December 3, 2021

உண்மையை உரக்கச் சொல்லும் ஒரே நாளிதழ்

சீன பங்குச் சந்தைகளின் மந்த நிலை இந்தியாவிற்கு கைகொடுக்குமா?

சீன அரசு, அந்நாட்டின் பெரிய நிறுவனங்கள், அதன் பங்குச் சந்தை மற்றும் உலகெங்கிலும் உள்ள முதலீட்டாளர்கள் இடையே பதற்றம் நிலவுகிறதா அல்லது இது ஒரு சதுரங்க ஆட்டமா என்று சொல்வது கடினம்.

சீன செக்கர்ஸ் விளையாட்டு விளையாடியிருப்பவர்களுக்கு இது புரியும். எப்போது, யார் எந்தப் பக்கத்திலிருந்து, யாரை இலக்காக்குவார்கள் என்று சொல்ல முடியாது.

ஒருபுறம், சீன அரசாங்கம் தனது நிறுவனங்களின் மீதான பிடியை இறுக்குகிறது. கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டளைகளுக்கு நிறுவனங்கள் கீழ்படிந்து நடக்கக்கூடிய வழியை அரசாங்கம் காட்ட வேண்டும் என்று அதிபர் ஷீ ஜின்பிங் கடந்த வாரம் கூறினார்.

மறுபுறம், தொழில்நுட்ப நிறுவனங்களுக்கிடையே பரஸ்பர போட்டிக்கு அரசு கடுமையான விதிகளை அமல்படுத்தியுள்ளது. ஒரு பெரிய நிறுவனத்தின் அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு, அதன் பெரும் கடனைக் குறைக்கும்படி எச்சரிக்கப்பட்டுள்ளனர். விரைவில் மற்ற நிறுவனங்களும் இதே நிலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று கூறப்படுகிறது.

முன்னதாக, எஃகு, இ-காமர்ஸ் மற்றும் கல்வி அல்லது ஆன்லைன் கல்வியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் மீதும் அரசின் சாட்டை சுழற்றப்பட்டது.

முதலீட்டாளர்களின் கவலை

தொழில்நுட்ப நிறுவனங்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நோக்கத்துடன், வாரத்தில் மூன்று நாட்கள் அதாவது வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒரு மணிநேரம் மட்டுமே வீடியோ கேம்களை விளையாடலாம் என்று அரசாங்கம் குழந்தைகளுக்கான வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.

இந்தச் செய்திகளின் விளைவாக, முதலீட்டாளர்களின் மனதில் கவலை அதிகரித்துவருகிறது. மேலும், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சீன சந்தையில் அதிக அளவில் பங்குகளை விற்று வருகின்றனர்.

இருப்பினும், அரசாங்கம் ஒரு புதிய பங்குச் சந்தையைத் துவக்குவதா கடந்த வியாழக்கிழமை அறிவித்தது. இதில் வர்த்தகம் செய்யும் 66 நிறுவனங்களின் பங்குகளின் விலைகள், திங்கட்கிழமை திடீரென அதிகரித்தன.

ஆனால் இவை சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் என்பதால் மந்தநிலை குறித்த அச்சம் தொடர்வது இயல்பு. அதேசமயம் இதற்கு முன்பு கடுமையான சரிவை சந்தித்த நிறுவனங்கள் நாட்டில் மட்டுமல்ல உலகிலும் நன்கு அறியப்பட்ட நிறுவனங்களாக உள்ளன, இந்த நேரத்தில் அவற்றின் பங்குகள் பல வருடங்களில் இல்லாத அளவு குறைந்த விலையை எட்டியுள்ளன.

சீனாவின் பெரிய சங்கடம்

சீன பொருளாதாரம்

சீனாவின் அதிவேக பொருளாதார வளர்ச்சி, பல ஆண்டுகளாக உலகை ஆச்சரியப்படுத்துகிறது. பணக்காரர்களைக் கணக்கிடும் ஹுருன் அறிக்கையின்படி, கடந்த ஆண்டு சீனாவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 1058 ஆக இருந்தது, அமெரிக்காவில் 696 பேர் மட்டுமே இருந்தனர்.

இங்கே கோடீஸ்வரர் என்றால் குறைந்தது ஒரு பில்லியன் டாலர் சொத்து வைத்திருக்கும் மக்கள்.

1978 ஆம் ஆண்டு முதல், சீனா 80 மில்லியன் மக்களை வறுமையின் பிடியிலிருந்து மீட்டதாகவும் தற்போது, நாட்டின் மக்கள்தொகையில் பாதி பேர் ‘மிடில் கிளாஸ்’ எனப்படும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதாகவும் உலக வங்கி கூறுகிறது.

ஆனால் அதே நேரத்தில் அந்த நாட்டில் 600 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் ஏழைகளாக உள்ளனர் அல்லது அவர்கள் ஒரு மாதத்திற்கு 150 டாலர்களுக்கும் குறைவாக ஈட்டுகிறார்கள் என்பதும் உண்மை.

பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளி சீனாவிற்கு ஒரு பெரிய பிரச்னையாக மாறியுள்ளது மேலும் அது அதிகரித்தும் வருகிறது. இப்போது அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகளாகட்டும் வெளிப்படுத்தும் நோக்கங்களாகட்டும், செல்வந்தர்களிடம் உள்ள செல்வம், ஏழைகளின் நிலை உயரப் பயன்படுத்தப்படும் விருப்பத்தைத் தான் வெளிப்படுத்துகின்றன.

