December 4, 2021

உண்மையை உரக்கச் சொல்லும் ஒரே நாளிதழ்

அ.தி.மு.க கொடி, பொதுச் செயலாளர் பதவி : சசிகலா செய்வது சட்டவிரோதமா?

சசிகலா விவகாரத்தால் அ.தி.மு.கவில் எழுந்துள்ள புயல், எப்போது ஓயும் என அக்கட்சியின் நிர்வாகிகள் விவாதித்து வருகின்றனர். `கட்சியை ஒற்றுமைப்படுத்துவதில்தான் அனைவரும் உறுதியாக உள்ளனர். தலைவர்களுக்குள் எந்தப் பிரச்னைகளும் இல்லை’ என்கிறார், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சி.பொன்னையன். உண்மையில் என்ன நடக்கிறது?

பசும்பொன்னில் வரும் 30ஆம் தேதி தேவர் குருபூஜை நடக்க உள்ளது. இதற்காக வங்கி லாக்கரில் இருந்து தேவர் குருபூஜைக்கான தங்கக் கவசத்தை ஒப்படைக்க மதுரை வந்த ஓ.பன்னீர்செல்வம், ` சசிகலாவை அ.தி.மு.கவில் சேர்ப்பது தொடர்பாக தலைமைக் கழக நிர்வாகிகள் கூடி முடிவெடுப்பார்கள்’ என்றார். இந்த ஒற்றைக் கருத்து, அ.தி.மு.கவின் இரு அணிகளுக்கும் இடையே மோதலை ஏற்படுத்திவிட்டது.

“டி.டி.வி.தினகரனை ரகசியமாக சந்தித்தார்”

இதுதொடர்பாக, அ.தி.மு.கவின் தென்சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட செயலாளர் ஆதி ராஜாராம் அளித்த பேட்டியில், ` சசிகலாவுக்கு அ.தி.மு.கவில் இடம் இல்லை என்பதை ஓ.பி.எஸ் அழுத்தம்திருத்தமாக தெரிவிக்க வேண்டும். அ.தி.மு.கவில் ஓ.பி.எஸ் இணைந்த பிறகு டி.டி.வி.தினகரனை ரகசியமாக சந்தித்தார். அந்த சந்திப்பையே தினகரன் வெளியில் சொன்னார். சசிகலாவை நீக்குவது என்பது தலைமைக் கழகம் எடுத்த முடிவுதான். அவர்களோடு தொடர்பில் இருந்த அனைவரையும் கட்சியைவிட்டு நீக்கிவிட்டோம். ஆடியோ நாடகம் போட்ட சசிகலா, இப்போது சுற்றுபயணம் செல்கிறேன் என்கிறார். அவர் பொதுச் செயலாளர் எனக் குறிப்பிட்டதற்காக வழக்கு போட்டுள்ளோம். இப்படிப்பட்ட சூழலில் ஓ.பி.எஸ் பேசுவது மனவருத்தத்தை அளிக்கிறது’ என்றார்.

அதேநேரம், ஓ.பி.எஸ்ஸின் ஆதரவாளரும் அ.தி.மு.கவின் அமைப்புச் செயலாளருமான ஜே.சி.டி பிரபாகர் கூறுகையில், ` ஓ.பி.எஸ் கூறிய கருத்தில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், கே.பி.முனுசாமி கூறிய கருத்துகள், தென்மாவட்ட மக்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒருவரை ஒருவர் மறைமுகமாக தாக்கி தலைவர்கள் பேட்டி அளிப்பதால்தான் இதனைச் சொல்கிறேன்’ என்றார்.

