October 19, 2021

உண்மையை உரக்கச் சொல்லும் ஒரே நாளிதழ்

ஊரில் ஒரே ஒரு பட்டியலின பெண்: இட ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்துக்கு மனு போட்டதால் பரபரப்பு

ஒரே ஒரு பட்டியலினப் பெண் இருக்கும் ஊராட்சியில் தலைவர் பதவியை பட்டியலினப் பெண் என்ற பிரிவுக்கு ஒதுக்கீடு செய்ததால், ஊர் மக்கள் அதை எதிர்த்துப் போராடிவந்த நிலையில், கடைசி நேரத்தில் அந்த ஒரே ஒரு பெண் பரபரப்பாக ஓடி வந்து தலைவர் பதவிக்கு வேட்பு மனுத்தாக்கல் செய்துவிட்டார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களில் வரும் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக வேட்புமனு தாக்கல் நேற்று(செப்டம்பர் 22) மாலை 5 மணியுடன் நிறைவுற்றது.

இதுவரை பொதுப்பிரிவில் இருந்த மாதனூர் ஒன்றியத்தை சேர்ந்த நாயக்கனேரி ஊராட்சித் தலைவர் பதவி தற்போதைய தேர்தலில் பட்டியல் இனப் பெண் என்ற பிரிவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.

ஆனால், அந்த ஊரில் ஒரே ஒரு பட்டியலினப் பெண் மட்டுமே இருப்பதாக கூறப்படுகிறது.

எனவே, இந்த ஒதுக்கீட்டை ரத்து செய்ய வலியுறுத்தி அந்த ஊர் மக்கள் தேர்தலைப் புறக்கணித்துப் போராடிவருகின்றனர்.

காமன் தட்டு, சீக்கஜோனை உள்ளிட்ட மலை கிராமங்களை உள்ளடக்கிய இந்த ஊராட்சியில் 2,873 பழங்குடி வாக்காளர்களும், பிற சாதிகளைச் சேர்ந்த 567 வாக்காளர்களும் உள்ளனர்.

ஒவ்வொரு உள்ளாட்சித் தேர்தலிலும் பழங்குடியினரோ அல்லது தலித், பழங்குடியினர் அல்லாத பிற சாதியினரோ ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வந்தனர்.

போராட்டம்.

ஒரே ஒரு ஆதிதிராவிடர் பெண் மட்டுமே இருப்பதாக கூறப்படும் இந்த ஊராட்சியின் தலைவர் பதவியை தனித் தொகுதியாக மாற்றியதை மறுபரிசீலனை செய்யக் கோரி கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் காமனூர் தட்டு பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் மற்றும் சிவகுமார் ஆகியோர் வழக்கு தொடுத்தனர். மேலும் தேர்தலைப் புறக்கணிப்பதாகவும் தெரிவித்து நேற்று முன்தினம் (செப்டம்பர் 21) அன்று கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணியிடம் மனு அளித்திருந்திருந்தனர்.

இதனால் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிக்கு இறுதி நாள் வரை ஒருவர் கூட வேட்புமனு தாக்கல் செய்யாமல் இருந்தனர்.

நாயக்கனேரி ஊராட்சிக்குட்பட்ட 9 ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கும் யாரும் போட்டியிட முன் வரவில்லை.

இந்த நிலையில், காமனூர் தட்டு பகுதியை சேர்ந்த, பட்டியலினத்தை சேர்ந்த பாண்டியன் என்பவரது மனைவி இந்துமதி நேற்று மாலை கடைசி நிமிடத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பரபரப்பாக கிராம மக்களின் எதிர்ப்பை மீறி ஓடி வந்து வேட்புமனு தாக்கல் செய்தார்.

தற்போது இந்துமதி மற்றும் அவரது கணவர் பாண்டியன் இருவருக்கும் காவல்துறை பாதுகாப்பு வழங்கியுள்ளதாக திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து மாதனூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலரை தொடர்புகொண்டு கேட்டபோது, “நாயக்கனேரி ஊராட்சி மன்ற தலைவர் பதவி, இட ஒதுக்கீட்டு சுழற்சியில் பட்டியலின பெண்ணுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஒதுக்கீட்டை ரத்து செய்யும்படி ஊர்மக்கள் கோரி வருகின்றனர்.

இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி கிராமத்தில் யாருமே வேட்புமனு தாக்கல் செய்யாமல் இருந்தபோது, ஒருவர் மட்டும் ஊர் எதிர்ப்பை மீறி மனுத்தாக்கல் செய்துள்ளார். மேலும் ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கு ஒருவர் கூட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

இது தொடர்பாக தேர்தல் ஆணைத்திடம் அறிக்கை சமர்பித்துள்ளோம். இதன் மீது தேர்தல் ஆணையம் முடிவெடுத்து அறிவிக்கும்,” என்று தெரிவித்தார்.

வேட்பு மனுத்தாக்கல் செய்த இந்துமதி.
படக்குறிப்பு,வேட்பு மனுத்தாக்கல் செய்த இந்துமதி.

உள்ளாட்சி தேர்தலை புறக்கணித்த நாயக்கனேரியை சேர்ந்த ஜோதி‌ராமலிங்க ராஜா கூறுகையில், “நாயக்கனேரி ஊராட்சியில் சுமார் 3,500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இதில் பெரும்பாலோர் பழங்குடியினர். ஆனால் இந்த உள்ளாட்சித் தேர்தலில் தலைவர் பதவியை பட்டியலின பெண்ணுக்கு ஒதுக்கியுள்ளனர்.

ஊரில் பட்டியலின மக்களே இல்லை. இம்முறை தொகுதியில் இல்லாத சமூகத்தினருக்கு பதவியை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது. இதனை மறுபரிசீலனை செய்ய கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த ஊராட்சிக்கு உட்பட்ட வேறு சாதியை சேர்ந்தவரை திருமணம் செய்துகொண்ட இந்துமதி என்ற பெண் அண்மையில் நாயக்கனேரி ஊராட்சி வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றார். அவர்தான் தற்போது மனுத்தாக்கல் செய்துள்ளார்” என்று‌ அப்பகுதியை சேர்ந்த ஜோதி‌ராமலிங்க ராஜா தெரிவித்துள்ளார்.

வேட்புமனு தாக்கல் செய்ய இந்துமதி கூறுகையில், “உள்ளாட்சி தேர்தலுக்காக நாயக்கனேரி‌ ஊராட்சித் தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன். இந்த தொகுதியில் ஆதிதிராவிடர், பெண் நான்‌ மட்டுமே இருப்பதால் இந்த தேர்தலில் போட்டியிடுகிறேன். இந்த ஊர்‌ மக்கள் நான் தேர்தலில் போட்டியிடக்‌ கூடாது என்று கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். என்னுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை என்று கூறிவந்தனர்.‌ ஆனால் இப்போது என்னுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது,” என்று தெரிவித்தார்.

இது குறித்து திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரி ஒருவர் பேசும்போது”இந்த இட ஒதுக்கீட்டை தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. ஆதிதிராவிடர் பெண், புதிதாக வந்தாலும் தகுதி அடிப்படையில் வேட்புமனு தாக்கல் செய்திருந்தால் அவரையும்‌ வேட்பாளராகவே பார்க்க வேண்டும். ஆதிதிராவிட மக்கள் இல்லாத இடத்தை தனித் தொகுதியாக அறிவித்ததற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மாதனூர்

ஆனால் இந்த இட ஒதுக்கீடு இப்போது வந்தது அல்ல, தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வந்த போதே இதற்கான அறிவிப்பு வந்துவிட்டது. ஆனால் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதால், இந்த மாவட்டம் உட்பட 9 மாவட்டங்களில் தேர்தல் நிறுத்தப்பட்டது. மேலும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இந்த பகுதியில் உள்ளாட்சி தேர்தல் அறிவித்தபோது இதற்கான அறிவிப்பும் வெளியானது.

அப்போதே இது தொடர்பாக கிராம மக்கள் மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி கோரிக்கை வைத்திருந்தால், இது குறித்து மாநில தேர்தல் ஆணையத்திடம் கேட்டிருக்கலாம். ஆனால் இப்போது அனைத்தும் முடிவடைந்துவிட்டன. இட ஒதுக்கீடு அடிப்படையில் ஒருவர் வேட்பு மனுத்தாக்கல் செய்திருக்கும்போது இதை மறுபரிசீலனை செய்வது கடினமானது,” என்று கூறினார் அவர்.