December 4, 2021

உண்மையை உரக்கச் சொல்லும் ஒரே நாளிதழ்

உங்கள் எதிர்காலத்துக்கு ஒரு கோடி ரூபாய் போதுமா? உண்மையில் எவ்வளவு ரூபாய் தேவைப்படும்?

உங்கள் எதிர்காலத்துக்கு எவ்வளவு பணம் தேவை என உங்களுக்குத் தெரியுமா? அதை எப்படி கணக்கிடுவது? அதை எப்படி சம்பாதிப்பது? இதுபோன்ற கேள்விகளுக்குத்தான் இங்கே விடை காணப் போகிறோம்.

மனிதர்களின் வாழ்கை தரத்தை நிர்ணயிப்பது எப்போதுமே சிக்கலான விஷயமாக இருக்கிறது. 40 ஆண்டுகளுக்கு முன் ஒரு வீட்டில் தொலைபேசி இருப்பது ஆடம்பரம், 30 ஆண்டுகளுக்கு முன் டிவி பெரிய விஷயம். 25 ஆண்டுகள் முன்பு வரை கார் எல்லாம் அரசு அதிகாரிகள் மற்றும் பணக்காரர்களுக்கானது.

ஆனால் இன்று சென்னையில் கீழ் நடுத்தர மக்கள் என்று சொல்லப்படும், மாதம் 50,000 ரூபாய்க்குள் சம்பாதிக்கும் குடும்பங்களிடம் கூட எல் சி டி டிவி, டபுள் டோர் ஃப்ரிட்ஜ், ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷின், லேப்டாப், இருசக்கர வாகனங்கள், வார விடுமுறைகளில் நல்ல ஹோட்டல்களில் சாப்பாடு, சொந்த வீடு, கார் போன்ற கொஞ்சம் பெரிய கனவுகள் என வாழ்கைத் தரம் மாறிவிட்டது.

50,000 – 1,00,000 ரூபாய்க்குள் சம்பாதிப்பவர்கள் கார், பெரிய அடுக்குமாடி குடியிருப்பு வீடு, க்ரெடிட் கார்ட் இ எம் ஐ, வீட்டுக் கடன் இ எம் ஐ, பப், ரெஸ்ட்ரோ பார் என செலவுகள் நீள்கின்றன. 1,00,000 ரூபாய்க்கு மேல் சம்பாதிப்பவர்களுக்கு அவர்களின் சம்பளத்துக்கு தகுந்தாற் போல செலவுகள் இருக்கின்றன.

50,000 ரூபாய்க்குள் சம்பாதிப்பவர்கள்

இந்தியாவில் 50,000 ரூபாய்க்குள் சம்பாதிப்பவர்கள் தான் அதிகம்
படக்குறிப்பு,இந்தியாவில் 50,000 ரூபாய்க்குள் சம்பாதிப்பவர்கள் தான் அதிகம்

இந்தியாவில் அமைப்புசாரா தொழிலாளர்கள், வியாபாரிகள், சுயமாக தொழில் செய்பவர்கள் தான் அதிகம். அவர்கள் மாத வருமானம் 50,000 ரூபாய்க்குள் இருக்கலாம்.

இந்தியாவில் கடந்த 2018 – 19 மதிப்பீட்டு ஆண்டில் 5.87 கோடி பேர் மட்டுமே வருமான வரி தாக்கல் செய்திருக்கிறார்கள் என்கிறது இந்திய நேரடி வரிகள் வாரியத்தின் தரவுகள்.

ஆக இந்தியாவில் வருமான வரி வரம்புக்குள் வராத பலதரப்பட்ட மக்கள் மாதம் 50,000 ரூபாய் சம்பாதிக்கும் வரம்புக்குள் இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. எனவே 50,000 ரூபாய் சம்பாதிக்கும் ஒருவருக்கு ஒரு கோடி ரூபாய் இருந்தால் வாழ முடியுமா? எதிர்காலத்தில் எவ்வளவு பணம் தேவைப்படும், எதில் முதலீடு செய்யலாம்? போன்றவைகளை இங்கு பார்ப்போம்.

“இன்று ஒருவருக்கு 50,000 ரூபாய் தேவைப்படுகிறது என்றால், அதே நபருக்கு 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆர்பிஐயின் பணவீக்கத்தைக் கணக்கிட்டால் எவ்வளவு ரூபாய் தேவைப்படும்? அதே நபருக்கு 20, 30, 40, 50 ஆண்டுகள் கழித்து எவ்வளவு தேவைப்படும்? கீழே அட்டவணையில் பார்க்கவும்.

