October 14, 2021

உண்மையை உரக்கச் சொல்லும் ஒரே நாளிதழ்

ஐபிஎல் 2021 – MI Vs KKR: ரஜினி ‘பக்தரின்’ அதிரடி; ரோஹித் படைத்த வரலாறு

கொல்கத்தா அணியின் ராகுல் திரிபாதியும், வெங்கடேஷ் அய்யரும் ஆடிய அதிரடி ஆட்டத்தால் வியாழக்கிழமை நடந்த ஐபிஎல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வெற்றிபெற எந்த வாய்ப்பும் இல்லாமல் போனது.

அண்மையில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை மிக எளிதாக வென்ற உற்சாகத்தில் இருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, மும்பை அணியை 155 ரன்களுக்குள் முடக்கியது. 156 ரன்கள் என்ற இலக்கை வெறும் 15.1 ஓவரில் எட்டி வெற்றியையும் வசமாக்கியது.

கொல்கத்தா அணியின் ராகுல் திரிபாதி 42 பந்துகளில் 74 ரன்களைக் குவித்து இறுதி வரை களத்தில் நின்றார். அவர்கள் இருவரும் சேர்ந்து 52 பந்துகளில் 88 ரன்களை எடுத்தனர்.

இந்த வெற்றி மூலம் புள்ளிகள் பட்டியலில் கொல்கத்தா அணி நான்காவது இடத்துக்கு முன்னேறியது. மும்பை அணி ஆறாவது இடத்துக்கு சறுக்கியது.

ரோஹித் படைத்த வரலாறு

இந்தப் போட்டியில் ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக ஐபிஎல் போட்டிகளில் ஆயிரம் ரன்களை எடுத்த முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவர் ரோஹித் சர்மா.

விராட் கோலி டேவிட் வார்னர் போன்றோரெல்லாம் இந்தச் சாதனையில் இவருக்கு அடுத்தபடியாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் இது அவரது அணியின் வெற்றிக்கு உதவவில்லை.

சுனில் நரைனின் பந்துவீச்சில் விக்கெட்டைப் பறிகொடுக்கும் வழக்கமும் மாறிவிடவில்லை. ஐபிஎல் போட்டிகளில் ஏழாவது முறையாக சுனில் நரைன் ரோஹித் சர்மாவின் விக்கெட்டை எடுத்தார். இந்த முறை ரோஹித் சர்மாவின் ஸ்வீப் ஷாட் நேரந் தவறியதால் லாங் ஆனில் கேட்சாக மாறிவிட்டது.

முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்கம் அதிரடியாகவும் அதே நேரத்தில் வலுவாகவும் இருந்தது. குயின்டன் டி காக்கும் ரோஹித் சர்மாவும் சேர்ந்து கொல்கத்தா அணியின் பந்து வீச்சாளர்களைப் பதற வைத்தார்கள்.

எல்லா பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். ஃபெர்குசன், பிரசித் கிருஷ்ணா, ரஸ்ஸல் என முன்னணி பந்துவீச்சாளர்கள் அனைவரின் பந்துவீச்சையும் சிக்சர்களும், பவுண்டரிகளுமாகப் பறக்க விட்டார்கள்.

தொடக்க பவர் பிளே ஓவர்களில் விக்கெட்டைப் பறி கொடுக்காமல் 56 ரன்களை மும்பை அணி எடுத்திருந்தது. சுனில் நரேன் பந்துவீச்சைத் தொடங்கிய போது ஆட்டத்தின் போக்கே மாறிப் போனது. அவரது பந்தில் ரோஹித் சர்மா வெளியேறிவிட மும்பையின் ரன் குவிப்பு வேகமும் குறைந்து போனது.

பத்தாவது ஓவருக்கு மேல் மும்பை வீரர்கள் நத்தை வேகத்தில் ரன்களை எடுத்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இறுதியாக பொலார்டின் கடைசி நேர அதிரடியால் மும்பை அணி 155 ரன்களை எடுத்தது.

அய்யர், திரிபாதியின் அதிரடி

மும்பையின் 156 என்ற வெற்றி இலக்கு கொல்கத்தா அணிக்கு எதுவுமில்லை என்பது போல தொடக்கத்தில் இருந்தே ஆட்டம் அமைந்திருந்தது. உலகின் முன்னணி பந்துவீச்சாளர்களான ட்ரென்ட் போல்ட்டும், பும்ராவும் ரன்களை வாரிக் கொடுக்க வேண்டியிருந்தது.

சுப்மன் கில், வெங்கடேஷ் அய்யர், அடுத்து வந்த ராகுல் திரிபாதி ஆகியோரின் அதிரடியால் மும்பை அணி நிலைகுலைந்து போய்விட்டது. மும்பை அணிக்கு எந்தவொரு தருணத்திலும் வெற்றிக்கான நம்பிக்கையை அவர்கள் தந்துவிடவில்லை.

ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்து அதிரடி காட்டிய வெங்கடேஷ் அய்யர் ரஜினி பக்தர் என்று தன்னைக் கூறிக் கொள்பவர். படையப்பா திரைப்படத்தின் “என் வழி… தனிவழி…” என்பது தனக்குரிய வசனமும்கூட என்று கூறுபவர்.

ஐபிஎல்லில் களமிறங்கிய முதல் போட்டியிலேயே சிறப்பாக ஆடி 41 ரன்களை எடுத்து வெற்றிக்கு உதவிய அவர், இரண்டாவது போட்டியில் அரைச் சதம் அடித்து நம்பிக்கை அளித்திருக்கிறார். அவரை இன்னொரு யுவராஜ் சிங் என்று புகழ்ந்திருக்கிறார் முன்னாள் வீரரான பார்த்திவ் படேல்.