பெரிய மாற்றத்துக்கான திட்டம்

சீன பொருளாதாரம்

அதிபர் ஷீ ஜின்பிங் நாட்டில் ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டு வரத் திட்டமிடுகிறார் என்றும் இதில் பணக்காரர்களிடமிருந்து செல்வத்தை எடுத்து நாட்டின் அனைத்து மக்களுக்கும் சமமாக விநியோகிப்பதே நோக்கம் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

நோக்கம் நல்லதாக இருந்தாலும், இது செல்வந்தர்களின் உறக்கத்தைப் பறிப்பதாகவும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை அச்சுறுத்துவதாகவும் உள்ளது. இருப்பினும், சீனாவின் சில பெரிய நிறுவனங்கள் உடனடியாக முன் வந்து அரசாங்கத்தின் விருப்பத்திற்கு வடிவம் கொடுக்கத் தொடங்கியுள்ளன.

வறுமையை ஒழித்து, வளங்களை சமமாக விநியோகிக்க விரும்பும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு டென்சென்ட், 15 பில்லியன் டாலர்கள் பங்களிப்பை அறிவித்துள்ளது. அலிபாபாவும் இதே தொகையை அறிவித்துள்ளது.

பிடிக்கிறதோ இல்லையோ, சீனாவில் வர்த்தகம் செய்ய விரும்புவோருக்கு, வேறு வழியில்லை. நீங்களே கொடுக்கவில்லை என்றால், ஒருவேளை அரசாங்கம் அதிகமாகவே எடுத்துக் கொள்ளும் என்ற நிலை தான் அங்குள்ளது. ஆனால் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு இதிலிருந்து தப்பும் பாதை திறந்திருக்கலாம். அதுவும் எத்தனை காலத்திற்கு என்பது கேள்விக்குறியே. இந்த அச்சம் காரணமாக, முதலீட்டாளர்கள் விரைவில் வெளியேறத் துடிக்கிறார்கள். எனவே அந்தப் பாதையிலும் நெரிசம் நிலவுவதாக வல்லுநர்கள் கூறுகிறார்கள். ஒருவர் பங்குகளை விற்றால், தொடர்ந்து பலர் வரிசையாக விற்கும் நிலையே நிலவுகிறது.

பங்கு விலைகள் கடும் வீழ்ச்சி

சீன பொருளாதாரம்

சில பெரிய பங்குகள் முப்பது முதல் நாற்பது சதவீதம் வரை சரிவைக் காண்கின்றன. இந்நிலையில், சீன சந்தைகளிலிருந்து வெளியேறும் பெரும் தொகைகள் இந்தியாவிற்கு வர வாய்ப்புண்டா என்ற கேள்வி எழுகிறது.

இந்த கேள்வி எழ இன்னொரு காரணமும் உண்டு. இந்தியா மற்றும் சீனாவின் சந்தைகள் பொதுவாக எதிர் திசையில் நகர்கின்றன, அதேசமயம் ஆசியாவின் பல சந்தைகள் சீனாவுடன் தொடர்புடையவை, அவற்றின் இயக்கமும் ஒத்தே உள்ளது.

சீனப் பங்குச் சந்தையில் மந்தநிலை ஏற்படும் என்ற அச்சத்தில் இருக்கும் இந்த நேரத்திலும், இந்தியாவில் பங்குச் சந்தை உச்சத்தை எட்டி வருகிறது குறிப்பிடத்தக்கது.

சீனாவின் சந்தை வீழ்ச்சியடைந்தால், இந்தியச் சந்தையும் வீழ்ச்சியடையக்கூடும் என்ற அச்சம் ஃபண்ட் மேனேஜர்கள் இடையே இல்லாததால், சீனாவிலிருந்து வெளியேறும் முதலீடுகள் இந்தியாவை நோக்கித் திரும்ப வாய்ப்புள்ளது என்று சர்வதேச முதலீட்டு நிபுணர்கள் கூறுகின்றனர்.

சீனச் சந்தைகளில் பங்குகளின் விலைகள்

ஒரே ஒரு பிரச்னை உள்ளது. கிட்டத்தட்ட ஒரு மாதமாகப் பங்குகள் விற்கப்பட்டதில், இப்போது சீன பங்குச் சந்தைகளில் பங்குகளின் விலை வீழ்ச்சியடைந்துள்ளன.

PE அதாவது நிறுவனத்தின் வருவாய் மற்றும் பங்கு விலை விகிதம் இப்போது அங்கு மிகவும் குறைவாக உள்ளது, அதேசமயம் இந்தியாவில் இது வரலாற்று உச்சத்தில் உள்ளது.

இப்போதும் கூட, பல வெளிநாட்டு தரகர்கள் சீனாவை நம்பி முதலீடு செய்வதிலிருந்து பின்வாங்கத் தயாராக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவர் சீனாவில் பணத்தை முதலீடு செய்வதற்கான தர்க்க ரீதியான காரணமும், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான தர்க்க ரீதியான காரணமும் முற்றிலும் எதிரெதிரானவை.

அதாவது, இந்தியாவும் சீனாவும் முற்றிலும் எதிர்மாறான சூழ்நிலைகளில் சாதகமான பலனளிக்கக் கூடியவையாக உள்ளன. எனவே சீனாவின் இழப்பு நேரடியாக இந்தியாவுக்கு பயனளிக்கவில்லை என்றாலும், இந்தியாவில் அந்நிய முதலீட்டைக் குறைப்பதற்கான சாத்தியம் இல்லை.

சந்தையில் இருந்து பணம் எடுப்பதற்கு பதிலாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிக பணத்தை முதலீடு செய்வது தொடர்ந்து இது மூன்றாவது ஆண்டாக இருக்கலாம், மேலும் சீனாவுக்கு செல்லும் முதலீடுகளில் சில இந்தியாவை நோக்கி வந்தால், அது சாதாரண விஷயமாக இருக்காது.