December 4, 2021

உண்மையை உரக்கச் சொல்லும் ஒரே நாளிதழ்

அலிபாபாவின் ஜாக் மா போன்ற தொழிலதிபர்களுக்கு பாடம் புகட்ட விரும்பும் சீனா: காரணம் என்ன?

சீன தொழிலதிபர் ஜாக் மா வெற்றி நடை போட்டுக்கொண்டிருந்தார். அவரது நிறுவனமான ‘அலிபாபா’வின் சார்பு நிதி நிறுவனமான ‘க்ரூபோ ஹார்மிகா’ 2020 நவம்பரில் ஹாங்காங் மற்றும் ஷாங்காய் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட இருந்தது.

க்ரூபோ ஹார்மிகாவின் மதிப்பு, சுமார் 34.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 2.5 லட்சம் கோடி ரூபாய்) என மதிப்பிடப்பட்டுள்ளது. இப்படி பட்டியலிடப்படுவது அலிபாபாவின் வரலாற்றில் ஒரு மைல் கல்லாக இருக்கும் என்று கருதப்பட்டது. ஆனால் கடைசி சில நிமிடங்களில் நிலைமை மாறியது.

சீன நிதி கட்டுப்பாட்டு அலுவலர்கள், சந்தையில் போட்டி குறித்த கவலைகள் என்ற காரணத்தைக் காட்டி, பட்டியல் செயல்முறையை நிறுத்தினர். இதுமட்டுமின்றி, இந்தப் பட்டியலிடலைக் கொண்டாடும் நிகழ்ச்சியின் போது, மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டது. இசை நிகழ்ச்சியும் முடக்கப்பட்டு விருந்தினர்கள் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். இதற்குப் பிறகு, நிறுவனத்தை மறுசீரமைக்குமாறு அலிபாபாவிடம் அரசாங்கம் கேட்டுக்கொண்டது. ஒரு காலத்தில் சீனாவின் வெற்றியின் அடையாளமாக இருந்த ஜாக் மா, பல மாதங்களாக மக்கள் பார்வையில் படாமலே இருந்தார்.

இந்த எதிர்பாராத முடிவு, சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆனால் அலிபாபாவுக்கு நேர்ந்த கதி, சீனாவின் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு எதிரான ஷி ஜின்பிங் அரசின் நடவடிக்கையின் ஆரம்பம் என்று கருதப்படுகிறது.

அதிபர் ஷி ஜின்பிங் எடுத்த முடிவு

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு கூட்டத்தின் போது, அதிபர் ஷி ஜின்பிங் நாட்டின் தொழில்நுட்ப நிறுவனங்களின் மீதான கட்டுப்பாட்டை இறுக்குவதற்கான தனது முடிவை நியாயப்படுத்தினார் என்று அதிகாரப்பூர்வ ஊடக அறிக்கை தெரிவிக்கிறது.

நியாயமற்ற மூலதன விரிவாக்கத்தை நிறுத்த வேண்டும், கணக்கில்லாத வளர்ச்சியைக் கட்டுப்படுத்தவேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டுதான் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று அவர் நியாயப்படுத்தினார்.

இந்த நிறுவனங்களுக்கு எதிரான நடவடிக்கையை இரட்டிப்பாக்கப் போவதாக அவர் தெளிவான எச்சரிக்கை விடுத்தார். சோசலிச சந்தைப் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், சாதாரண மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும் இந்த நடவடிக்கை அவசியம் என்றும் ஷி ஜின்பிங் கூறுகிறார்.

‘சாமானிய மக்களின் நல்வாழ்வு’ என்ற முழக்கம் ஷி ஜின்பிங் அரசாங்கத்தின் புதிய மந்திரமாகும். வளங்களை சமமாகப் பகிர்ந்தளிக்கவும் நிறுவனங்களிடையே போட்டியை அதிகரிப்பதற்கும் இது அவசியம் என்று அவர் கூறுகிறார்.