ஓ.பி.எஸ் கருத்தை ஆதரித்த செல்லூர் ராஜு

இந்நிலையில், ஓ.பி.எஸ், இ.பி.எஸ் இடையே ஏற்பட்டுள்ள முரண்பாடு குறித்து மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, ` இந்த விவகாரத்தில் எந்த சர்ச்சைகளும் இல்லை. அனைவரும் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று ஓ.பி.எஸ் கூறிய பிறகு, இணை ஒருங்கிணைப்பாளர் எந்தக் கருத்தையும் சொல்லவில்லை. அனைவரும் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்பதில் என்ன தவறு இருக்கிறது? கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் அவர் சொன்னதில் எந்தத் தவறும் இல்லை. உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஆலோசனை செய்வோம் என்றுதான் ஓ.பி.எஸ் சொன்னார். அது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுவிட்டது. இதனால் பிற நிர்வாகிகளும் எதிர்க்கருத்தை தெரிவித்தனர்’ என்றனர்.

செல்லூர் ராஜு
படக்குறிப்பு,செல்லூர் ராஜு

இதற்கிடையில், சேலம் ஓமலூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் சுமார் 200 நிர்வாகிகள் மத்தியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, `எனக்கு வயிற்று வலி இருந்தாலும் அதனைப் பொருட்படுத்தாமல்தான் உங்களிடம் பேசுகிறேன். அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். யாரைப் பற்றியும் தவறாகப் பேச வேண்டாம். கடும் சொற்கள் ஆறாது என்பதை அனைவரும் உணர வேண்டும்’ என்றார்.

அ.தி.மு.க நிர்வாகிகளுக்கு இடையே வலுக்கும் கருத்து மோதல் ஒருபுறம் இருந்தாலும் கடந்த 27 ஆம் தேதி தஞ்சையில் நடைபெற்ற தினகரனின் மகள் ஜெயஹரினியின் திருமண வரவேற்பில் ஓ.பி.எஸ்ஸின் தம்பி ஓ.ராஜா பங்கேற்றதும் விவாதமானது. மேலும்,பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழாவுக்காக சசிகலா மதுரை சென்றுள்ளார். அங்கும் தஞ்சாவூரிலும் ஆதரவாளர்களை சந்தித்துப் பேச உள்ளதாகக் கூறப்படுகிறது. அ.தி.மு.கவில் ஏற்பட்டுள்ள உள்கட்சி குழப்பங்கள் தனக்குச் சாதகமாக மாறும் எனவும் அவர் நம்புகிறார்.

“தலைவர்களுக்குள் பிரச்னையில்லை”

“சசிகலா விவகாரம் அ.தி.மு.கவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதே?” என அ.தி.மு.கவின் மூத்த நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான பொன்னையனிடம் பேசினோம்.

“ இது மிகவும் முக்கியமான விஷயம். வெளியில் வரும் செய்திகள் எல்லாம் ஊடகங்களால் பரப்பப்படுகிறது. கட்சியை ஒற்றுமைப்படுத்துவதில்தான் அனைவரும் உறுதியாக உள்ளனர். தலைவர்களுக்குள் அப்படி எந்தப் பிரச்னைகளும் இல்லை. `சசிகலா வர வேண்டும்’ என எனக்குத் தெரிந்தவரையில் ஓ.பி.எஸ் சொல்லவில்லை. அது ஊடகங்கள் பரப்பும் பொய்த் தகவல்கள். `கட்சியின் ஆட்சிமன்றக் குழு முடிவெடுக்கும்’ என்றுதான் அவர் கூறினார். `சசிகலா வர வேண்டும்’ எனவும் கூறவில்லை. `வரக்கூடாது’ எனவும் கூறவில்லை. கட்சி நன்றாகவும் ஒற்றுமையாகவும் உள்ளது. தொண்டர்களும் நல்லபடியாக உள்ளனர்” என்கிறார்.

ஒபிஎஸ் vs இபிஎஸ்

மேலும், ` அமைப்புச் செயலாளர் ஜே.சி.டி பிரபாகரும், `ஓ.பி.எஸ் அவ்வாறு சொல்லவில்லை’ என்றுதான் சொல்கிறார். சட்டமன்றத் தேர்தலில் ஓர் இடத்தில்கூட தென்மாவட்டத்தில் சசிகலா தரப்பினர் வெற்றி பெறவில்லை. அவர் பக்கம் சாதி இருந்திருந்தால் ஒரு சில இடங்களிலாவது அவர்கள் வெற்றி பெற்றிருக்க வேண்டுமே?” என்கிறார்.