என்னது… இன்று 50,000 ரூபாய் சம்பாதிப்பவருக்கு, இதே போல வாழ்கையை நடத்த 2040-ல் 1.51 லட்சம் ரூபாய் தேவையா? 2065-ல் மாதத்துக்கு 6,49,274 ரூபாய் தேவையா? என அதிர்ச்சி அடைய வேண்டாம். இது தான் பணவீக்கம் நம் வாழ்கையில் ஏற்படுத்தும் மோசமான விளைவு” என்கிறார் சென்னையைச் சேர்ந்த சான்றளிக்கப்பட்ட நிதி திட்டமிடுபவர் (Certified Financial Planner) த முத்துகிருஷ்ணன்.

உலக வங்கி கணக்குப் படி 2020ஆம் ஆண்டில் இந்தியாவின் நுகர்வோர் பணவீக்கம் 6.6%. நாம் மேலே அட்டவணையில் 6% தான் கணக்கிட்டு இருக்கிறோம். உலக வங்கியின் தரவுகளின் படி இந்தியாவின் பணவீக்கம் 2008 – 2013ஆம் ஆண்டுகளில் 8.3 சதவீதத்துக்கு மேலேயே இருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது. ஆக 6 சதவீத பணவீக்கம் ஒரு சராசரி என்று கருதலாம்.

இந்த பணவீக்கம் எல்லாம் உண்மையிலேயே இத்தனை மோசமாக நம் வருவாயை பாதிக்குமா? என்று கேட்டால் “உங்கள் பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டியிடம் அவர்கள் காலத்தில் மளிகை பொருட்கள், ஆடை ஆபரணங்கள், தங்கம், வீட்டு வாடகை போன்றவைகள் எவ்வளவு இருந்தன என்று கேட்டுப் பாருங்கள். விலைவாசி நம் சம்பாத்தியத்தை எப்படி காலி செய்யும் என்பதை உணர்வீர்கள்” என எச்சரிக்கிறார் முத்துகிருஷ்ணன்.

எவ்வளவு காலம் உழைக்க முடியும்? தொடர்ந்து சம்பாதிக்க முடியுமா?

தொடர்ந்து பேசியவர் “மருத்துவ வளர்ச்சியால் 75 வயது வரை வாழ்வது சர்வ சாதாரணமாகிவிட்டது. இதை இந்திய அரசின் பல தரவுகளும் உறுதிப்படுத்துகின்றன. ஒருவர் நல்ல உடல் நலத்தோடு இருந்து 60 வயது வரை உழைக்கிறார் என வைத்துக் கொள்வோம், ஆட்டோமேஷன், செயற்கை நுண்ணறிவு, மெஷின் லர்னிங் போன்ற தொழில்நுட்ப முன்னேற்றங்களால் அவருக்கு தொடர்ந்து வேலை கிடைக்குமா? அப்படியே கிடைத்தாலும் சம்பளம் நாம் மேலே கணக்கிட்டு இருப்பது போல பணவீக்கத்துக்கு தகுந்தாற் போல அதிகரிக்குமா? என அடுத்தடுத்த கேள்விகள் எழுகின்றன.

ஒருவேளை 60 வயது வரை பணவீக்கத்துக்கு தகுந்தாற் போல வருவாயும் அதிகரிக்கிறது என வைத்துக் கொள்வோம். 2021-ல் 50,000 ரூபாய்க்கு வாழ்ந்த வாழ்கையை வாழ, அதே நபருக்கு 2051ஆம் ஆண்டில், தன் 61ஆவது வயதில், மாதம் 2.87 லட்சம் ரூபாய் தேவைப்படும். ஆண்டுக்கு சுமார் 34.46 லட்சம் ரூபாய் தேவைப்படும்.” என்கிறார் அவர்.

அப்படி என்றால் அவர் கையில் எவ்வளவு ரூபாய் பணம் இருந்தால் அவரால் அடுத்த 15 ஆண்டுகளை யார் தயவுமின்றி கழிக்க முடியும்? அதை எதில் சேமிக்க வேண்டும்? எனக் கேட்டோம்.

எதிர்கால கணக்கு?

“அவருடைய 60ஆவது வயதின் தொடக்கத்துக்குள், அவர் கையில் 3,90,50,000 ரூபாய் பணம் இருக்க வேண்டும். அதை ஆண்டுக்கு 8 சதவீதம் வருமானம் கிடைக்கும் திட்டங்களில் முதலீடு செய்து வைத்தால், அடுத்த 15 ஆண்டுகளுக்கு கவலை இல்லாமல் வாழலாம். அட்டவணையை மேலே பார்க்கவும்.

