October 13, 2021

உண்மையை உரக்கச் சொல்லும் ஒரே நாளிதழ்

ஐபிஎல் 2021 RCBvsKKR: விராட் கோலியின் 200-ஆவது போட்டி பெருமைப்பட ஏதுமில்லாமல் முடிந்தது

கொல்கத்தா அணியுடனான ஆட்டத்தில் பங்கேற்றதன் மூலம் 200 ஐபிஎல் போட்டிகளில் ஆடிய முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார் இந்திய அணித் தலைவர் விராட் கோலி. ஆனால் ஆட்டத்தின் போக்கோ, முடிவோ அவர் பெருமைப்படத் தக்கதாக இல்லை. 200-ஆவது ஆட்டத்தை நினைவில் வைத்துக் கொள்ளவும் அவர் விரும்ப மாட்டார்.

அந்த அளவுக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மிக மோசமாகத் தோற்றுப் போயிருக்கிறது கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி. வெறும் 92 ரன்களை எடுத்த பெங்களூர் அணியை பத்தே ஓவர்களில் கொல்கத்தா அணி வீழ்த்திவிட்டது.

இந்தப் போட்டியில் விராட் கோலி முதல் அணியின் கடைசி ஆட்டக்காரர் வரை வந்தார்கள், சிறிது நேரம் நின்றார்கள், பெவிலியனுக்குத் திரும்பினார்கள் என்றுதான் கூற வேண்டும். அந்த அளவுக்கு யாரும் நிலைத்து நின்று ஆடவில்லை.

ஒரு இலக்கை நிர்ணயித்துக் கொண்டு அதற்கு உண்மையாகவும் நேர்மையாகவும் தீவிரமாகச் செயல்பட்டு வந்தால் நாம் யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இருக்காது என்று ஒரு பேட்டியில் விராட் கோலி கூறியிருப்பார். ஆனால் இப்போது சூழல் வேறு மாதிரியாக மாறியிருக்கிறது என்பதையே அவரது சமீபத்திய முடிவுகள் காட்டியிருக்கின்றன.

இந்திய டி20 அணியின் தலைவர் பதவியில் இருந்து ராஜிநாமா, பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் தலைவர் பதவியில் இருந்து விலகல் என பெரிய முடிவுகளை எடுத்த பிறகு ஏற்பட்டிருக்கும் கடுமையான நெருக்கடிக்கு மத்தியிலேயே விராட் கோலி இந்த ஆட்டத்தில் பங்கேற்றார்.

தனக்கேயுரிய அற்புதமான கவர் ட்ரைவ் மூலமாக ஆட்டத்தைத் தொடங்கினார். அவரது கவர் ட்ரைவின் அழகை பல கோணங்களில் ரசிகர்கள் பார்த்து ரசித்தார்கள். ஆனால் பிரசித் கிருஷ்ணாவின் அடுத்த பந்திலேயே எல்பிடபுள்யூ முறையில் அவுட் ஆனார். அந்த முடிவை எதிர்த்து ரிவ்யூ கேட்டு, அந்த வாய்ப்பையும் பறிகொடுத்தார்.

விராட் கோலியின் ரசிகர்கள் பலர் அந்தக் கணத்திலேயே தொலைக்காட்சியை அணைத்துவிட்டுப் போயிருப்பார்கள் என்றே கூற வேண்டும்.

விராட் கோலி வீழ்ந்த பிறகு, மேக்ஸ்வெல், டி வில்லியர்ஸ், படிக்கல் என நட்சத்திர வீரர்கள் யாரும் பெரிய அளவில் ரன் குவிக்காததால், வெறும் 92 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது பெங்களூரு அணி.

இந்தப் போட்டியில் டாஸ் வென்றவர் கோலிதான். முதலில் பேட் செய்து நல்ல ஸ்கோரை எட்ட வேண்டும் என்றும் அவர் கணித்திருக்கக் கூடும். நேரம் ஆக ஆக பிட்ச் மெதுவாக மாறும் என்று அவர் நினைத்ததால், அவர் தேர்வு செய்திருக்கலாம். ஆனால் அது அவருக்கு நேர் எதிராக முடிந்துபோனது. புதிதாக வந்தவர்களும், அனுபவ வீரர்களும் சோபிக்கவில்லை.

போட்டி முடிந்த பிறகு சுழற் பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தியை வெகுவாகப் பாராட்டினார் கோலி. அவரைப் போன்றவர்கள் இந்திய அணிக்கு ஆதாரமாக இருப்பார்கள் என்று புகழ்ந்தார். அதற்கும் காரணம் உண்டு. தனது லெக் ஸ்பின் மூலம் ஒரு போல்ட், ஒர கேட்ச், ஒரு எல்பிடபூள்யூ என மூன்று பெங்களூரு விக்கெட்டுகளை வீழ்த்திய வருண் சக்கரவர்த்தி, நான்கு ஓவர்களில் 13 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்திருந்தார்.

92 ரன்களுக்குள் கொல்கத்தா அணியைச் சுருட்ட வேண்டுமானால் ஏதாவது மாயஜாலம் நடந்திருக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவும் நடக்க வில்லை. பெங்களூர் அணியின் பந்துவீச்சை சர்வசாதாரணமாக பவுண்டரிகளுக்கு விரட்டி இலக்கை எட்டியது கொல்கத்தா அணி. சுப்மன் கில் ஆறு பவுண்டரி ஒரு சிக்சருடன் 48 ரன்களும், வெங்கடேஷ் அய்யர் 7 பவுண்டரி ஒரு சிக்சருடன் 41 ரன்களும் குவித்திருந்தனர். ஒரேயொரு விக்கெட்டை மட்டுமே கொல்கத்தா இழந்திருந்தது.

இந்தத் தோல்வியால் பெங்களூரு அணிக்கு எல்லாம் முடிந்து போய்விடவில்லை. முதற்கட்டப் போட்டிகளில் பெற்ற தொடர் வெற்றிகள் மூலமாக புள்ளிப் பட்டியலில் இன்னும் மூன்றாவது இடத்தில்தான் இருக்கிறது. ஆனால் அடுத்தடுத்த போட்டிகள் அந்த அணிக்கும் தனிப்பட்ட முறையில் விராட் கோலிக்கும் கூடுதலான நெருக்கடியாகவே இருக்கும்.