“சசிகலா செய்வது சட்டவிரோதம்”

“ பொதுச்செயலாளர் என்ற அடைமொழியோடுதானே சசிகலா அறிக்கைகளை வெளியிடுகிறார்?” என்றோம். “அதெல்லாம் சட்டவிரோதம். சசிகலா தனக்கு வேண்டியவர்களுக்குக் கடிதம் எழுதுகிறார். கட்சியின் கொடி, பெயரை அவர் பயன்படுத்தக் கூடாது. `அவர் கட்சியின் பொதுச்செயலாளர் கிடையாது, கட்சியின் உறுப்பினரும் கிடையாது’ என உச்ச நீதிமன்றம் கூறிய பிறகு, அவர் செய்வதை ஊடகங்களும் செய்தியாக வெளியிடலாமா? சசிகலா செய்வது நீதிமன்ற அவமதிப்பு. உச்ச நீதிமன்றமே கூறிய பிறகு வேறு என்ன சொல்வது?” என்கிறார்.

“ விளிம்பு நிலை மனிதர்களுக்காக இருந்த கட்சி, தற்போது பணம் படைத்தவர்களுக்கான கட்சியாக மாறிவிட்டது. கட்சியில் பகைமைகள் இருக்கலாம், அதில் தவறில்லை. எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒற்றுமையாக இருந்து கட்சியை வழிநடத்திக் கொண்டு செல்ல வேண்டும். ஓ.பி.எஸ்ஸிடம் நம்பகத்தன்மை இல்லை. இது அடுத்தகட்டமாக எதை நோக்கிச் செல்லும் எனத் தெரியவில்லை” என்கிறார், மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம்.

தொடர்ந்து பேசியவர், “ டிசம்பருக்குள் அ.தி.மு.கவின் பொதுக்குழுவை கூட்ட வேண்டும். அதற்கான தைரியம் எடப்பாடிக்கு இருக்கிறதா எனத் தெரியவில்லை. அ.தி.மு.கவின் பொன்விழா கொண்டாட்டம் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், அக்கட்சிக்கான அவைத் தலைவரையே அவர்களால் தேர்வு செய்ய முடியவில்லை. இப்படிப்பட்ட நிலையில், சசிகலா உள்ளே வருவதால் கட்சிக்கு ஆபத்து என்றால், கட்சியில் உள்ள மற்றவர்களுக்கெல்லாம் எதுவும் தெரியாதா என்ன? ஒருவர் வருவதால் கட்சிக்கு எப்படி ஆபத்து வரும்?

அ.தி.மு.க, தி.மு.க உணர்த்தும் குறியீடு

அ.தி.மு.கவில் இருந்து விலகியுள்ள அனைவருமே அ.தி.மு.கவுக்குள் வர வேண்டும். எதிர்க்கட்சி பிளவுபட்டால் ஆளும்கட்சிக்குத்தான் லாபம். பள்ளியில் சென்று உட்காருவது, பேருந்தில் ஆய்வு செய்வது, காவல்நிலையம் செல்வது என எம்.ஜி.ஆர். பாணியில் ஸ்டாலின் செயல்படுகிறார். அவர் மக்களுக்கான முதல்வராக குறியீடுகளின் மூலம் உணர்த்துகிறார். அதேநேரம், அ.தி.மு.கவிலோ, சண்டை, சச்சரவு, ஒற்றுமையின்மை என பல குறியீடுகளை தொண்டர்களுக்கு உணர்த்துகின்றனர். நம்பிக்கைக்குரியதாக இருக்க வேண்டிய கட்சி, நகைப்புக்கு இடம் கொடுக்கும் வகையில் செயல்படுகிறது. தவிர, எம்.ஜி.ஆர் கட்சிக்கு இவர்கள் எப்படி சொந்தம் கொண்டாட முடியும் எனத் தெரியவில்லை” என்கிறார்.