ஓய்வு பெறுவதற்கு ஓராண்டு காலம் முன்பே, பணம் தயாராக இருக்கும் என்பதால், இத்திட்டத்தில் இருந்து ஒவ்வோர் ஆண்டும் தேவையான பணத்தை எடுத்துக் கொள்ளலாம்.

குறிப்பாக இது பணவீக்கத்தையும் கணக்கிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது 2051-ல், அவரது 61ஆவது வயதில் மாதம் 2.87 லட்சம் ரூபாய், 2061-ல் அவருடைய 70ஆவது வயதில் மாதம் 5.14 லட்சம் ரூபாய் பணத்தைப் பெற முடியும்.

இப்போது சொல்லுங்கள் உங்களுக்கு ஒரு கோடி ரூபாய் பணம் இருந்தால் போதுமா? ஒரு கோடி ரூபாயை வைத்துக் கொண்டு உங்களால் நிம்மதியாக வாழ்ந்து விட முடியுமா?” என நம்மிடமே கேள்வி கேட்கிறார் முத்துகிருஷ்ணன். சரி இதற்கு தீர்வு தான் என்ன?

எதில் முதலீடு செய்வது?

பங்குச் சந்தை
படக்குறிப்பு,பங்குச் சந்தை

“திருமணமாகி குழந்தை பெற்றவர்கள், உடனடியாக ஒரு நல்ல மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை வாங்கிக் கொள்ளுங்கள். பெரிய மருத்துவப் பிரச்சனைகள் வந்தால் உங்கள் சேமிப்புகள் சிதறாமல் தப்பிக்க உதவும்.

அதன் பிறகு உங்கள் கையில் குறைந்தபட்சம் 200 – 300 கிராம் தங்கமாவது வைத்துக் கொள்ளுங்கள். மிக அவசர தேவைக்கு குறைந்த வட்டியில் அரசு மற்றும் தனியார் வங்கிகளில் கடன் வாங்க வசதியாக இருக்கும்.

குறைந்தபட்சம் 2 – 3 மாத சம்பளத்தை அவசர தேவைக்காக என ஏதாவது நிலையான வருமானம் தரக் கூடிய திட்டங்களில் முதலீடு செய்து வையுங்கள். நடுவில் கொரோனா போன்ற சூழலில் வேலை பறிபோனாலோ அல்லது வேறு வேலை தேடும் போதோ குடும்பத்தைக் குறித்து அதிகம் கவலைப்படத் தேவை இருக்காது. உடனடியாக சூழலை சமாளிக்க உதவும்.

பணவீக்கத்தையும் தாண்டி முதலீடு செய்யும் தொகைக்கு அதிக வருமானம் வேண்டும் என்றால், பங்குச் சந்தை தான் ஒரே வழி. வங்கி ஃபிக்சட் டெபாசிட்டுகளில் தற்போது 6.5 சதவீதம் கூட வட்டி கிடைப்பதில்லை.

இந்தியாவிலேயேஎ சுகன்யா சம்ரிதி திட்டத்துக்கு மட்டுமே அரசு 7.6% வட்டி கொடுக்கிறது.

கடன் சார் மியூச்சுவல் ஃபண்டுகளில் கூட 10 சதவீதத்தைத் தாண்டி வருமானம் கிடைப்பது சிரமமே. நேரடியாக பங்குச் சந்தைகளில் முதலீடு செய்தால் அதிக வருமானம் ஈட்டலாம், ஆனால் ரிஸ்க் மிக அதிகம். ஒரேஒரு தவறான முடிவால் மொத்த பணமும் காணாமல் போக வாய்ப்பு இருக்கிறது.

எனவே அடுத்த 30 ஆண்டுகளுக்கு, சராசரியாக 12 சதவீதம் வருமானம் தரக் கூடிய நிஃப்டி இண்டெக்ஸ் ஃபண்டுகள் அல்லது ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்.

ஸ்மால் கேப் ஃபண்டுகள், மிட் கேப் ஃபண்டுகள், லார்ஜ் & மிட் கேப் ஃபண்டுகள், இ.எல். எஸ்.எஸ் ஃபண்டுகள், லார்ஜ் கேப் ஃபண்டுகள் என பல ரக ஃபண்டுகள் கடந்த 10 ஆண்டுகளில் 13.8 சதவீதத்துக்கு மேல் வருமானம் கொடுத்திருக்கின்றன.

எனவே எஸ் ஐ பி வழிமுறையில் மாதம் 11,250 ரூபாய் என ஆண்டுக்கு 12 சதவீதம் வருமானம் கொடுக்கும் திட்டத்தில் 30 ஆண்டுகள் முதலீடு செய்தால் 3.97 கோடி ரூபாய் கிடைக்கும்” என்கிறார் த முத்துகிருஷ்ணன்.