October 15, 2021

உண்மையை உரக்கச் சொல்லும் ஒரே நாளிதழ்

சட்ட வரலாறு: மாநில அரசுகளை கலைக்க மத்திய அரசுக்கு கடிவாளம் போட்ட வழக்கு தெரியுமா?

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, தமிழ்நாடு தொடர்பான பல வழக்குகள் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றன. அந்த முக்கியமான வழக்குகள் குறித்த சிறிய தொடரை வாரந்தோறும் புதன்கிழமை வழங்குகிறது. அதன் ஐந்தாம் பாகம் இது.

மத்திய அரசுகள் மாநில அரசுகளைத் தம் விருப்பப்படி கலைத்துவந்த நிலையில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ஒன்று அதற்குத் தடைபோட்டது. இந்தியாவில் நீண்ட காலமாக நிலவிவந்த ஜனநாயக விரோத நடவடிக்கையைத் தடுத்த அந்த வழக்கு எது தெரியுமா?

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 356வது பிரிவு, மக்களால் தேர்வுசெய்யப்பட்ட மாநில அரசுகளைக் கலைத்துவிட்டு அங்கு நேரடியாக குடியரசுத் தலைவரின் ஆட்சியை அமல்படுத்துவதற்கு வழிவகைசெய்கிறது.

இந்தியாவில் அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்பாகவே, 1935ஆம் ஆண்டின் இந்திய அரசுச் சட்டத்தின் 93வது பிரிவின்படி மாகாண அரசுகளைக் கலைக்க முடியும். காலனிய ஆட்சிக் காலத்தின் இந்தச் சட்டப் பிரிவு கடுமையாக எதிர்க்கப்பட்டு, விமர்சிக்கப்பட்டது. இருந்தபோதும், இந்தியா தனக்கென ஒரு அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியபோது, அதிலும் மாநில அரசுகளைக் கலைப்பதற்கான பிரிவு சேர்க்கப்பட்டது.

1947-48ல் இருந்த சூழலை மனதில் கொண்டு உருவாக்கப்பட்ட இந்தச் சட்டம், நிலைமை சீரான பிறகு வெகு அரிதாகவே பயன்படுத்தப்படுமென அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் கருதியிருந்தனர்.

ஆனால், இந்தியா சுதந்திரமடைந்த பிறகு மாநில அரசுகள் இந்தப் பிரிவைப் பயன்படுத்தி விருப்பப்படி கலைக்கப்பட்டுவந்தன. முதல் முறையாக 1959ல் கேரள மாநிலத்தில் ஆட்சியிலிருந்த கம்யூனிஸ்ட் கட்சியின் அரசு கலைக்கப்பட்டது. அதற்கு அடுத்த முப்பது ஆண்டுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட தடவைகள் இந்தப் பிரிவு பயன்படுத்தப்பட்டு மாநில அரசுகள் கலைக்கப்பட்டன.

ஆனால், இப்படி மத்திய அரசு தனது விருப்பப்படி மாநில ஆட்சிகளைக் கலைப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஒரு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. S.R. Bommai and Others VS Union of India என்ற அந்த வழக்கு, சுதந்திர இந்தியாவின் மிகப் பிரபலமான வழக்குகளில் ஒன்றாகும். இந்த வழக்கின் தீர்ப்பிற்குப் பிறகு, இந்தியாவில் மாநில அரசுகள் கலைக்கப்படுவது வெகுவாகக் குறைந்தது.

வழக்கின் பின்னணி

கர்நாடகாவில் 1985ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஜனதா கட்சி வெற்றிபெற்றதையடுத்து ஜனதா கட்சியின் மூத்த தலைவரான ராமகிருஷ்ண ஹெக்டே முதல்வரானார். 1988ல் அவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட, எஸ்.ஆர். பொம்மை 1988 ஆகஸ்ட் 30ஆம் தேதி மாநிலத்தின் முதல்வராகப் பதவியேற்றார். செப்டம்பர் மாதம் ஜனதா கட்சியும் லோக் தளம் கட்சியும் இணைந்து ஜனதா தளம் என்ற கட்சியை உருவாக்கின. அதற்கு முன்பாகவே பொம்மையின் அரசுக்கு சட்டப்பேரவையில் பெரும்பான்மை இருந்தாலும் இந்த இணைப்பின் மூலம் கூடுதலாக உறுப்பினர்கள் கிடைத்தனர். இதைடுத்து 1989 ஏப்ரல் 15ஆம் தேதி அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், ஏப்ரல் 17ஆம் தேதியன்று ஜனதா தளத்தைச் சேர்ந்த கல்யாண் ராவ் மொலகேரி என்ற சட்டமன்ற உறுப்பினர் மாநில ஆளுநர் வெங்கயசுப்பையாவைச் சந்தித்து தனக்கு 19 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவளிப்பதாகவும் இதனால், பொம்மையின் அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதாகவும் கூறினார். இதனை ஏற்றுக்கொண்ட ஆளுநர் வெங்கட சுப்பையா பொம்மையின் அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதாகவும் அதனால், அதனைக் கலைத்துவிடலாம் என்றும் குடியரசுத் தலைவர் வெங்கட்ராமனுக்குப் பரிந்துரை செய்தார்.

