December 4, 2021

உண்மையை உரக்கச் சொல்லும் ஒரே நாளிதழ்

இன்ஸ்டாகிராம்: வரமா, சாபமா?

காலையில் எழுந்தவுடன் மொபைலை கையில் எடுத்து இன்ஸ்டாகிராமைத் திறந்து ஸ்க்ரோலிங் செய்தல். இது நம்மில் பலருக்கு மிகவும் பரிச்சயமான ஒன்றுதான். ஆனால் இந்தத்தளம் நமது மன ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கிறது?

ஃபேஸ்புக் முறைகேடுகளை அம்பலப்படுத்திய ஃபிரான்சஸ் ஹவ்கன், இன்ஸ்டாகிராம் “மற்ற சமூக ஊடகங்களை விட மிகவும் ஆபத்தானது” என்று எச்சரித்தார். நிறுவனத்தின் சொந்த ஆராய்ச்சி அது தீங்கு விளைவிக்கும் என்பதைக் காட்டியது.

“சிக்கலான மற்றும் கடினமான பிரச்சனைகளை புரிந்துகொள்வதற்கான தனது அர்ப்பணிப்பை, இந்த ஆராய்ச்சி காட்டியது என்று இன்ஸ்டாகிராம் அந்த நேரத்தில் தெரிவித்தது.

அரசியல்வாதிகள் சமூக ஊடகங்களை தொடர்ந்து ஆய்வு செய்து வரும் நிலையில், இன்ஸ்டாகிராமில் அவர்களது அனுபவங்களை அறிய ஐந்து பேரிடம் பேசியது.

சமூகத்தை உருவாக்குதல்

டானி
படக்குறிப்பு,டானி இன்ஸ்டாகிராமில் ஒரு சமூகத்தை உருவாக்கியுள்ளார்

டானிக்கு இன்ஸ்டாகிராமுடன் விருப்பு – வெறுப்பு கலந்த உறவு உள்ளது. சவுத் வேல்ஸைச் சேர்ந்த 29 வயதான இவர், இன்ஸ்டாகிராம் மூலம் வருமானம் ஈட்டுகிறார். மேலும் திருநங்கைகள் ஆன்லைனில் இணைவதற்காக ஒரு சமூகத்தை உருவாக்கியுள்ளார்.

ஆனால் அவரது தோற்றம் காரணமாக பல வசவுக் கருத்துகளை எதிர்கொண்டார்.

“இன்ஸ்டாகிராம் என் வாழ்க்கையின் மிகப்பெரிய வரம் மற்றும் மிகப்பெரிய சாபம்” என்று டானி கூறுகிறார்.

“நீங்கள் திருநங்கையாக இருக்கும் நிலையில், இன்ஸ்டாகிராம் கணக்கு தனிப்பட்டதாக இல்லாமல் இருக்கும்போது அது எப்படியும் உங்களை வசவுகளுக்கு இலக்காக்கும். ஆனால் இணையத்தில் நான் பெற்ற சில வெறுப்பு வாசகங்கள் என் ஆன்மாவை அழிப்பதாக இருந்தன,” என்று அவர் குறிப்பிட்டார்.

“இந்த வெறுப்பு நிறைந்த கருத்துக்கள் மோசமானவை. யாரோ ஒருவர் எனக்கு ஒரு இணைப்பை அனுப்பினார். அதில் பலர் என்னுடைய படத்தை எடுத்து என்னைக் கேலி செய்கிறார்கள்,” என்றார் அவர்.

இன்ஸ்டாகிராம் என்பது “சமூக ஒப்பீடு மற்றும் உடல் அமைப்பு பற்றியது… மக்களின் வாழ்க்கை முறைகள் பற்றியது. அதுவே குழந்தைகளுக்கு மிக மோசமாக அமைகிறது,” என ஃபிரான்சஸ் ஹவ்கன், நாடாளுமன்ற கூட்டுக் குழுவிடம் கூறினார்.

குடிப்பழக்கத்தை முறியடித்துள்ள டானி, சமூக ஊடகங்கள் எப்படி மக்களை அடிமையாக்குகின்றன என்பதை தன்னால் பார்க்கமுடிகிறது என்கிறார்.

“இப்போது சில ஆண்டுகளாக நான் நிதானமாக இருக்கிறேன். ஆனால் அடிமையாகும் பழக்கம் உள்ள நபர்களுக்கு இன்ஸ்டாகிராம் மோசமானது என நான் உணர்கிறேன். மேலும் மேலும் வேண்டும் என்ற உணர்வு அப்போது ஏற்படுகிறது,”என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான மெட்டாவின் உலகளாவிய விவகாரங்களின் துணைத் தலைவரான சர் நிக் க்ளெக், “பெரும்பாலான பதின்பருவப்பெண்கள்” இத்தளத்தைப் பயன்படுத்துவதை விரும்புவதாகக் கூறினார்.