ஷி ஜின் பிங்
படக்குறிப்பு,ஷி ஜின்பிங்

க்ரூபோ ஹார்மிகாவின் ஐபிஓ-வைத் தடை செய்த பிறகு, அரசாங்கம் மற்ற தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த நிறுவனங்கள் மின்னணு வணிகம், போக்குவரத்து, ஃபின்-டெக், வீடியோ கேம்ஸ் மற்றும் ஆன்லைன் கல்வி வணிகத்துடன் தொடர்புடையவை.

மிக அதிக அபராதம்

தொழிலதிபர் ஜாக் மாவின் பொருளாதார சாம்ராஜ்யத்தின் முக்கிய இ-காமர்ஸ் நிறுவனமான அலிபாபாவுக்கு இந்த ஏப்ரல் மாதம் 2.8 பில்லியன் டாலருக்கு நிகரான அபராதம் விதிக்கப்பட்டது. நாட்டின் பொருளாதார வரலாற்றில் ஒரு நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட மிகப்பெரிய அபராதம் இதுவாகும்.

சந்தையில் தனது அந்தஸ்தை இந்நிறுவனம் தவறாகப் பயன்படுத்தியதுதான் அபராதம் விதிக்கப்பட்டதற்கு காரணமாகக் கூறப்படுகிறது.

அரசாங்கத்தின் புதிய கட்டுப்பாடுகளின் பார்வையில் வரும் நிறுவனங்கள்-டென்சென்ட் (இணைய நிறுவனம்), மேயிதுவான் (உணவு விநியோகம்), பிண்ட்யுவோடுவோ (இ-காமர்ஸ்), தீதீ (ஆப் அடிப்படையிலான வாகனச் சேவை), ஃபுல் டிரக் அலையன்ஸ், காஞ்சம் (ஆள் சேர்ப்பு), நியூ ஓரியண்டல் எஜுகேஷன் (ஆன்லைன் கல்வி) ஆகியனவாகும்.

சீனா.

அலிபாபா, தீதீ மற்றும் மேயிதுவான் ஆகியவை அரசாங்கத்தின் முடிவுக்கு ஒத்துழைப்பதாகக் கூறி தனித்தனியாக அறிக்கைகளை வெளியிட்டன.

இந்த வரிசையில் சமீபத்தில் நடந்த விவகாரம் மின்சார கார் தயாரிப்பாளர் BYD சம்பந்தப்பட்டது. இந்நிறுவனம் தனது சிப் தயாரிக்கும் பிரிவில் பங்குகளை விற்க திட்டமிட்டிருந்தது. ஆனால் ‘அரசு ஆய்வு’ காரணமாக இந்தச் செயல்முறை பாதியில் நிறுத்தப்பட வேண்டியதாயிற்று.

நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும் முயற்சி

தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு எதிரான தற்போதைய அரசாங்க நடவடிக்கைகள் எல்லாம் ஒன்றுக்கொன்று வேறுபட்டவை என்று ஷி ஜின்பிங் அரசாங்கம் கூறுகிறது. நிறுவனங்களுக்கு எதிரான அரசாங்க முடிவுகளை நியாயப்படுத்தப் பயன்படுத்தப்படும் வாதங்களில் முக்கியமானவை ‘ஏகபோகங்களைத் தடுப்பது’ மற்றும் ‘பயனர் தரவைப் பாதுகாத்தல்’ என்பவையாகும்.

சமீபத்தில் இது தொடர்பாக ஒரு சட்டமும் நிறைவேற்றப்பட்டது. கூருணர்வு மிக்க தனிப்பட்ட தரவுகளைச் சட்டவிரோதமாக சேமித்து வைப்பது, நிறுவனத்தின் செயல்பாடுகளை இடைநீக்கம் அல்லது தடை செய்ய வழிவகுக்கும்.