அரசியல் சாசனம்

1989 ஏப்ரல் 19ஆம் தேதி எஸ்.ஆர். பொம்மை தலைமையிலான அரசை பதவிநீக்கம் செய்ய ஆளுநர் பரிந்துரைத்தார். ஆனால், மொலகேரி குறிப்பிட்ட 19 உறுப்பினர்களில் 7 பேர் தாங்கள் அவரை ஆதரிக்கவில்லையென்றும் தங்கள் கையெழுத்து பொய்யாகப் பெறப்பட்டதாகவும் கூறினர்.

ஆளுநர் வெங்கட சுப்பையாவை நேரில் சந்தித்த முதலமைச்சர் எஸ்.ஆர். பொம்மை தனது பெரும்பான்மையை நிரூபிக்க பொம்மை வாய்ப்புக் கோரினார். சட்டமன்றக் கூட்டத்தை அதற்காகக் கூட்டும்படியும் வேண்டினார். இதே கோரிக்கையை அவர் குடியரசுத் தலைவருக்கும் அனுப்பினார்.

ஆனால், அன்றைய தினமே மீண்டும் ஒரு அறிக்கையை குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய ஆளுநர், பொம்மையின் அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதாகத் தெரிவித்தார். இதையடுத்து, அந்த அரசு கலைக்கப்படுவதாக குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமன் உத்தரவிட்டார்.

இந்த ஆட்சிக் கலைப்பை எதிர்த்து எஸ்.ஆர். பொம்மை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றைத் தாக்கல்செய்தார். அந்த மனு மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வால் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தை அணுகினார் எஸ்.ஆர். பொம்மை.

வழக்கின் விவரம்

கர்நாடக அரசைப் போலவே 1991 அக்டோபர் 11ஆம் தேதி மேகாலயா மாநில அரசு கலைக்கப்பட்டது. அதற்கும் முன்பாக 1988 ஆகஸ்ட் 7ஆம் தேதி நாகாலாந்து அரசு கலைக்கப்பட்டிருந்தது.

பாபர் மசூதி இடிப்பையடுத்து நாடு முழுவதும் கலவரங்கள் பரவியில் நிலையில் பா.ஜ.க. ஆட்சியில் இருந்த ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், இமாச்சலப் பிரதேச அரசுகள் 1992 டிசம்பர் 15ஆம் தேதி கலைக்கப்பட்டன.

இம்மாதிரி கலைக்கப்பட்டதை எதிர்த்து அந்தந்த மாநில உயர்நீதிமன்றங்களில் பாதிக்கப்பட்ட கட்சிகள் வழக்குகளைத் தொடர்ந்தாலும், குடியரசுத் தலைவரின் இந்த ஆணை விசாரணைக்குரியவை அல்ல எனத் தள்ளுபடி செய்யப்பட்டன (மத்தியப் பிரதேச மாநில உயர் நீதிமன்றம் மட்டும் இதனை விசாரணைக்கு ஏற்றது). இதையடுத்து இவர்கள் அனைவரும் உச்ச நீதிமன்றத்தை நாடினர். 1993 அக்டோபரில் இந்த வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் துவங்கியது.

எஸ். ஆர். பொம்மை

நீதிபதி குல்தீப் சிங் தலைமையிலான 9 நீதிபதிகள் அடங்கிய அரசியலைப்புச் சட்ட அமர்வு விசாரித்தது. இந்த வழக்கில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவது குறித்த பல்வேறு கேள்விகளுக்கு விடைகாண வேண்டியிருந்தது.

1. பிரிவு 356ன் கீழ் குடியரசுத் தலைவர் ஆணையை வெளியிடும்போது அது நீதிமன்றத்தின் பார்வைக்கு உட்பட்டதா, எந்த அளவுக்கு உட்பட்டது?

2. பிரிவு 356 (1)ன் படி ஆணையை வெளியிட குடியரசுத் தலைவருக்கு எல்லையற்ற அதிகாரம் இருக்கிறதா?

3. ஆட்சிக் கலைப்பை நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஏற்ற பிறகும் இது குறித்து விசாரிக்க முடியுமா? அந்த உத்தரவை தள்ளிவைக்க முடியுமா?