எம்.ஜி.ஆர்

“அ.தி.மு.க கொடியை சசிகலா பயன்படுத்துவது சட்டவிரோதம் என்கிறாரே பொன்னையன்?” என்றோம். “ தவறான தகவல். தேர்தல் கமிஷனின் 2/2017 உத்தரவின்படி அ.தி.மு.க பெயர், இரட்டை இலை சின்னம் ஆகியவற்றை மூன்று பேரிடம் ஒப்படைத்தது. இரட்டை சின்னம் என்பது தேர்தல் ஆணையத்துக்கு சொந்தமானது. அதன் பயன்பாட்டு உரிமை மட்டுமே அ.தி.மு.கவிடம் உள்ளது. கட்சிகளின் கொடி தொடர்பாக, இந்தியாவில் எந்தக் கட்சிக்குமே தேர்தல் ஆணையத்தில் இடம் இல்லை. கட்சியின் பெயர், சின்னம் ஆகியவை மட்டுமே அதன் அதிகார வரம்புக்குள் வரும்.

ஒரு கட்சியின் உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோர் விவரங்கள் மட்டுமே தேர்தல் ஆணையத்திடம் இருக்கும். கட்சியின் உள்விதிகளுக்குள் தேர்தல் ஆணையம் செல்வதில்லை. அது சிவில் வழக்கு. உச்ச நீதிமன்றம் கூறியிருந்தால் அங்கு சென்று இவர்கள் உத்தரவு வாங்க வேண்டியதுதானே?” என்கிறார்.

எம்.ஜி.ஆர் சொன்ன காரணம்

“ உதாரணமாக, எம்.ஜி.ஆர் காலத்தில் அ.தி.மு.கவின் தலைமை நிலைய செயலாளராக ஹெ.வி.ஹண்டே இருந்தார். அன்றைக்கு, `தொண்டர்கள் அனைவரும் பச்சை குத்த வேண்டும்’ எனக் கூறியதை ஹண்டே எதிர்த்தார். இதையடுத்து தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு அ.தி.மு.க கொடி கட்டிய காரில் அவர் கிளம்பினார். அவர் அ.தி.மு.க கொடி கட்டிய காரில் கிளம்புவது தொடர்பாக நிர்வாகிகள், எம்.ஜி.ஆரிடம் புகார் தெரிவித்துள்ளனர். இதற்குப் பதில் அளித்த எம்.ஜி.ஆர், ` என் பேரில் யாருக்கெல்லாம் அபிமானம் இருக்கிறதோ, யாருக்கெல்லாம் அ.தி.மு.கவின் கொள்கைகளில் நம்பிக்கை உள்ளதோ, அவர்கள் எல்லாம் கொடியை பயன்படுத்தலாம்’ என்றார். இது மிகவும் எளிமையான விளக்கம். அ.தி.மு.க கொடியைப் பயன்படுத்தினால் அவர் அ.தி.மு.கவை சேர்ந்தவர் என்றுதான் அர்த்தம்” என்கிறார் ஷ்யாம்.

“ஓ.பி.எஸ்ஸின் நகர்வுகளை எப்படிப் பார்ப்பது?” என்று அவரிடம் கேட்டோம். “ அரசியலில் வாழ்நாள் சாதனையாளர் விருதை ஓ.பி.எஸ்ஸுக்கு கொடுக்கலாம். இதுவரையில் அவரது செயல்பாடுகள் அப்படித்தான் உள்ளன. எடப்பாடியை சற்று அடக்கி வைப்பதற்கு இதனை ஓ.பி.எஸ் பயன்படுத்திக் கொள்வார். தொடர்ந்து அதையேதான் அவர் செய்து வருகிறார். இப்போது என்ன செய்யப் போகிறார் எனத் தெரியவில்லை” என்கிறார்.