இன்ஸ்டாகிராமின் தீங்கு விளைவிக்கும் பயன்பாட்டைச் சமாளிக்கும் கருவிகளை நிறுவனம் அறிமுகப்படுத்தும் என்று அவர் மேலும் தெரிவித்தார். இதில் “டேக் எ பிரேக்” என்ற நட்ஜ் அம்சம் உள்ளது. இது இளம் பயனர்களை வெளியேறத் தூண்டும்.

உடல் அமைப்பு

ஹன்னா
படக்குறிப்பு,ஹன்னா இன்ஸ்டாகிராமில் மோசமான கருத்துகளை பெற்றுள்ளார்

ஹன்னா, ஒரு நாளின் ஆறு முதல் 10 மணிநேரத்தை சமூக ஊடகங்களில் செலவிடுகிறார். தனது பதின்பருவ வயது முதலே அவர் இன்ஸ்டாகிராமில் உள்ளார்.

அயரில் உள்ள ‘வெஸ்ட் ஆஃப் ஸ்காட்லாண்ட்’ பல்கலைக்கழகத்தில் படிக்கும் 24 வயதான அவர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர், ஸ்நாப்சாட், டிக்டாக் போன்ற எல்லா முக்கிய தளங்களிலும் கணக்கு வைத்துள்ளார்.

“என் எல்லா அறிவிப்புகளையும் காலையில் சரிபார்க்கும் மோசமான பழக்கம் எனக்கு உள்ளது,” என்று அவர் விளக்குகிறார்.

“நான் உறங்கச் செல்வதற்கு முன் சரிபார்க்கும் கடைசி விஷயம் இதுதான். எனது முழு நாளும் சமூக ஊடகத்தைச் சுற்றியே இருக்கிறது,”என்கிறார் அவர்.

“நான் டிக்டாக்கிற்கு அடிமையாக இருப்பது உண்மை. என்னால் தொடர்ந்து சில மணிநேரம் ஸ்க்ரோல் செய்ய முடியும். நான் நேரத்தை வீணடிக்கிறேன் என்று எனக்குத் தெரியும்… சில சமயங்களில் நான் அதை கட்டுப்படுத்த முயற்சி செய்கிறேன்,” என ஹன்னா கூறினார்.

இன்ஸ்டாகிராமில், தன் உடல் உருவத்தைப் பற்றி மோசமாக உணரச்செய்த ஃபேஷன் நிபுணர்களை ஹன்னா பின்தொடர்ந்தார்.

“எனது உடல் அவர்களைப் போலவே இருக்க வேண்டும் என்று நான் நினைக்க ஆரம்பித்தேன். உடல் மெலிந்த மாடலாக இருக்க வேண்டும் என்ற எட்டமுடியாத எதிர்பார்ப்புகளை நான் வளர்த்துக்கொள்ள ஆரம்பித்தேன். அது உண்மையில் என் மன ஆரோக்கியத்தை சேதப்படுத்துவதைக் கண்டேன். அதனால் நான் ஒரு படி பின்வாங்கி அவர்களைப் பின்தொடர்வதை நிறுத்தினேன்,” என்றார் அவர்.

இப்போது அவர் பின்தொடர்பவர்களை மாற்றியுள்ளார். ஃபேஷன் நிபுணர்களுக்கு பதிலாக அவர் உடலமைப்பு பற்றிய ஆக்கப்பூர்வ கருத்துக்கள் கூறுபவர்களை பின்தொடர்கிறார்.

“எல்லோரும் சைஸ் சிக்ஸ், அதிகம் மெலந்த, ஆறு அடி மாடல் அல்ல என்பதை நான் உணர்ந்தேன். என்னைப் போலவே தோற்றமளிக்கும் நபர்களை நான் பின்தொடர ஆரம்பித்தேன். அது என் உடலமைப்பு மீதான தன்னம்பிக்கையை மேம்படுத்தியது.”

இன்ஸ்டாகிராமில் ஹன்னா, கேலி செய்யும் சில கருத்துகளையும் பெற்றுள்ளார்.

“என் உடல் எடை கூடிவருவதாலும், நான் சைஸ் டென்னாக இருப்பதாலும் நான் இளைக்க வேண்டும் என்று சிலர் கூறினர். இது என் உடலைப் பற்றி என்னை எதிர்மறையாக சிந்திக்க வைத்தது,” என்று அவர் கூறினார்.

நச்சு சூழல்

அனிசா
படக்குறிப்பு,ஸ்கார்லெட் மற்றும் அனிசா இன்ஸ்டாகிராம் பயன்படுத்துகின்றனர்

நார்த் லண்டனில் உள்ள பெண்களுக்கான ஹார்ன்சி பள்ளியில் படிக்கும் ஸ்கார்லெட் மற்றும் அனிசா, சமூக ஊடகங்களின் ஆபத்துகள் குறித்து தங்களுக்குத் தெரியும் என்று தெரிவித்தனர்.

15 வயதாகும் ஸ்கார்லெட், ஃபேஸ்புக்கைத் தவிர அனைத்து தளங்களையும் பயன்படுத்துகிறார். இது தன் வயதினருக்கானது அல்ல என்று அவர் நினைக்கிறார்.