தொழில்நுட்ப நிறுவனங்களால் ‘பாதிப்பு’ என்ற இந்தக் கோணத்தில், தரவுப் பாதுகாப்பு மதிப்பாய்வு செய்யப்பட்டு, ‘கணக்கிடப்படாத மூலதன விரிவாக்கம்’ என்ற அடிப்படையில், நிறுவனங்களைக் கட்டுப்படுத்த பயன்படுத்தப்படுகிறது.

கடந்த ஆண்டு டிசம்பரில், இந்த முழக்கத்தை அரசாங்கம் கையிலெடுத்தது. ‘பொது மக்களின் நலனை விலையாகக் கொடுத்து, நிறுவனங்கள் முன்னேற அனுமதிக்கப்படாது’ என்பதே இதன் பொருள்.

ஆன்ட் குரூப், அலி பாபா, டென்சென்ட் ஆகியவற்றின் மீது ஷி ஜின் பிங் அரசின் கவனம் திரும்பியது.
படக்குறிப்பு,ஆன்ட் குரூப், அலி பாபா, டென்சென்ட் ஆகியவற்றின் மீது ஷி ஜின் பிங் அரசின் கவனம் திரும்பியது.

பல ஆய்வாளர்கள் இதனை, நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக பார்க்கின்றனர்.

அரசின் பார்வை

சிங்கப்பூரில் உள்ள ஒரு வணிகப் பள்ளியின் சர்வதேச வணிகப் பேராசிரியர் மைக்கேல் விட், இது குறித்து, “சீன கம்யூனிஸ்ட் கட்சி, தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சிக்கு ஒரு வேகத் தடையைப் போட விரும்புகிறது. கட்டுப்பாடு யார் கையில் இருக்கிறது என்பதை மறக்க வேண்டாம் என்று எச்சரிப்பதாக இது உள்ளது” என்கிறார்.

“ஜாக் மாவுக்கு இதுதான் நடந்தது. அவர் அரசாங்கத்தை விமர்சித்தார், அதன் பிறகு அவரது நிறுவனம் தொடர்பான ஐபிஓ-வை நிறுத்த முடிவு செய்யப்பட்டது. தீதீ-க்கும் அதேதான் நடந்தது. அது அரசாங்க வழிகாட்டுதல்களைப் பின்பற்றவில்லை.”

“அரசாங்கத்தின் கருத்து என்னவென்றால், இந்த நிறுவனங்களை தண்டிக்காமல் விட்டுவிட முடியாது. சீனாவில் நடப்பது அனைத்தையும் கட்டுப்படுத்தும் கயிறு யாரிடம் உள்ளது என்பதுதான் இதில் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.”

பீட்டர்சன் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்டர்நேஷனல் எகனாமிக்ஸ், அமெரிக்க சிந்தனைக் குழுவின் ஆராய்ச்சியாளர் மார்ட்டின் சோர்சென்பா, கட்டுப்பாட்டை உறுதி செய்வதைத் தவிர, அரசாங்கம் வேறு எதையோ கூட அடைய விரும்புகிறது என்றும் இதற்குச் சில சரியான காரணங்களும் இருக்கலாம் என்றும் கூறுகிறார்.

அவர், “பொது மக்களின் தனியுரிமை தொடர்பான தரவை சிறப்பாகப் பாதுகாத்தல் மற்றும் உலகெங்கிலும் உள்ள சமூகங்களில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதால் ஏற்படும் தீங்குகளைத் தடுப்பது சரியான காரணமாக இருக்கலாம்.” என்று கூறுகிறார்

தொழில்நுட்ப மேன்மை

மேலும் அவர், “ஆனால் நாம் தரவுகளைத் தேசியமயமாக்குவது பற்றி பேசுகிறோம். செழித்து வளர்வதற்குக் குறைவான வாய்ப்புகள் உள்ள தனியார் நிறுவனங்களுக்கு கடுமையான சட்டங்களை விதிப்பது பற்றிப் பேசுகிறோம். அப்போது இது ஒரு பெரிய பிரச்னையாகத் தெரிகிறது.” என்கிறார்.

