்து ஓவர்களில் 56 ரன்கள் எடுத்து 166 ரன்கள் குவித்தது.

இங்கிலாந்து கடைசி ஐந்து ஓவர்களில் குவித்த ரன்களை விட ஒரு ரன் கூடுதலாக அடிக்க, நியூசிலாந்துக்கு இறுதிக்கட்டத்தில் தேவைப்பட்டது வெறும் மூன்று ஓவர்கள் தான்.

தொடக்க வீரராக களமிறங்கி ஆட்டத்தின் கடைசி வரை களத்தில் இருந்து 47 பந்துகளில் 72 ரன்கள் குவித்த டரில் மிச்செல் ஆட்டநாயகன் விருது வென்றார்.

கேன் வில்லியம்சன் தலைமையில் மூன்றே ஆண்டுகளில் மூன்று ஐசிசி தொடர்களில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது நியூசிலாந்து அணி.

2019-ல் ஒருநாள் உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் கோப்பையை சர்ச்சைக்குள்ளான ஐசிசி விதிகளால் இழந்தது நியூசிலாந்து.

2021 டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்தி கோப்பையை வென்றது.

2021 டி20 உலகக்கோப்பையை நியூசிலாந்து வெல்லுமா என்பது வரும் ஞாயிறு இரவு தெரிந்துவிடும்.

அதற்குமுன்னர் நியூசிலாந்துடன் மோதப்போவது யார் என்பதை முடிவு செய்யும் மற்றொரு அரை இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகள் இன்று வியாழக்கிழமை மல்லுக்கட்டவுள்ளன.