“நான் விரும்பும் எம்மா சேம்பர்லைன் போன்ற ஃபேஷன் பற்றிய உள்ளடக்கத்தை உருவாக்கும் யூடியூபர்களை நான் பின்தொடர்கிறேன்,” என்று அவர் கூறுகிறார்.

“ஆனால் இப்போது நான் பருவமடைந்துவிட்ட நிலையில், மிகவும் உயர்ந்த அழகுத் தரம் கொண்ட ஒருவரைப் பார்க்கும்போது, நானும் அப்படியே தோற்றமளிக்கவேண்டும் என்று நினைக்கிறேன். அது மிகவும் கடினமாக உள்ளது. மேலும் அது பாதுகாப்பற்ற உணர்வை எனக்கு ஏற்படுத்தியது,” என்று அவர் குறிப்பிட்டார்.

“நான் பலரையும் பின்தொடர்வதை நிறுத்திவிட்டேன்.” என்கிறார் அவர்.

15 வயதாகும் அனிசா, எதிர்மறையான உள்ளடக்கத்தைத் தவிர்க்க, தான் பின்பற்றுபவர்களை மாற்றுகிறார். ஆனாலும் கூட, தான் பார்க்க விரும்பாத பல விஷயங்களை அவர் இணையத்தில் பார்த்தார்.

“சிலரின் கணக்குகள் நச்சுச் சூழலை உருவாக்குவதை நான் கவனித்திருக்கிறேன். நான் பதின்பருவ வயதில் இருப்பதால், மூளைச் சலவை செய்யப்படாமல் இருப்பதை நான் கவனித்துக்கொள்ள வேண்டும்,” என்கிறார் அனிசா.

“ஒரு முஸ்லிம் என்ற முறையில், எங்களைப் பற்றிய மோசமான பிரதிநிதித்துவம் இருப்பதாக நான் உணர்கிறேன்… அதனால் அந்த வகையான உள்ளடக்கத்தைப் பார்த்தால் நான் பின்தொடர்வதை நிறுத்திவிடுவேன்”

சமூக ஊடகங்களில், குறிப்பாக தங்கள் நண்பர்களுடன் காணொளி எடுக்கும் போது, மகிழ்ச்சியான அனுபவங்களை பெற்றதாக இந்த சிறுமிகள் கூறுகிறார்கள்.

“நான் நிறைய சமையல் வீடியோ ரெசிபிகளை முயற்சித்தேன். ஆன்லைன் வீடியோக்களில் இருந்து நிறைய திறன்களைக் கற்றுக்கொண்டேன்,” என்று ஸ்கார்லெட் கூறுகிறார்.

“ஆச்சர்யமான உண்மைகள், குறிப்புகள், வாழ்க்கை ஆலோசனைகள் கொண்ட கணக்குகளும் அங்கே உள்ளன. இங்கே எல்லாமே மோசமானதல்ல. இருப்பினும் எதிர்மறைகள் நேர்மறைகளை விட அதிகம் இருப்பதாக தோன்றுகிறது.”

சமூகஊடக கணக்கு இல்லாதவர்கள்

லியா
படக்குறிப்பு,லியா இன்ஸ்டாகிராம் பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை

பள்ளியில் உள்ள அனைவருமே இன்ஸ்டாகிராமில் இல்லை. 15 வயதான லியா, இன்னும் கணக்கை திறக்க அனுமதிக்கப்படவில்லை.

“அங்கே எதிர்மறையான பல விஷயங்கள் இருப்பதால், என் அம்மாவின் முடிவை நான் நம்புகிறேன்,” என்று அவர் கூறுகிறார்.

“நான் சமூக ஊடகங்களை வைத்திருக்க விரும்புகிறேன். ஏனென்றால் எனது நண்பர்கள் அனைவரிடமும் அது இருக்கிறது. நண்பர்கள் குழுவில் இருந்து நான் தனித்து இருப்பதுபோல, சில நேரங்களில் உணர்கிறேன். ஆனால் அதன் மோசமான பக்கமும் எனக்குத் தெரியும். என் வயதினர் பார்க்கக்கூடாத பொருத்தமற்ற படங்கள் மற்றும் வீடியோக்களை என் நண்பர்கள் பெற்றதைப் பற்றி நிறைய கதைகளை நான் கேள்விப்பட்டிருக்கிறேன்,” என்று அவர் கூறினார்.

13 வயதிற்குட்பட்டவர்களுக்கான “Instagram Kids” என்று அழைக்கப்படும் “இன்ஸ்டாகிராம் அனுபவத்தை” உருவாக்குவதற்கான திட்டத்தை மெட்டா நிறுவனம் (முன்பு ஃபேஸ்புக்) செப்டம்பரில் நிறுத்தியுள்ளது.

“பெற்றோர், வல்லுநர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் ஆகியோரின் ஆலோசனைகளைக் கேட்க நிறுவனத்திற்கு நேரம் எடுக்கும்,” என இன்ஸ்டாகிராம் தலைவர் ஆடம் மொசெரி கூறியுள்ளார்.