சீனா.

ஹாங்காங் பல்கலைக்கழகத்தின் சீன சட்ட மையத்தின் இயக்குநர் ஏஞ்சலா ஜாங் இதை வரலாற்றுக் கண்ணோட்டத்தில் விளக்க முயற்சிக்கிறார். சீனாவில் நீண்ட காலமாகத் தொழில்நுட்பத் துறையில் கட்டுப்பாடு தொடர்பான கவலைகள் இருந்தன என்றும் அவற்றைத் தீர்ப்பதற்காக மட்டுமே அரசாங்கக் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன என்றும் அவர் கூறுகிறார்.

“சீன தொழில்நுட்ப நிறுவனங்கள் இப்போதுவரை மிகவும் எளிமையான சூழலில் செயல்பட்டு வருகின்றன, ஆனால் இப்போது இந்த நிறுவனங்களுக்கான விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன,” என்று அவர் கூறுகிறார்.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளும் தொழில்நுட்பத் துறையில் தங்கள் கட்டுப்பாட்டை இப்படித்தான் அதிகரித்து வருகின்றன என்றும் அவர் கூறுகிறார்.

லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்சில் உள்ள வல்லுநரான கேயூ ஜின், சீனாவின் நோக்கம் ‘தொழில்நுட்ப மேலாதிக்கத்தை’ நிறுவி, அதன் மூலம் சர்வதேச தரத்தை எட்டி, சர்வதேசப் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதேயாகும்” என்று விளக்குகிறார்.

வெளிநாட்டு நிறுவனங்களின் பங்கு

நுகர்வோர் சேவையில் அதிகம் ஈடுபடும் இ-காமர்ஸ் அல்லது தொழில்நுட்ப நிறுவனங்களை விட, உத்தி ரீதியாக அதிக மதிப்பு வாய்ந்த குவாண்டம் கணினிகள், குறைக்கடத்தி (செமி கண்டக்டர்) மற்றும் செயற்கைக்கோள் போன்ற துறைகளில் அரசாங்கத்தின் ஆர்வம் அதிகம் உள்ளது.

சீனா.
படக்குறிப்பு,சீன அரசின் ஆர்வம் எந்த துறைகளில்?

சீன நிறுவனங்களில் வெளிநாட்டு நிறுவனங்களின் ஈடுபாட்டைக் கட்டுப்படுத்த அரசு விரும்புகிறது என்று சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

ஆலோசனை நிறுவனமான மார்கம் பெர்ன்ஸ்டீன் & பிஞ்சக் (MBP) இணைத் தலைவர் ட்ரூ பெர்ன்ஸ்டீன், சீனாவில் நிகழும் மாற்றங்கள், இருக்கும் தொழில்நுட்பத்தை அப்படியே பயன்படுத்துவதைவிட, இந்தத் துறையில் தங்களைப் புலிகளாகக் காட்டிக்கொள்ள விரும்புவதுபோல் தோன்றுகிறது என்று கூறுகிறார்.

இது தவிர, 2025ம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் திட்டமும் ஒரு பிரச்னையாகிறது. சீன அரசாங்கம் தனது பொருளாதாரத்தின் பெரும் பகுதிக்கு சட்டங்களையும் விதிமுறைகளையும் கண்டிப்பாக அமல்படுத்த விரும்புகிறது என்று கூறப்படுகிறது.

சிங்கப்பூரில் உள்ள வணிக செய்தியாளர் பீட்டர் ஹாஸ்கின்ஸ், புதிய விதிமுறைகளின் நோக்கம் தொழில்நுட்பத் துறைக்கும் அப்பாற்பட்டதாக இருக்கும் என்று கூறுகிறார். இது தேசியப் பாதுகாப்பு மற்றும் வர்த்தக ஏகபோகங்களின் அம்சங்களையும் உள்ளடக்கியிருக்கும் என்று கூறப்படுகிறது.