October 18, 2021

உண்மையை உரக்கச் சொல்லும் ஒரே நாளிதழ்

கர்நாடக கோயிலில் நுழைந்த தலித் குழந்தை: தந்தைக்கு அபராதம் – மாவட்ட ஆட்சியர் கூறியது என்ன?

“தலித் குழந்தை ஒன்று நுழைந்தவுடன் அந்தக் கோயில் அசுத்தமடையவில்லை. அசுத்தமடைந்தது நமது மனங்கள்”.

கர்நாடக மாநிலம் கொப்பால் மாவட்டத்தைச் சேரந்த ஓர் ஊர் மக்களிடம் இந்த சொற்களைக் கூறியவர் அந்த மாவட்ட ஆட்சியர். அந்த ஊரில்தான் தலித் குழந்தை ஒன்று கோயிலுக்குள் நுழைந்ததால், அந்தக் குழந்தையின் தந்தைக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தார்கள் அந்த ஊர் ஆதிக்க சாதியினர்.

தனது குழந்தையின் பிறந்த நாளை ஒட்டி அந்தக் கோயிலுக்கு வெளியே நின்று அவர் வழிபட்டுக்கொண்டிருந்தபோது அந்தக் குழந்தை திடீரென கோயிலுக்குள் ஓடிவிட்டது.

`நாங்கள் வழிபட்டுக்கொண்டிருந்தபோது அங்கே லேசாகத் தூறிக்கொண்டிருந்தது. குழந்தையை நான் உடனடியாக தூக்கிக்கொண்டேன். ஆனால், செப்டம்பர் 11ம் தேதி நடந்த ஓர் ஊர்க்கூட்டத்தில் கோயிலை சுத்திகரிக்கவும், அபிஷேகம் செய்யவும் ஆகும் செலவை நான் தரவேண்டும் என்று ஊர்ப் பெரியவர்கள் கூறினர். ஆனால், தனிப்பட்ட முறையில் என்னிடம் ரூ.25 ஆயிரம் – 30 ஆயிரம் தரவேண்டும் என்று சொல்லப்பட்டது” என்று அந்த குழந்தையின் தந்தை சந்துரு செய்தியாளர்களிடம் கூறினார்.

அந்த தொகையை தன்னால் தர முடியவில்லை என்று கூறும் சந்துரு, அதன் பிறகு தனது சாதி மக்களிடம் விவாதித்துவிட்டு, குஷ்டகி காவல் நிலையத்தை தொடர்புகொண்டு விஷயத்தை கூறியுள்ளார். ஆனால், மீண்டும் இது போல நடவடிக்கைகள் வரலாம் என்று பயந்து அவர் எழுத்து மூலம் புகார் தர மறுத்துவிட்டார்

“கோயிலை சுத்தம் செய்ய அபராதம் விதிக்கப்பட்டது என்று அந்த ஊருக்குச் செல்லும் முன்பு கேள்விப்பட்டேன். அதனால்தான் நான் ஊர்க்காரர்களிடம் அப்படிச் சொன்னேன். அந்தக் குழந்தை நுழைந்தவுடன் கோயில் அசுத்தமாகவில்லை. நமது மனங்கள்தான் அசுத்தமாகிவிட்டன என்று அவர்களிடம் கூறியது உண்மை,” என்று கூறினார் மாவட்ட ஆட்சியர் விகாஸ் கிஷோர் சுரால்கர் கூறினார்.

“பாதிக்கப்பட்டவர்கள் முறைப்படி புகார் தர மறுத்துவிட்டாலும், வட்ட சமூக நல அலுவலர் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கோயில் குழுவை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்,” என்றார் சுரால்கர்.

மியாபூர் என்ற அந்த ஊரில் 450 குடும்பங்கள் உள்ளன. அவற்றில் 20 சதவீதம் தலித் குடும்பங்கள்.

“மீதி உள்ள குடும்பங்கள் பல சாதிகளைச் சேர்ந்தவை. அவர்கள் அனைவரும் விவசாய வேலை செய்கிறவர்கள்,” என்று மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டி.ஸ்ரீதரா கூறினார்.

“கிராமத்தில் உள்ள எல்லோரிடமும் இது போன்ற அணுகுமுறை இல்லை. ஆதிக்கசாதியை சேர்ந்த பலரும் தலித்துகளுக்கு எதிரான இது போன்ற நடவடிக்கையை எதிர்க்கின்றனர். ஒரு சிறு குழுவினர்தான் இது போல நடந்துகொள்கின்றனர்,” என்றார் ஸ்ரீதரா.

இது போன்ற சம்பவங்கள் நடப்பது ஏன்?

கோயில்
படக்குறிப்பு,சித்தரிப்புப் படம்

4 மாதங்களுக்கு முன்பு கொப்பால் மாவட்டத்தில் நடந்த ஒரு சம்பவத்தில் முடிவெட்டிக்கொண்டதற்காக தலித் இளைஞர் ஒருவர் ஊரைவிட்டு விரட்டப்பட்டார் என்ற புகார் எழுந்தது. அப்போது அந்த முடிதிருத்தும் கலைஞர் ஆதிக்கசாதி லிங்காயத்துகளுக்கு மட்டுமே முடிவெட்டவேண்டும் என்று கூறப்பட்டது.

மியாபூரில் குழந்தை கோயிலுக்குள் நுழைந்ததாக அதன் தந்தை சந்துருவுக்கு அபராதம் விதித்தவர்களும் லிங்காயத்துகளே. ஆனால், இவர்கள் அதற்குள் கனிகா உட்பிரிவை சேர்ந்தவர்கள். இவர்கள் பொதுவாக இடைநிலை சாதியினர்.

“இது போன்ற விஷயங்களில் கூருணர்வுப் பயிற்சி அளிப்பதற்காக ஊர்களை தேர்வு செய்திருக்கிறோம். இதனை தகவல், கல்வி, தகவல் தொடர்பு பயிற்சி என்று கூறுகிறோம். தங்கள் உரிமைகள் குறித்து எல்லாத் தரப்பினருக்கும் இதில் விழிப்புணர்வு ஊட்டப்படும். புகார் பதிவு செய்தால் விரைவாக தீர்வு கிடைக்கும் என்று அவர்களுக்கு கூறப்படும். 21ம் நூற்றாண்டில் வாழ்வதற்கு அணுகுமுறையில் மாற்றங்கள் தேவை என்று மற்றவர்களுக்கு எடுத்துரைக்கப்படும்,” என்று சுரால்கர் கூறினார்.

இது போன்ற பிரசாரத்துக்கு 38 ஊர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மாவட்ட நிர்வாகத்தின் முனைப்பில் அந்த ஊர்க்காரர்கள் உறுதிமொழி ஏற்றுள்ளனர். ஆனால், இந்த பிரசாரம் மியாபூரில் மேற்கொள்ளப்படவில்லை