4. இம்மாதிரி ஆட்சிக் கலைப்பு உத்தரவு வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது, தேர்தல் நடத்தத் தடை போன்ற இடைக்கால நிவாரணங்களை நீதிமன்றங்களால் தர முடியுமா?

5. நாடாளுமன்ற அவைகளின் ஒப்புதலைப் பெறாமல் குடியரசுத் தலைவரால் ஆட்சியைக் கலைக்க முடியுமா?

6. மதச் சார்பின்மை என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரையிலேயே இருப்பதால், அதனை மீறும் அரசுகளைக் கலைக்க முடியுமா?

ஆட்சியை விருப்பப்படி கலைக்க முடியாது: தீர்ப்பின் விவரம்

இந்த வழக்குகளை விசாரித்த 9 நீதிபதிகளும் 1994 மார்ச் 11ஆம் தேதி ஆறு தீர்ப்புகளை வழங்கினர். பெரும்பான்மைத் தீர்ப்பு, நீதிபதி சவந்த், குல்தீப் சிங், ஜீவன் ரெட்டி, அகர்வால், ரத்னவேல் பாண்டியன் ஆகியோரால் வழங்கப்பட்டது. நீதிபதிகள் அஹ்மதி, வர்மா, தயால், கே. ராமசாமி ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர்.

ஒரு மாநிலத்தில் அரசியலமைப்புச் சட்டமே செயல்பட முடியாத நிலை போன்ற அதீதமான சூழல் ஏற்படும்போதுதான் 356வது பிரிவைப் பயன்படுத்தி ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்பதைப் பெரும்பான்மை நீதிபதிகள் ஒப்புக்கொண்டனர்.

மேலும், 356வது பிரிவின் கீழ் குடியரசுத் தலைவர் அளிக்கும் ஆணை நீதிமன்றத்தின் ஆய்வுக்கு உட்பட்டது எனவும் தீர்ப்பளிக்கப்பட்டது.

மேலும், மாநில அரசுக்கு பெரும்பான்மை இல்லையெனக் கூறப்பட்டால், பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பு அளிக்க வேண்டும். குறைந்தது ஒரு வாரத்திற்கு முன்பாவது எச்சரிக்கை விடுக்க வேண்டும்.

பொம்மை
படக்குறிப்பு,1998-இல் பிகாரில் ஆட்சியைக் கலைக்கும் மத்திய அமைச்சரவைக்கு எதிராக குடியரசுத் தலைவரைச் சந்தித்த ஜனதா தள குழுவில் எஸ்.ஆர்.பொம்மை, ஐ.கே.குஜ்ரால் (இடது).

குடியரசுத் தலைவருக்கு மத்திய அமைச்சரவை அளிக்கும் பரிந்துரையை நீதிமன்றம் கேள்வி கேட்க முடியாது. ஆனால், அந்தப் பரிந்துரைக்கு பின்னால் உள்ள காரணங்களை நீதிமன்றம் பரிசீலித்து கேள்வியெழுப்ப முடியும். ஆகவே, இந்தப் பரிந்துரைக்குப் பின்னால் காரணம் இருக்கிறதா, அந்தக் காரணம் சரியானதா, அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறதா என நீதிமன்றம் பரிசீலிக்க முடியும்.

356வது பிரிவு தவறாகப் பயன்படுத்தப்பட்டால், நீதிமன்றங்கள் நிவாரணம் அளிக்க முடியும்.

நாடாளுமன்றம் ஆட்சிக் கலைப்பை ஏற்பதற்கு முன்பாக, சட்டப்பேரவையைக் கலைப்பது போன்ற நடவடிக்கைகளை குடியரசுத் தலைவர் மேற்கொள்ளக்கூடாது.

அரசியல் சாஸனச் சீர்குலைவிற்காக ஆட்சியைக் கலைக்கலாமே தவிர, நிர்வாகச் சீர்குலைவிற்காக ஆட்சியைக் கலைக்க முடியாது.

தீர்ப்பின் தாக்கம்

எஸ்.ஆர். பொம்மை வழக்கு என்று அறியப்படும் இந்தத் தீர்ப்பு இந்தியாவில் மத்திய – மாநில அரசுகளின் உறவுகளில் மிக முக்கியமான தீர்ப்பாகக் கருதப்படுகிறது. இந்தத் தீர்ப்பிற்குப் பிறகு அரசியல் காரணங்களுக்காக மாநில அரசுகளை மத்திய அரசு கலைப்பது வெகுவாகக் குறைந்தது. மேலும், குடியரசுத் தலைவரின் ஆணைகள் நீதிமன்றத்தின் பரிசீலனைக்கு உட்பட்டவை என்பதையும் இந்தத் தீர்ப்பு உறுதிப்படுத்தியது.